‘கோலிவுட் பருத்திவீரன்’ கார்த்தி !!!

தமிழ் சினிமாவில் உள்ள திறமையான நடிகர்களுள் ஒரு முக்கியமான நடிகரான கார்த்தி வெள்ளித்திரையில் தடம் பதித்து இன்றுடன் (பிப்ரவரி 23) 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை கார்த்தியின் ரசிகர்களும், பொதுவான சினிமா ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் பல வாழ்த்துப் பதிவை பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர்.

2007-ஆம் ஆண்டு இயக்குனர் அமீரின் பருத்தி வீரன் திரைப்படம் மூலம் கார்த்தி கோலிவுட் உலகில் தன் அடையாளத்தை மக்கள் மனதில் பதிய வைக்கத் தொடங்கினார். ஆனால் அதற்கு முன்னரே கார்த்தி இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். பருத்திவீரன் திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்ததால் கார்த்தி மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட தொடங்கியது.

Kaithi Photo

2007-ஆம் ஆண்டிற்கு பிறகு இரண்டு வருடங்கள் கார்த்தியின் எந்த படங்களும் வெளியாகவில்லை. அவரது ரசிகர்களின் நீண்ட காத்திருப்பிற்கு விருந்தளிக்கும் விதத்தில் 2010-ஆம் ஆண்டு ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘பையா’, ‘நான் மஹான் அல்ல’ என மூன்று கார்த்தியின் படங்கள் வெளியாகி, மூன்றுமே ரசிகர்கள் கொண்டாடும் படங்களாகவும் அமைந்தது.

குறிப்பாக செல்வராகவன் இயக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் காலங்களை தாண்டியும் கார்த்தியின் நடிப்பை மக்கள் கொண்டாடும் படமாக அமைந்தது. தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்த கார்த்தி, தான் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு தேவையான உழைப்பையும், மெருகேற்றத்தையும் திரையில் காட்ட தவறியதே இல்லை.

தமிழ் சினிமாவில் 14 ஆண்டுகள் தொடர்ந்து மக்கள் கொண்டாடும் திறமையான நடிகராக வலம் வருவது எளிதான காரியம் இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவ்வாறு ஒரு நடிகர் இருக்கும் பட்சத்தில் அவரது உழைப்பை பாராட்டுவதும் ரசிகர்களின் கடமையே. கார்த்தியின் 14 ஆண்டு திரை வாழ்க்கையை கொண்டாடும் வகையில் அவரது ரசிகர்கள் #14YearsOfKarthism என்ற Tag-ஐ ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

கார்த்தி நடித்துள்ள ‘சுல்தான்’ திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. மேலும் பல வெற்றிப்படங்களில் நடித்து தன் ரசிகர்களை கார்த்தி சந்தோஷப்படுத்த வேண்டும் என சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.