Specials Stories

Yogi Babu எனும் எதார்த்த நகைச்சுவை கலைஞன்!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உருவாகி இருக்கும் யோகிபாபு அவர்கள் இன்று தனது 36- வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

Yogi Babu Birthday Celebration

சிறு சிறு கதாபாத்திரங்களில் டெலிவிஷன் தொடர்களிலும் சினிமாக்களிலும் தனது முகம் காட்டிய யோகிபாபு, யாமிருக்க பயமேன் திரைப்படம் மூலம் பிரபலம் அடைந்தார். அதை தொடர்ந்து வந்த மான் கராத்தே, காக்கா முட்டை போன்ற திரைப்படங்கள் இவரை தமிழ் ரசிகர்களிடம் நகைச்சுவை நடிகராக கொண்டு சேர்த்தது.

பல படங்களில் நகைச்சுவை நடிகராக தனது திறமையை காட்டிய யோகிபாபு, தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து வருகிறார். மான் கராத்தே, காக்கி சட்டை, ரெமோ, Mr. லோக்கல் போன்ற படங்களில் சிவகார்த்திகேயனுடன் இவரின் நகைச்சுவை காட்சிகள் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று தந்தது.

தல அஜித்துடன் வீரம், வேதாளம், விஸ்வாசம், மற்றும் வலிமை படங்களிலும், தளபதி விஜயுடன் மெர்சல், சர்கார் மற்றும் பிகில் படங்களிலும் நடித்துள்ள யோகிபாபு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் தர்பார் படத்திலும் நடித்திருந்தார்.

ஆண்டவன் கட்டளை, கோலமாவு கோகிலா, கோமாளி படங்களில் நகைச்சுவை கலந்த குணச்சித்திர நடிகராக மக்கள் மனதை சென்றடைந்த யோகிபாபு, பரியேறும் பெருமாள், கர்ணன் மற்றும் மண்டேலா படங்களின் மூலம் தன்னை சிறந்த நடிகராகவும் நிருபித்திருக்கிறார்…

நட்பிற்காக சம்பளம் கூட வாங்காமல் நடிப்பது, பழைய நண்பர்களை மறக்காமல் இருப்பது, கஷ்டப்பட்ட காலங்களில் சுற்றி திரிந்த இடங்களை இன்றும் மறக்காமல் இருப்பது, பசியாற்றிய டீ கடையில் இன்றும் டீ குடிப்பது, வாழ்வில் ஏற்றம் வந்தாலும், இறக்கம் வந்தாலும் வந்த நிலை மறவாமல் இருப்பது என பல்வேறு குணங்களை கொண்ட மனிதராக தமிழ் சினிமாவில் மதிக்கப்படுபவர் யோகி பாபு…

Yogi Babu Birthday Celebration

தான் ஏற்கும் கதாபாத்திரங்களை நகைச்சுவை கலந்த யதார்த்த நடிப்பால் மக்களிடம் கொண்டு சேர்க்கும் தமிழ் சினிமாவின் ஆக சிறந்த கலைஞனாக உருவெடுத்து வரும் யோகிபாபு அவர்களுக்கு Suryan FM சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்…

About the author

Santhosh