சினிமா துறையில் கதைக்களங்கள் வெவ்வேறு பாதையில் பயணித்துக் கொண்டு இருக்கும்போது ஒரு சில கதைக்களங்கள் மட்டுமே பூரிப்பையும், மனதில் நீங்க இடத்தையும் பிடித்துவிடுகிறது. அதுபோன்று ஒரு படம் தான் யாத்திசை. ‘யாத்திசை’ என்றால் ‘தென் திசை’ என்று பொருள், நம் முன்னோர்களின் வாழ்க்கை எவ்வாறு இருந்தது என்ற பல சந்தேகத்திற்கு பதில் சொல்லும் விதமாக இப்படம் அமைந்துள்ளது.
சிறு வயதில் உணவோடு சேர்த்து வீரத்தையும் ஊட்டி வளர்த்த நம் முன்னோர்களை போல சிறு பாலகனுக்கு ஒரு வீரனை பற்றி சொல்லியவாறு படம் தொடர்கிறது, எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த மன்னர்கள் காலத்து படமாக காட்சியளிக்கிறது.
சேரர்கள் , சோழர்களை போரில் வீழ்த்தி பேரரசனாக கொடி நாட்டிய கோச்சடையான் ரணதீரன் என்கிற பாண்டியனை, பின்வாங்கி காட்டில் சோழர்களோடு சேர்ந்து மறைந்திருக்கும் எயினர் என்கிற பழங்குடி மக்களின் தலைவனான “கொதி” வீழ்த்தினாரா போரில் வெற்றி பெற்றாரா என்பது தான் படமாக அமைந்துள்ளது.
ஒரு நேர்காணலில் இப்படத்திற்கு தமிழில் பெயர் சூட்டியதை பற்றி கேட்டபொழுது வெளிநாடுகளில் தயாரிக்கும் படத்திற்கு அவர்கள் மொழிகளில் பெயர் சூட்ட தயங்குவதில்லை. ஆனால் நம் நாட்டில் நம் மொழியில் பெயர் சூட்டினால் ஆச்சரியமாக பார்ப்பதை நிறுத்த வேண்டும் என்று இயக்குனர் தரணி இராசேந்திரன் கூறியது ஒரு நிமிடம் சிந்திக்க வைத்தது.
தமிழ் மீது அவர் கொண்ட காதலும் தமிழ் உணர்வும் அந்த பதிலில் வெளிப்பட்டது. இப்படத்தில் இன்னொரு சிறப்பும் உண்டு, எட்டாம் நூற்றாண்டில் பேசிய தமிழை ஆராய்ச்சி செய்து வசனமெழுதி இன்றைய தமிழில் துணை மொழி (சப்டைட்டில்) போட்ட ஒரே தமிழ்த் திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும்.
இப்படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு புதிய முகமும் அபார திறமையானவர்கள், ஒவ்வொரு காட்சியும் அலங்காரத்தோடும், அலங்காரம் இல்லாமலும் ஒத்திகை பார்த்து எடுக்கப்பட்டதாம். அதனாலேயே இப்படத்தின் காட்சி ஒவ்வொன்றும் சிறப்பாக அமைந்துள்ளது.
இப்படத்தில் காட்சி ஒவ்வொன்றும் முறையாக திட்டம் போட்டு எடுக்கப்பட்டதால் 3 கோடியில் முடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இப்படி வரலாறு சிறப்புமிக்க படத்தை கொடுத்த தயாரிப்பாளரையும் இயக்குனர் தரணி இராசேந்திரனையும் இந்த சிறப்பு நாளில் வாழ்த்துகிறது சூரியன் எப்எம்.