மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வெளிவந்த திரைப்படம் துப்பறிவாளன். இப்படம் வெளியாகி இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து அதை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.
விஷாலின் திரையுலக வாழ்க்கையில் இப்படம் ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. ஹாலிவுட்டில் வெளிவந்த ஷெர்லாக் ஹோல்ம்ஸ் திரைப்படத்தை நழுவியே இப்படத்தின் விஷால் கதாபாத்திரமும், பிரசன்னா கதாபாத்திரமும் வடிவமைக்கப்பட்டது. ஹாலிவுட்டில் ஷெர்லாக் ஹோல்ம்ஸின் கதாபாத்திரத்தை போல விஷாலின் கணியன் பூங்குன்றன் கதாபாத்திரமும் , ஜான் வாட்சன் கதாபாத்திரத்தை போல பிரசன்னாவின் மனோகர் கதாபாத்திரமும் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
இப்படத்தில் வில்லனாக நடிகர் வினய் நடித்திருப்பார். வினயின் ரிச்சர்ட்ஸன் கதாபாத்திரம் ரசிகர்கள் பாராட்டும் விதத்தில் அமைந்தது. பொதுவாக வித்யாசமான கதைக்கரு உடைய திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்கள் ஏற்பார்களா என்ற சந்தேகம் எப்பொழுதுமே இருந்து வரும் நிலையில், இப்படத்தின் வெற்றி அந்த கேள்விக்கு பதில் கூறும் வகையில் அமைந்தது.
மேலும் இப்படத்தில் அணு இம்மானுவேல், ஆண்ட்ரியா, பாக்யராஜ், சிம்ரன், ஜான் விஜய் ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்திருப்பர். இப்படத்தில் தனியாக பாடல்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அரோல் கொரெல்லியின் பின்னணி இசை கதைக்கு உயிரூட்டும் விதத்தில் அமைந்தது.
மிஷிக்கின் இயக்கும் திரைப்படம் என்றாலே மாறுப்பட்ட கதைக்களத்துடன் விறுவிறுப்பான திரைக்கதையும் அமைந்திருக்கும். அந்த வகையில் இப்படத்தின் திரைக்கதை நகர்வு தியேட்டரில் படம் பார்க்கும் அனைவரையும் விறுவிறுப்பின் உச்சத்தில் வைத்திருந்தது என்றே கூறலாம். இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் இணையத்தில் #3YrsOfBBThupparivaalan என்ற டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.