உலகத்திலேயே கஷ்டமான விஷயம் மத்தவங்கள சிரிக்க வைக்கிறது, அதை விட கஷ்டம் அவர்களை சிந்திக்க வைக்கிறத., இது இரண்டையும் மிக சுலபமா செய்து சாதித்தவர் சின்னக் கலைவாணர் விவேக் அவர்கள்.
தமிழகத்தில் நகைச்சுவை மூலமாக மக்களிடம் விழிப்புணர்வு கொண்டு வந்ததில் கலைவாணருக்கும், சின்னக் கலைவாணருக்கும் பெரும் பங்குண்டு. கே.பாலச்சந்தர் என்னும் ஆலமரத்தின் விழுதுகளில் முக்கியமானவர் இந்த ஜனங்களின் கலைஞன் விவேக், நெல்லை சங்கரன் கோவிலில் பிறந்து மதுரை அமெரிக்கன் கல்லாரியில் பட்டம் படித்து, சென்னையில் அரசு வேலை கிடைத்தும் சினிமா மீது கொண்ட தீரா பற்றால் திரைத்துறைக்கு வந்தவர்.
வெறுமனே அடுத்தவரை உடற்கேலி செய்து நகையுண்டாக்கவில்லை இந்த விவேகானந்தன், யாரை பற்றி குறை சொல்கிறோமோ அவர்களையே வயிறு குலுங்க சிரிக்க வைத்து சிந்திக்க செய்தவர் அவர்.
ஒரு படத்தில் லஞ்சம் வாங்கும் அதிகாரியின் கையை நூதனமாக 8 போட்டு வெட்டியிருப்பார், மற்றொரு படத்தில் காவல் துறை உயரதிகாரிகளை கர்பமான பெண்ணோடு ஒப்பிட்டு பேசியிருப்பார். இவர் இதை அனைவரும் ரசிக்கும் படி சிரிப்பலைகளோடு சிந்திக்க செய்திருப்பார்.
அவரின் இந்த குணம் தான் பல்வேறு ஜாம்பவான்களை அவர் பேட்டி எடுக்க காரணமாக இருந்தது. முன்னாள் ஜனாதிபதி அன்பு அப்துல் கலாம் ஐயா அவர்கள் மதிக்கக் கூடிய கலைஞனாக உருவெடுத்தார். அவர் ஆலோசனைப்படி, கிட்டத்தட்ட 35 லட்ச மரக்கன்றுகளை நட்டு விட்டு சென்றிருக்கிறார். நம் அனைவரின் அடுத்த தலைமுறையும் அவருக்கு கடமைப்பட்டு இருக்கிறது.
விவேக் அவர்களின் திரைப்படங்களை விட அவருடைய வித்தியாசமான மேடை பேச்சுக்கள் அதிக கவனமீர்க்கும். ஒரு முறை முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரை ஓய்வறியாமால் உழைப்பவர் என்றும் பாராட்டுவதற்கு “SUN’க்கு ஏது SUNDAY” என்பார். முத்தமிழ் அறிஞர் மேடையிலேயே விழுந்து விழுந்து சிரிப்பார். மற்றொரு மேடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை “இவர் சிவனோட ஒரு sitting உம் போடுறாரு, எமனோட ஒரு கட்டிங்கும் போடுறாரு” என்பார். ரஜினி உட்பட மொத்த அரங்கிலும் சிரிப்பலை.
நவயுக பாரதியாக திகழ்ந்த இந்த கலைஞன், பாரதியை போலவே பாதியிலே விட்டுச் சென்றுவிட்டார். சிறிது காலம் சிரிக்க வைத்துவிட்டு வாழ்க்கை முழுவதும் சிந்திக்க வைத்த சின்னக் கலைவாணரின் பிறந்த நாளில் ஒன்றை புரிந்து கொள்வோம்,
நம் வாழ்வு, எத்தனை நாள் வாழ்ந்தோம் என்பதிலில்லை, எப்படி வாழ்ந்தோம் என்பதில் தானே இருக்கிறது, அதற்க்கு விவேக் சொல்லிவிட்டு சென்ற பாடம் ரொம்ப சிம்பிள் “ஏலே Don’t Worry Be Happy..!”
Article by
Roopan Kanna VP
Associate Producer,
Suryan FM, Salem