Specials Stories

தூக்கம் எவ்வளவு முக்கியம் தெரியுமா?

World-Sleep-Day

ஒரு நாளுக்கு குறைந்தது 6 முதல் 7 மணி நேரம் தூங்க வேண்டும். இன்னும் சிலருக்கு 8 மணி நேரம் தூங்கினால் தான் நன்றாக இருக்கும். ஆனால் சிலருக்கு தூக்கமே வராது. குறைந்த நேரம் மட்டும் தூங்கி விட்டு விடிய விடிய முழித்துக் கொண்டிருப்பர். அது அவர்களின் உடல்நலனை எந்த அளவு பாதிக்கும் என அப்போது தெரியாது.

தூக்கம் குறைவதால் ஏற்படக் கூடிய சில முக்கியமான பிரச்னைகள் குறித்து தற்போது பார்ப்போம்.

  1. அமெரிக்காவில் தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளுக்கான காரணம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், விபத்துகளுக்கான பெரும்பான்மை காரணங்களில் ஒன்றாக தூக்கமின்மை இடம்பிடித்துள்ளது. சம்மந்தப்பட்ட ஓட்டுநர்கள் பெரும்பாலும் முழுமையாக தூங்காமல் இருந்திருப்பதே விபத்துகளுக்கான காரணம் என ஆய்வு முடிவுகளில் கண்டுபிடித்துள்ளனர். சரியான தூக்கமின்றி வாகனம் ஓட்டுவதும், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதும் கிட்டத்தட்ட ஒன்றே.
Sleep

2. தூக்கமின்மையுடன் ஒரு விஷயம் செய்யும் போது கவனமாகவோ, முனைப்பாகவோ நம்மால் இருக்க முடியாது. இது நம்முடைய கற்றல் திறனையும், சிந்திக்கும் ஆற்றலையும் பாதிக்கும். இத்தகைய கவனமின்மையே சாலை விபத்துகளுக்கும் காரணமாக அமையலாம். வேலைக்கு செல்பவர்கள் அவர்களுடைய பணியில் முழு கவனம் செலுத்த முடியாமல் போகும். அதுமட்டுமின்றி மன உளைச்சலுக்கும் இது வழிவகுக்கும். மன உளைச்சலுக்கான ஆரம்பப் புள்ளியே தூக்கமின்மை தான்.

3. தூக்கமின்மை நமது சருமத்தை பாதிக்கக் கூடிய முக்கிய காரணிகளுள் ஒன்று. தூக்கமின்மையின் போது நமது உடல் Stress Hormones-ஐ வெளியேற்றத் தொடங்குகிறது. இந்த Stress Hormone நமது சருமத்தை பளபளவென வைத்துக் கொள்ளக்கூடிய collagen எனும் தசைநார்களை வலுவிழக்கச் செய்கிறது. இதன் காரணமாக நமது தோல் சுருக்கமடைந்து வயதானவர்களுடைய தோல் போல காட்சியளிக்கும். இதுவே கண்களை சுற்றி ஏற்படும் சுருக்கத்திற்கும் காரணமாக அமையும். மேலும் தூக்கமின்மையால் கருவளையங்களும் உண்டாகும்.

Sleep

4. தூக்கம் குறைவதால் நமது உடலில் Human growth hormones உற்பத்தி தடைபடுகிறது. தூக்கமின்மையின் போது எப்படி Stress Hormones-ஐ நமது உடல் வெளியேற்றுகிறதோ, அதே போல் நமக்குத் தேவையான போதிய அளவு உறக்கத்தை நாம் எடுத்துக் கொள்ளும் போது நமது உடல் குறைந்த அளவிலான Human growth hormones-ஐ வெளியிடுகிறது. சிறுவர்கள் வளர்வதற்கு இந்த ஹார்மோன்கள் உதவக் கூடியது. பெரியவர்களுக்கோ உடல் தசைகளை பெருக்கவும், தோலை தடிமனாக்கவும், எலும்புகளை வலுவாக்கவும் உதவுகிறது.

5. உடல்பருமனும் தூக்கமின்மையால் ஏற்படக் கூடிய பிரச்னைகளுள் ஒன்று. தூக்கமின்மையால் அதிக பசி அல்லது பசியின்மை ஆகிய பிரச்னைகள் எழும். அதிக பசி உண்டாகும் போது நமது உடல் அதிக கார்போஹைட்ரேட் அல்லது அதிக கொழுப்பு அடங்கிய உணவுகளை சாப்பிடத் தூண்டும். இது obesity-க்கு வழிவகுக்கும். மேலும் பருமனாக உள்ளவர்களின் உடல் எடையை குறைப்பதற்கான உடற்பயிற்சிகளில் ‘போதிய தூக்கம்’ என்பது ஒரு முக்கியமான பயிற்சியாக இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Sleep

இதுபோல தூக்கமின்மையால் உடலளவிலும், மனதளவிலும் மேலும் நிறைய பிரச்னைகளும், அவற்றை சார்ந்து அடுத்தடுத்த தொடர் பிரச்னைகளும் ஏற்படக் கூடும். எனவே நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ விரும்புவர்கள் தினமும் சரியாக தூங்கி எழுந்து அதனை ஒரு வழக்கமாக வைத்துக் கொண்டாலே போதுமானது.

அவ்வப்போது தூக்கமின்றி இருப்போர் நம் வாழ்க்கை மற்றும் உணவு முறைகளை சரி செய்து தூக்கத்தை சரி செய்து கொள்ளலாம். ஆனால் தொடர் தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டுள்ளோர் உடனுக்குடன் மருத்துவரை அணுகி பிரச்னையை சரிசெய்வதே நல்லது.

Article By MaNo