Specials Stories Trending

5 Years For Baahubali Roar – பாகுபலி!!!

இந்தியாவின் மிகப்பெரிய பிரமாண்ட திரைப்படமான பாகுபலி வெளியாகி இன்றுடன் (ஜூலை 10) 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இப்படம் ஒரே சமயத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாக்கப்பட்டது. அதுமட்டுமின்றி மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.

பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் அமைந்திருக்கும். விஜயேந்திர பிரசாத் கதை எழுதி ராஜமௌலி இயக்கிய பிரம்மாண்ட திரைப்படமாய் அமைந்தது.

இப்படத்தின் முதல் காட்சி முதல் இறுதி வரை படம் பார்ப்பவர்களுக்கு விறுவிறுப்பும் பிரம்மாண்டமும் சற்றும் குறையாத வண்ணம் பாகுபலி அமைந்திருக்கும். இப்படம் உலக அளவில் ரசிகர்களால் பெரும் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி 180 கோடி ரூபாய் மதிப்பில் எடுக்கப்பட்ட இப்படம் 650 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை புரிந்தது.

மகிழ்மதியின் ராணியான ரம்யா கிருஷ்ணன் ஒரு பச்சிளம் குழந்தையை ஒரு குகை மூலம் நீர்வீழ்ச்சியின் அடிவாரத்திற்கு கொண்டு வந்து, அந்தக் குழந்தையை தன்கையில் தூக்கி ஏந்தியவாறு நீருக்குள் மூழ்கி இருப்பார். அந்தக் குழந்தையை மலையடிவாரத்தில் உள்ள கிராம மக்கள் ஈன்றெடுத்து வளர்ப்பார்கள். அந்தக் குழந்தை பெரிதாகி மலை உச்சியை அடைந்த பின்பு மகிழ்மதியின் அரசாங்கம் பற்றியும் தனது பிறப்பின் வரலாற்றையும் அறிந்துகொள்ளும் கதையே பாகுபலி.

கட்டப்பா கதாபாத்திரத்தில் நடித்த சத்யராஜ் மகேந்திர பாகுபலிக்கு அவரது தந்தை அமரேந்திர பாகுபலியின் வரலாற்றை எடுத்துரைப்பார். அமரேந்திர பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் என்ற கேள்வியுடன் முதல் பாகம் நிறைவடையும். இந்த சந்தேகம் தான் இரண்டாம் பாகத்தின் வெற்றி துருப்பு சீட்டாக அமைந்தது.

இப்படத்தின் இரண்டாம் பாகம் 2017ஆம் ஆண்டு வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. 2015ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த ஸ்பெஷல் Effects-க்கான தேசிய விருதை பாகுபலி திரைப்படம் வென்றது. அதுமட்டுமின்றி சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது பெறும் முதல் தெலுங்கு படமாக பாகுபலி திகழ்ந்தது.

இப்படத்தில் காலகேயர்கள் பேசுவதாக சித்தரிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட கிளிக்கி மொழியை உண்மையான ஒரு பேச்சு எழுத்து வழக்கு மொழியாக பாடலாசிரியர் மதன் கார்க்கி உருவாக்கியுள்ளார். பிப்ரவரி 21, 2020 ஆம் நாள் கிளிக்கி மொழிக்கென ஒரு பிரத்யேக இணையதளத்தை பாகுபலி இயக்குநர் ராஜமௌலி வெளியிட்டார். அவர் இம்மொழியை “உலகிலேயே இளமையான எளிமையான மொழி கிளிக்கி ஆக இருக்கும்” என புகழவும் செய்துள்ளார்.

பாகுபலி திரைப்படம் வெளியாகி ஐந்து ஆண்டுகள் கழித்தும் அப்படத்தின் வெற்றியை ரசிகர்கள் ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர். #BaahubaliTheBeginning மற்றும் #5YearsForBaahubaliRoar என்ற டாக் மூலம் ரசிகர்கள் தங்களது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்