காவல் தெய்வங்களாய், பிணி தீர்க்கும் நம்பிக்கையாய் சிறு குறு மக்களும் நாட்டுப்புறங்களில் இன்றளவும் நம்பப்படும் நம்பிக்கை தான் சிறு தெய்வங்கள். இந்த தெய்வங்கள் பரந்து பட்ட தொடர்பில்லாமல் கிராமங்களையே இருப்பிடமாகக் கொண்டு, நாட்டுப்புற மக்களின் நீங்காத உறவு கொண்டு மரபு மாறாமல் விளங்குகின்றன.
வணங்கினால் நன்மையும் வணங்காவிட்டால் தீமையும் பயப்பன என்ற ஆழ்ந்த நம்பிக்கை காரணமாகப் பாமர மக்களால் இவை வழிபடப்பட்டு வருகின்றன. சிறு தெய்வங்கள் ஆண் பெண் தெய்வங்களாக மட்டுமல்லாமல் வீட்டுத் தெய்வம், குல தெய்வம், இன தெய்வம், ஊர் தெய்வம், வெகுசன தெய்வம் என பல வகைகளாக வணங்கப்படுகின்றன.
அதில் வீட்டு தெய்வம் என்பது பழங்காலத்தில் தங்களுக்குள் வழிகாட்டியாய் விளங்கி, வாழ்ந்து மறைந்த முன்னோர்களையோ, கன்னியாக இருந்த நிலையில் வாழ்ந்து மறைந்த பெண்களையோ, தங்களின் வீட்டுத் தெய்வமாக வழிபடும் மரபு காணப்படுகிறது.
இது பெரும்பாலும் பெண் தெய்வமாகவே இருக்கும். இதனை வீட்டுச் சாமி, குடும்பத் தெய்வம், கன்னித் தெய்வம், வாழ்வரசி என்றும் கூறுவார்கள். இந்த வீட்டு சாமிகளை தை, ஆடி மாதங்களில் தான் பெரும்பாலும் வழிபடுவார்கள். இந்த வழிபாடுகளில் பெண் தெய்வமா இல்லை ஆண் தெய்வமா என்பதை பொறுத்து அவரவர்களுக்கு பிடித்தமான பொருள்களையும் வைத்து வழிபடுவார்கள்.
பெரும்பாலும் இதில் பெண் தெய்வங்களையே வழிபடுவார்கள். கன்னி பெண்களாக இறந்தவர்கள், கர்ப்பிணி பெண்களாக இறந்தவர்கள், தாமாக முன்வந்து உடன்கட்டை ஏறியவர்கள், சிறு வயதில் எதிர்பாராமல் நோயுற்று இறந்தவர்கள், குறிப்பாக பெரியம்மை வந்து இறந்தவர்களையும் கடவுளாகவும் காக்கும் தெய்வமாகவும், வழிபடுவார்கள்.
ஒரு புதிய செயலை தொடங்கும் போதும் முன்னோர்களை நினைத்து துடங்குவதை இன்றளவும் வழக்கமாக கொண்டுள்ளனர்கள்.
மாசி மகம்,தை அம்மாவாசை நாள்களில் இறந்தவர்களுக்கான காரிய சம்பிரதாயங்களில் முன்னோர்களை முதன்மை படுத்திய வழிபாடுகளே இருக்கும் . இன்றும் முன்னோர்கள் முன்னின்று வழிகாட்டுவதாக நம்புகிறார்கள் .