இவரின் கதைக்களங்கள் வெவ்வேறு பாதையில் சென்றாலும் இவர் இயக்கிய கதைகள் அனைத்தும் சென்றடைந்தது வெற்றிப் பாதையையே.
தமிழ் திரையுலகில் திரைக்கதை எழுத்தாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கியவர் இன்று தமிழ் சினிமாவின் தலை சிறந்த இயக்குநராக வலம் வரும் நம் வெற்றி மாறனின் வெற்றிக் கதை.
1999 ஆம் ஆண்டு காதல் நேரம் என்ற நிகழ்ச்சியில் உதவி இயக்குனராக பணியாற்றினார். திரையுலகில் காதல் வைரஸ் என்ற திரைப்படத்தின் உதவி இயக்குனராக தனது முதல் படியை எடுத்து வைத்தார்.
2007 ஆம் ஆண்டு ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ் நடிப்பில் பொல்லாதவன் திரைப்படத்தை இயக்கி மக்கள் மனதில் தனக்கான அடித்தளத்தை அமைத்தார், பொல்லாதவன் படத்திற்கு பின்னர் பல்சர் பைக் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது.
இப்படத்தை இயக்கும்போது தன் ஆரோக்கியத்தையும் பொருட்படுத்தாமல் தன் ஆற்றலை திரை உலகிற்கு வெளிப்படுத்தினார். பொல்லாதவன் படத்தை இயக்கும் போது ஒரு நாளுக்கு 170 முதல் 180 சிகரெட்டுகளை பிடிப்பேன் எனவும், அதை அவர் உதவியாளர் சொன்ன பின்பே தெரியும் எனவும் கூறி இருக்கிறார்.
13 வயதில் சிகரெட் பிடிக்க ஆரம்பித்து 33 வயதில்தான் நிறுத்தியுள்ளார். வாரணம் ஆயிரம் படம் பார்த்த பின்பே புகை பிடிப்பதை நிறுத்தி விடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார். 2011 ஆம் ஆண்டு இவர் இயக்கிய ஆடுகளம் திரைப்படம் 58 வது தேசிய விருது விழாவில் 6 தேசிய விருதுகளை தட்டிச் சென்றது.
திரையுலகில் பல கடுமையான போட்டிகளுக்கு மத்தியில் இவரின் ஆடுகளம் இவருக்கு ஒரு தனி களத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. வாழ்க்கையில் யாரையும் சார்ந்து வாழ்ந்து விடக் கூடாது . இறுதி வரை படிப்பு மட்டுமே நம்மிடம் இருந்து யாராலும் எடுத்து செல்ல முடியாதது என்ற வலிமையான கருத்தை அசுரன் திரைப்படம் மூலமாக அழுத்தமாக சொன்னார்.
விசாரணை, வடசென்னை போன்ற திரைப்படங்கள் இவருக்கு தமிழ் திரையுலகில் தலை சிறந்த இயக்குனர் என்ற பெயரை வாங்கிக் கொடுத்தது. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சிறப்பாகவும் சிந்திக்க வைக்கும் வகையிலும் திரைப்படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் தன்னிகரில்லா தலை சிறந்த இயக்குனர் வெற்றிமாறனுக்கு இன்னும் பல வெற்றிகள் வந்து குவிய வாழ்த்துகிறது சூரியன் FM.