கொரோனோ காலகட்டத்தில் OTT மக்களிடையே பிரபலமான பிறகு சில காலங்களுக்கு சினிமா ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்கள் அல்லது உச்ச நட்சத்திரங்களின் படங்களை மட்டும் திரையரங்கிற்கு சென்று பார்க்கும் வழக்கத்தை வைத்திருந்தனர் . அதுபோன்ற சில படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருந்தாலும் பல முன்ணனி நடிகர்களின் திரைப்படங்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றமே அளித்தது.
பிறகு ஒரு திரைப்படம் வெளிவந்து, அதற்கு வரும் விமர்சனங்களை பொறுத்து திரையரங்கில் படம் பார்க்க ஆரம்பித்தனர். அப்படி தான் முன்னணி நடிகர்கள் இல்லாத நிறைய தரமான நல்ல படங்கள் திரையரங்குகளில் பெரிய வெற்றி பெற்றது. வேற்று மொழி நல்ல படங்களுக்கு கூட தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இப்பொழுது நல்ல திரைப்படம் எதுவாக இருந்தாலும் திரையரங்குகளில் அதனை வெற்றி பெற செய்ய மக்கள் தயாராக உள்ளனர். அதேவேளையில் நடிகர்களும், இயக்குனர்களும் மக்களுக்கு பிடித்த படங்களை கொடுக்க வேண்டும் என்று முனைப்புடன் இருக்கின்றனர். குறிப்பாக சில உச்ச நட்சத்திரங்கள் தங்களது முந்தைய படங்களில் ஏற்பட்ட சறுக்கல்களை சரி செய்யும் நோக்கத்தில் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர்.
இருந்தாலும் 2023 முற்பகுதியில் வெளிவந்த முன்னணி நடிகர்களின் படங்கள் எதுவும் எதிர்பார்த்த அளவுக்கு அனைத்து தரப்பினரையும் திருப்திபடுத்தவில்லை. ரசிகர்களும் தனது ஆஸ்தான நடிகரிடம் இருந்து அனைவரும் கொண்டாடும் வகையில் Blockbuster படம் வந்து விடாதா என்று எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்நிலையில் அடுத்தடுத்து வரும் மாதங்களில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வரிசையாக வெளிவர தயாராக உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ’ஜெயிலர்’ ஆகஸ்ட் 10 அன்றும், தளபதி விஜயின் ’லியோ’ அக்டோபர் 19 அன்றும், சிவகார்த்திகேயனின் ’மாவீரன்’ ஜூலை 14 அன்றும் வெளியாக உள்ளது.
மேலும் தனுஷின் ’கேப்டன் மில்லர்’ , கமலின் ’இந்தியன் -2’ , சிவகார்த்திகேயனின் ’அயலான்’, விக்ரமின் ’துருவ நட்சத்திரம்’ போன்ற படங்களும் இந்த ஆண்டு வெளியாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானின் தவான், பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் சலார் போன்ற பிற மொழி படங்களுக்கும் சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது .
வரிசையாக முன்னணி நடிகர்களின் படம் வெளிவர உள்ளதால், திரையரங்குகளில் ரசிகர்களுக்கு பெரிய கொண்டாட்டம் காத்திருந்தாலும் அனைத்து தரப்பையும் திருப்தி செய்யும் அளவிற்கு படங்களை நடிகர்கள் கொடுப்பார்களா? விட்ட இடத்தை சில நடிகர்கள் பிடிப்பார்களா? தன்னுடைய முந்தைய வசூல் சாதனையை சில நடிகர்கள் முறியடிப்பார்களா? எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார்களா? என்பதையெல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.