சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான ‘ஜெயிலர்’ படம் உலகம் முழுவதும் ரூ.650 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த்தின் அடுத்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, ஜெய்பீம் இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்குகிறார். படத்திற்கு தற்காலிகமாக ‘தலைவர் 170’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் சூப்பர் ஸ்டாருடன் அமிதாப் பச்சன், ஷர்வானந்த், மஞ்சு வாரியர் மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோர் நடிக்க இருப்பதாகவும், அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
இது உறுதியாகும் பட்சத்தில் ரஜினிகாந்துடன் அனிருத் இணையும் நான்காவது படமாகும். நடிகர்கள் மற்றும் தொழிநுட்ப கலைஞர்கள் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும், சமீபத்தில் சென்னையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது.
இதில் ரஜினிகாந்த் மற்றும் ‘தலைவர் 170’ படத்தின் குழுவினர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் பூஜையின் படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளிவரும் பட்சத்தில் படக்குழுவினர் பற்றிய முழுவிவரங்கள் தெரியவரும். அதே சமயத்தில் ‘தலைவர் 170’ படத்தின் டைட்டில் , நடிகர்கள் மற்றும் குழுவினரை உறுதிப்படுத்தும் புதிய போஸ்டர் விரைவில் தயாரிப்பாளர்களால் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,
‘தலைவர் 170’ படத்திலும் ரஜினிகாந்த் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், ஒரு நிஜ சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு படத்தின் கதை அமைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ப்ரீ புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில், படப்பிடிப்பு செப்டம்பர் மூன்றாவது வாரத்தில் இருந்து சென்னையில் தொடங்கவுள்ளது.
‘ஜெயிலர்’ வெற்றிக்கு பின் ரஜினிகாந்த், ‘ஜெய் பீம்’ வெற்றிக்கு பின் டி.ஜே.ஞானவேல் இணையும் படம் என்பதால் ‘தலைவர் 170’ படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. டி.ஜே.ஞானவேல் கதை அம்சம் கொண்ட சமூக நலன் சார்ந்த படம் எடுப்பவர். அவருடன் சூப்பர் ஸ்டார் இணைத்திருப்பதால் ஒரு புதுமாதிரியான கதைக்களத்தோடு அதேசமயத்தில் ரஜினியின் மாஸ்க்கு தகுந்த மாதிரியான படமாக இருக்கும் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.