Specials Stories

சதுரங்க (Chess) விளையாட்டு எப்படி உருவானது தெரியுமா?

அணு ஆயுத யுத்தங்களை தாண்டி அடுத்தடுத்த கட்ட நவீன போர் யுக்திகளை கையாண்டு உலகம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், இன்றைய தலைமுறையினர் அந்த காலப் போர்களிலிருந்து உலகப் போர் முதல் இன்று வரையிலான யுத்தங்கள் குறித்து அறிந்து வைத்துள்ளனர்.

மன்னராட்சி காலத்தில் இரண்டு ராஜ்யங்களுக்கு இடையில் போர் மூளும் போது எப்படியிருக்கும் தெரியுமா? போர் முரசு முழங்கும் முன் இரு ராஜ்யங்களின் படைகளும் போர்க்களத்தில் எதிரெதிரில் அணி வகுத்து நிற்கும். சிப்பாய்ப் படை, குதிரைப் படை, யானைப் படை என அனைத்து படைகளும் போர் முரசு ஒலிப்பதற்காக எதிரிகளை வேட்டையாடுவதற்காக இருபுறங்களிலும் வெறி கொண்டு காத்து நிற்கும்.

எவ்வளவு பெரிய பலம் வாய்ந்த படைகளாக இருந்தாலும் அதற்குரிய திறமையான போர்ப்படைத் தளபதி இருந்தால் தான் அந்த படை வெல்லும். எந்த விதமான சூழலிலும் போரில் வெற்றிவாகை சூடுவதற்கான வியூகங்களை போர்த்தளபதி வகுத்து வைத்திருக்க வேண்டும். எவ்வளவு சீக்கிரம் எதிர் நாட்டு மன்னனை வீழ்த்துகிறார்கள் என்ற செய்தி தான் பெருமளவில் பேசப்படும்.

கிபி 6 ஆம் நூற்றாண்டில் குப்தப் பேரரசின் இளவரசர் ஒருவர் போரில் கொல்லப்படுகிறார். இறந்த இளவரசரின் அண்ணன் தனது தாயிடம் அவர் எப்படி இறந்தார் என்பதை விளக்குகிறார். போர்க்களத்தில் நிகழ்ந்ததை Ashtapada என்ற 8-க்கு 8 கட்டங்கள் கொண்ட அந்த கால விளையாட்டுப் பலகையை வைத்து தாயிடம் விளக்குகிறார். இந்த Ashtapada விளையாட்டு தான் சதுரங்க(Chess) விளையாட்டின் முன்னோடியாக அறியப்படுகிறது.

இதிலிருந்து உருவானது தான் இன்று நாம் விளையாடக் கூடிய Chess. இது முதலில் சதுரங்கா என்று அழைக்கப்பட்டது. இந்த விளையாட்டு மக்களிடையே பரவலாகி எல்லைகள் தாண்டி பரவத் தொடங்கியது.

இந்தியாவிலிருந்து கிழக்கே கொரியா மற்றும் மேற்கே ஐரோப்பா வரையிலும் பரவியது. பின்னர் இந்தியாவிலிருந்து பாரசீகத்துக்கு பரவி இஸ்லாமிய மக்களிடையே பிரபலமடைந்தது. 10ஆம் நூற்றாண்டில் ஸ்பெயினிலும் 11ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்திலும் அறிமுகமானது.

15ஆம் நூற்றாண்டின் இறுதியில் Chess விளையாட்டுக்கான பொதுவான வரைமுறைகள் மற்றும் விதிகள் இத்தாலியில் பயன்பாட்டுக்கு வந்தது. இருப்பினும் பின் நாட்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு தற்போது இருக்கும் Chess விளையாட்டு விதிமுறைகள் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

