Cinema News Specials Stories

12 வருடங்களை தொட்ட குசேலன் !!!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வெளிவந்த குசேலன் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைகிறது. இப்படம் மலையாளத்தில் வெளியான “கத பறையும் போல்” எனும் திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.

பொதுவாக சூப்பர்ஸ்டார் திரைப்படங்களில் நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காட்சிகள் அதிகம் அமைந்திருக்கும். ஆனால் குசேலன் படமே நட்பை மையப்படுத்தி தான் எடுக்கப்பட்டிருக்கும். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நயன்தாரா, மீனா, பசுபதி, வடிவேலு, லிவிங்ஸ்டன், மனோபாலா, சோனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பர். குசேலன் திரைப்படம் வெளியானபோது அதுவரை தமிழில் வெளியாகி இருந்த திரைப்படங்களில் மூன்றாவது பெரிய ஓபனிங் கொடுத்த படமாக அமைந்தது.

இப்படத்தில் கதையின் நாயகனாக பசுபதி நடித்திருப்பார். சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் கௌரவத் தோற்றத்தில் மட்டுமே இப்படத்தில் நடித்து இருப்பார். ஏழைக்குடும்பத்தில் இருக்கும் பசுபதியின் சிறுவயது நண்பனாக இருந்த ரஜினி திரையுலகின் சூப்பர் ஸ்டாராக உருவெடுத்திருப்பது போல இப்படம் அமைந்திருக்கும். பெரிய நடிகரானவுடன் தனது நட்பை ரஜினி மறந்திருப்பாரோ என்ற சந்தேகம் பசுபதிக்கு எழவே, ஒருபோதும் கடந்து வந்த பாதையையும் கடந்து வந்த நட்பையும் சூப்பர் ஸ்டார் மறக்கவில்லை என்பதை உணர்த்தும் வகையில் இப்படத்தின் கிளைமாக்ஸ் அமைந்திருக்கும்.

இப்படத்தில் ஜி.வி பிரகாஷ் இசையில் அமைந்த “சினிமா சினிமா” பாடல் 75 ஆண்டு கால தமிழ் சினிமாவுக்கு அர்ப்பணிப்பு பாடலாக அமைந்திருக்கும். ஒரு மனிதனின் வாழ்வில் நட்பு எவ்வளவு முக்கியமானது நட்பினால் ஒரு மனிதன் எவ்வளவு சாதிக்க முடியும் என்பதை குசேலன் திரைப்படம் உணர்த்தியிருக்கும். வைகைப்புயல் வடிவேலுவின் காமெடிகள் அனைத்தும் இப்படத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் அமைந்திருந்தது.

இப்படத்தில் அமைந்த சினிமா சினிமா பாடலில் நடிகர்கள் சூர்யா, தனுஷ், குஷ்பூ, சினேகா, ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் தோன்றுவர். இப்படம் ஒரே சமயத்தில் தமிழிலும் தெலுங்கிலும் படமாக்கப்பட்டது. தெலுங்கு மொழியில் “கதாநாயகுடு” எனும் பெயரில் வெளியானது.

இப்படம் வெளியாகி 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இப்படம் குறித்த பதிவுகளை இணையத்தில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.