நடப்பு 2023 ICC ஆண்கள் ODI உலகக்கோப்பையில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில் ஸ்ரீலங்காவிற்கு எதிரான வெற்றியின் மூலம் கிட்டத்தட்ட அரையிறுதிக்குள் நுழைந்தது நியூசிலாந்து. அரையிறுதியில் இந்தியாவுடன் நியூசிலாந்து மோதுவது உறுதி என்ற நிலையில், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு சாத்தியமில்லாத ஓர் வாய்ப்பு உள்ளது.
தனது கடைசி லீக்கில் இங்கிலாந்துடன் மோதும் பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தால் 274 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்த வேண்டும், அதாவது பாகிஸ்தான் முதல் பேட்டிங்கில் 400 ரன்கள் அடித்து 113 ரன்னுக்குள் இங்கிலாந்தை சுருட்ட வேண்டும், ஒருவேளை 300 ரன்கள் அடித்தால் இங்கிலாந்தை 13 ரன்களில் ஆல் அவுட் செய்ய வேண்டும். இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்யும் பட்சத்தில் நிர்ணயிக்கப்படும் ரன்களை பாகிஸ்தான் 2.3 ஓவருக்குள் எடுத்து வெற்றி பெற வேண்டும்.
எனவே பாகிஸ்தான் இங்கிலாந்துடன் முதல் பேட்டிங் செய்து 450 க்கு மேல் இமாலய ஸ்கோர் எடுத்து இங்கிலாந்தை 274 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றால் மட்டுமே இந்தியாவுடன் பாகிஸ்தானால் அரைஇறுதியில் விளையாட முடியும். அதே சமயம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் முதலில் பேட் செய்தால் மட்டுமே அரையிறுதியில் விளையாட முடியும், அதுவும் அந்த அணி தென்னாப்பிரிக்காவை 438 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும்.
அதிசயம் எதாவது நிகழ்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே அரையிறுதி போட்டி நடக்குமா என்பது வரும் சனிக்கிழமை நடைபெறும் இங்கிலாந்து பாகிஸ்தான் கடைசி லீக் ஆட்டத்தின் Toss-ல் தெரிந்து விடும்.