இரு பக்கமும் 8 சிப்பாய்கள், 2 யானைகள், 2 குதிரைகள், 2 மந்திரிகள், ராஜா மற்றும் ராணி என மொத்தம் 32 காய்கள். ஒரு பக்கம் கருப்பு மறுபக்கம் வெள்ளை. ஒவ்வொரு காய்க்கும் தனித்துவமான நகர்வுகள் என உலகம் முழுக்க அனைவராலும் விரும்பப்படும் விளையாட்டாக, அதிபுத்திசாலிகளுக்கான விளையாட்டாக இன்று Chess அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதற்காக மட்டுமே தனியாக பல போட்டிகள் உலகம் முழுக்க நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் உலக நாடுகள் பங்கேற்கக் கூடிய செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்த வருடம் ரஷ்யாவில் நடைபெற இருந்த நிலையில் போர் சூழல் காரணமாக வேறு நாட்டில் நடத்த திட்டமிடப்பட்டது.

உலகிலுள்ள பல்வேறு நாடுகள் பங்கேற்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியானது முதன்முதலாக 1924 ஆம் ஆண்டு பாரீஸில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் நடைபெற்றதாகவும், பின்னர் 1927ஆம் ஆண்டு லண்டனில் அதிகாரப்பூர்வமாக நடத்தப்பட்டதாகவும் கூறுகின்றனர். தற்போது 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை அடுத்து ரஷ்யாவில் நடைபெற இருந்த பல்வேறு சர்வதேச போட்டிகள் ரத்து செய்யப்பட்டு வரும் நிலையில், ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறுவதாக இருந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியும் ரத்து செய்யப்பட்டது.

இதனையடுத்து போட்டிகளை வேறு நாட்டில் நடத்துவதற்கான ஏலம் விடப்பட்டது. அதில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் தமிழகத்தில், மாமல்லபுரத்தில் இந்த போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. எனவே 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை இந்தியா நடத்துவது இதுவே முதல் முறை. போட்டியில் 200 நாடுகளிலிருந்து 2000 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். அதிலும் குறிப்பாக மாமல்லபுரத்தில் இந்த சர்வதேச போட்டி நடைபெறுவது உலகளவில் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும். அதுமட்டுமல்ல இந்தியாவில் உள்ள Chess Grand Masters-களில் அதிகம் பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது இந்திய மற்றும் உலகளவில் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும்.

இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்க தமிழகம் வரவுள்ள உலக செஸ் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை வரவேற்கும் வகையில் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை நேப்பியார் பாலம் முழுக்க சதுரங்க கட்டங்கள் போன்று காட்சியளிக்கும் வகையில் கருப்பு வெள்ளையில் வர்ணம் பூசப்பட்டுள்ளது.

மேலும் மெரினா கடற்கரையில் இந்த போட்டிகளை நடத்தக் கூடிய பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின்(FIDE) சின்னமான குதிரை வணக்கம் கூறி வரவேற்பதைப் போன்று சிலை வைக்கப்பட்டுள்ளது. அந்த குதிரைக்கு தம்பி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்த பெயரை குறிக்கும் வகையில் குதிரையின் கையில் தம்பி என்ற பெயர் பச்சை குத்தப்பட்டது போல சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிலும் தமிழ் பாரம்பரியத்தை குறிக்கும் வகையில் குதிரை சிலை வேட்டி சட்டை அணிந்து வணக்கம் சொல்ல அருகில் நம்ம Chennai என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.

கிட்டத்தட்ட 10 அடி உயரத்தில் 20 தம்பி சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் 10 சிலைகள் வேட்டி சட்டை அணிந்து வணக்கம் தெரிவிக்கும் வகையிலும் 10 சிலைகள் வேட்டியை மடித்து கட்டும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளன. இது தவிர்த்து 15 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக சதுரங்க காய்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் தம்பி சிலையின் குடும்பம் என கணவன் மனைவி 2 குழந்தைகள் இருக்கும்படியாக தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலும் சிலைகள் உருவாக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

பல நூறாண்டுகளுக்கு முன்பு அதாவது கிபி 6ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் உருவான சதுரங்க விளையாட்டு இன்று உலகளவில் பரந்து விரிந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான உலக நாடுகள் பங்கேற்கக் கூடிய செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் முதன்முதலாக இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நடைபெறுவது தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்ப்பதாக உள்ளது.

Article By MaNo