புதுப்பேட்டையின் 15 ஆண்டுகள் !!

தமிழ் சினிமாவின் ஒரு முக்கிய Gangster படமான புதுப்பேட்டை திரைப்படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. தனுஷின் புதிய பரிமாணத்தை ரசிகர்களிடம் வெளிப்படுத்திய ஒரு முக்கிய திரைப்படம் புதுப்பேட்டை.

செல்வராகவனின் வித்தியாசமான கதைக் களமும் விறுவிறுப்பான திரைக்கதை அம்சமும் புதுப்பேட்டை திரைப்படத்தை 15 ஆண்டுகள் கழித்தும் ரசிக்க வைக்கிறது. இப்படத்தில் அமைந்த அனைத்து விஷயமும்  இன்றைய இளைஞர்கள் மத்தியில் என்றும் அழியாத டிரெண்ட் ஆக இருந்து வருகிறது. இப்படத்தில் தனுஷுடன் இணைந்து சினேகா, சோனியா அகர்வால், அழகம்பெருமாள், பாலாசிங், நித்திஷ் வீரா ஆகியோர் நடித்து இருப்பர்.

குறிப்பாக சினேகாவின் நடிப்பு படம் பார்க்கும் அனைவரையும் பாராட்ட வைக்கும் விதத்தில் அமைந்திருக்கும். தனது பள்ளிப் பருவத்தில் குடும்ப சூழ்நிலைகளால் தடம்மாறும் ஒரு இளைஞன் எப்படி சென்னையின் பிரபல gangster ஆக உருவெடுக்கிறார் என்பதே புதுப்பேட்டை திரைப்படத்தின் கதைச் சுருக்கம்.

இப்படத்தில் அமைந்த யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும், பாடல்களும் காலத்தால் அழிக்க முடியாத மெகா ஹிட் பாடல்களாக இருந்து வருகிறது. குறிப்பாக படத்திலேயே இடம் பெறாத இப்படத்தின் ‘ஒரு நாளில்’ பாடல் கேட்போருக்கு வாழ்க்கையின் எதார்த்தத்தையும், உண்மைகளையும் எடுத்துரைக்கும் வகையில் அமைந்திருக்கும். இப்படத்தில் உலகநாயகன் கமலஹாசன் ஒரு பாடலை பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

செல்வராகவன், தனுஷ் மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகிய மூவரின் திரையுலக பயணத்திலும் புதுப்பேட்டை ஒரு முக்கிய திருப்புமுனை படமாக அமைந்தது. இப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் இந்த நிகழ்வை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

15 ஆண்டுகள் கடந்தும் மக்கள் மனதில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்த புதுப்பேட்டை திரைப்படத்தின் படக்குழுவினருக்கு சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

About the author

shafin

உங்களில் ஒருவன்