பாடலாசிரியர் வைரமுத்து தனது 67வது பிறந்தநாளை இன்று (ஜூலை 13) கொண்டாடுகிறார். வைரமுத்துவின் கற்பனைத் திறனை கண்டு வியக்காதவர்கள் யாரும் இருக்கவே மாட்டார்கள்.
சென்னையில் உள்ள பச்சையப்பா கல்லூரியில் முதுகலைப் பட்டம் வாங்கிய வைரமுத்து 1980இல் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த நிழல்கள் திரைப்படம் தான் வைரமுத்துவிற்கு பாடலாசிரியர் என்னும் அடையாளத்தை கொடுத்தது.
வைரமுத்து தனது 40 வருட திரைப்பயணத்தில் 7 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பாடல்களையும், கவிதைகளையும் எழுதியுள்ளார். அதுமட்டுமின்றி இந்தியாவிலேயே அதிக தேசிய விருதுகள் பெற்ற கவிஞர் எனும் பெருமையும் வைரமுத்துவையே சாரும்.
நிழல்கள் திரைப்படத்தில் இளையராஜா இசையில் அமைந்த “இது ஒரு பொன்மாலைப் பொழுது” பாடல்தான் வைரமுத்துவின் முதல் சினிமா பாடல். இப்பாடலை எஸ். பி. பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார்.
இளையராஜா-வைரமுத்து கூட்டணி இதில் வெற்றி அடைந்ததால் அலைகள் ஓய்வதில்லை, புதுமைப்பெண், ஒரு கைதியின் டைரி என பல படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை இந்தக் கூட்டணி அமைத்தது. அலைகள் ஓய்வதில்லை படத்தில் பாடல்கள் எழுதியதற்காக தமிழக மாநில அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை வைரமுத்து வென்றார். 1985இல் வைரமுத்து முதன்முதலில் இயக்குனர் மணிரத்னத்துடன் “இதயக்கோவில்” திரைப்படத்தில் கைகோர்த்தார். அதன்பின் ஏ. ஆர். ரகுமான்– வைரமுத்து கூட்டணி ஒரு பெரிய வெற்றி கூட்டணியாக பேசப்பட்டது.
சினிமா பாடல்கள் எழுதுவது மட்டுமின்றி வைரமுத்து தன் அழகிய கவிதைகளை புத்தகமாகவும் வெளியிட்டுள்ளார். குறிப்பாக கருவாச்சி காவியம், மூன்றாம் உலகப்போர் போன்ற புத்தகங்கள் வைரமுத்துவிற்கு நல்ல வரவேற்பை மக்களிடையே பெற்றுத் தந்தது.
முதல் மரியாதை, ரோஜா, பவித்ரா, சங்கமம், கன்னத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை ஆகிய படங்கள் வைரமுத்துவிற்கு தேசிய விருதுகள் வாங்கி தந்த படங்கள். அலைகள் ஓய்வதில்லை, கருத்தம்மா, பாம்பே, சங்கமம், அந்நியன், பெரியார் ஆகிய படங்கள் வைரமுத்துவிற்கு தமிழக மாநில அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை பெற்றுத் தந்த படங்கள்.
இந்த விருதுகள் மட்டுமின்றி வைரமுத்துவிற்கு 2003-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் 2014 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதையும் இந்திய அரசாங்கம் வழங்கி கௌரவித்தது. தமிழக அரசு வழங்கும் கலைமாமணி மற்றும் பாவேந்தர் விருதுகளையும் வைரமுத்து பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மூன்று பல்கலைக்கழகங்கள் வைரமுத்துவிற்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.
இணையத்தில் #HBDVairamuthu என்ற ஹாஷ் டாஃகுடன் ரசிகர்களும் பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு சூரியன் FM சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்…