சூரரை போற்று திரைப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் “வாடிவாசல்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சூர்யாவின் பிறந்தநாள் பரிசாய் அவரது ரசிகர்களுக்கு வெளியிடப்பட்டது. ஏற்கனவே சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படத்தின் “காட்டு பயலே” பாடலின் டீசர் அவரது பிறந்த நாளுக்காக பிரத்தியேகமாக வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அசுரன், வடசென்னை, பொல்லாதவன், விசாரணை போன்ற மாபெரும் வெற்றிப் படங்களை இயக்கிய வெற்றிமாறன் தற்போது சூர்யாவை வைத்து வாடிவாசல் திரைப்படத்தை இயக்கி வருகிறார். வெற்றிமாறனின் படங்களுக்கான தனி ரசிகர்கள் இருக்க, சூர்யாவின் ரசிகர்களும் தற்போது ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இப்படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ். தாணு அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் சூர்யாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் இந்தப் போஸ்டர் உடன் சேர்ந்து சூர்யாவுக்கு தான் எழுதிய வாழ்த்து கடிதத்தையும் அவர் பதிவிட்டுள்ளார்.
அந்த கடிதத்தில் “தம்பி, இன்று உங்கள் பிறந்தநாள் என்றும் அது சிறந்த நாள் இனிய இந்நன்னாளில் எல்லா வளமும், நலமும் பெற்று தேகபலம், பாத பலம், ஆயுள் பலம் பெற்று வாழிய பல்லாண்டு” என தனது அன்பான வாழ்த்துக்களை சூர்யாவுக்கு தன் கைப்பட எழுதி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படத்திற்கு இசை அமைத்த ஜி.வி. பிரகாஷ் குமாரே வாடிவாசல் திரைப்படத்திற்கும் இசையமைக்கவுள்ளார். இப்படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பல பிரபலங்களும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து சூர்யாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
வெற்றிமாறன் படங்கள் என்றாலே கதாநாயகனுக்கு வித்தியாசமான தனித்துவமான கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும். அந்த வகையில் வாடிவாசல் திரைப்படத்தில் எப்படிப்பட்ட கதாபாத்திரத்தை சூர்யாவிற்கு வெற்றிமாறன் வடிவமைத்தார் எனும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்படத் தொடங்கிவிட்டது.
வாடிவாசல் திரைப்படத்தின் அப்டேட் சூர்யா ரசிகர்களுக்கு மற்றொரு விருந்தாய் அமைந்தது என்றே கூறலாம். இந்த போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே இணையத்தில் #VaadivasalFirstLook #Vaadivasal என #1 ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று மற்றும் வாடிவாசல் திரைப்படங்கள் மாபெரும் வெற்றியடைய சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.