உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகிறது. குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்த சாதனை சாத்தியமாகியுள்ளது.
தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில் யாரெல்லாம் உடல் உறுப்பு தானம் மற்றும் உடல் தானம் செய்யலாம் என்பது குறித்து பார்ப்போம். மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை குடும்ப உறுப்பினர்கள் முடிவெடுத்து தானம் செய்யலாம். அவர்கள் உடலில் இருந்து சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல், கணையம், இரைப்பை, சிறுகுடல், குரல்வளை, கருப்பை. கண்கள், எலும்புகள், நரம்புகள், தமனிகள், கை கால் விரல்கள், தோல் உள்ளிட்டவற்றை தானமாக பெறலாம்.
மூளைச்சாவு அடைந்தால் மட்டுமே இருதயம், நுரையீரம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளை தானம் செய்ய முடியும். மரணித்தவர்களிடமிருந்து இந்த உறுப்புகளை தானம் செய்ய முடியாது. அது போல் உயிரோடு இருப்பவர்களும் உடல் உறுப்புகளை தானம் செய்யலாம். அப்படித்தான் சிறுநீரகம் போன்ற உறுப்புகள் தானம் செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் உயிருடன் இருக்கும் போதே நம் உடலை தானம் செய்வதாக எழுதிக் கொடுக்கலாம்.
நாம் இயற்கையாக மரணித்தால் நம் உடலிலிருந்து கண்கள், இதய வால்வுகள், தோல்கள், எலும்புகள், நரம்புகள் உள்ளிட்டவற்றை தானம் செய்வார்கள். அதுமட்டுமின்றி உடல் தானம் செய்தவர்களது உடல் மருத்துவ மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கவும், உடற்கூறாய்வு ஆராய்ச்சி மற்றும் இன்னும் சில ஆராய்ச்சிகளுக்கும் உதவுகிறது.
நம் உடலை நாம் தானம் செய்ய அரசு மருத்துவமனைக்கு சென்று அதற்கான படிவத்தை வாங்கி பூர்த்தி செய்து, அதற்கு தேவையான சான்றிதழ்களை கொடுத்து கையொப்பம் இட்டு அதனை சமர்ப்பிக்க வேண்டும். முக்கியமாக இதை நம் வீட்டில் கூற வேண்டும். தமிழகத்தில் இறக்கும் முன் உடல்தானம் செய்தவர்களின் இறுதிச்சடங்கு இனி அரசு மரியாதையுடன் நடைபெறும். இதுவே அரசு தரப்பிலிருந்தும், மக்கள் தரப்பிலிருந்தும் அவர்களுக்கு கிடைக்கும் உரிய அங்கீகாரம்.