Specials Stories

Come Back Soon எமி ஜாக்சன்!

Amy Jackson

பிரிட்டனை பூர்வீகமாக கொண்ட எமி ஜாக்சன் தன்னுடைய பதின் வயதுகளிலேயே பல உலக அழகி பட்டங்கள் பெற்றிருந்தாலும், மதராசப்பட்டினம் துரையம்மாவாக தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இன்றளவும் நீங்கா இடம்பிடித்தவர்.

மாடலிங் துறையில் ஆர்வம் கொண்ட எமி 2008 ஆம் ஆண்டு தன்னுடைய 15வது வயதிலேயே டெக்சாஸில் நடைபெற்ற ‘Miss Teen World’ பட்டத்தை வென்றார். தொடர்ந்து 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ‘Miss Teen Liverpool’ பட்டத்தையும் வென்றார். அதுமட்டுமில்லாமல் தொடர்ச்சியாக உலக அளவில் நடைபெற்ற பல அழகிப் போட்டிகளில் கலந்துகொண்டு விருதுகளை வென்றுள்ளார். இந்த சமயத்தில் தான் மதராசப்பட்டினம் படத்திற்காக எமி ஜாக்சனை, ஏ.எல்.விஜய் தேர்வு செய்தார்.

எமியின் சினிமா வாழ்க்கையே மதராசப்பட்டினம் படத்திலிருந்து தான் தொடங்கியது. ஏ.எல்.விஜய் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் இசையில் ஆர்யா, எமி ஜாக்சன் நடிப்பில் ஒரு அற்புதமான வரலாற்றுப் புனைவாக உருவாகிய இப்படம் சுதந்திரப் போராட்ட காலத்தை கதைக்களமாக கொண்டிருந்ததால் ஒட்டு மொத்த இந்திய சினிமாவும் இப்படத்தை திரும்பிப் பார்த்தது.

இதனைத் தொடர்ந்து இந்திய ரசிகர்களிடையே பிரபலமான எமி ஜாக்சன் தமிழ் ரசிகர்களால் இன்று வரை கொண்டாடப்பட்டு வரும் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் இந்தி ரீமேக்கான ‘Ekk Deewana Tha’ படம் மூலம் பாலிவுட்டில் நுழைந்தார். அடுத்தடுத்து தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்து இந்திய சினிமாவை ஒரு வலம் வந்தார் எமி ஜாக்சன்.

இத்தனை மொழிகளில் நடித்தாலும் எமி அதிகமாக கொண்டாடப்பட்டது தமிழ் ரசிகர்களால் தான். தமிழில் முன்னணி கதாநாயகர்கள் பலருடனும் இணைந்து நடித்தார். எமி ஜாக்சன் அதிகம் நடித்ததும் தமிழ் படங்களில் தான்.

மதராசப்பட்டினம், தாண்டவம், ஐ, தங்க மகன், கெத்து, தெறி, தேவி, எந்திரன் 2.0 என இவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றிப்படங்களாக அமைந்தது. குறிப்பாக இவரது படங்களில் இவருக்கு அமைந்த பாடல்கள் முழுவதும் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் அமைந்தது.

தாண்டவம் மற்றும் ஐ படத்தில் எமி ஜாக்சனுக்காக கதாநாயகியை மையப்படுத்தும் வகையில் தனி பாடல்கள் இடம்பெற்றது. அதுமட்டுமின்றி ஐ படத்தின் ‘மெர்சலாயிட்டேன்’ பாடல் பட்டி தொட்டியெங்கும் ஹிட் அடித்தது. அதே போல தேவி படத்தின் ‘சல்மார்’ பாடலும் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது.

‘ஐ’ திரைப்படம் குறிப்பாக இனி ஜாக்சனுக்காகவே உருவாக்கப்பட்டது போல இருக்கும். ஏனெனில் மாடலிங் துறையை மையம் கொண்டு உருவானது ‘ஐ’ திரைப்படத்தின் கதை. அதில் மாடலாகவே வலம் வருவார் மாடல் எமி ஜாக்சன். படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் எமி ஜாக்சன் அவ்வளவு அழகாக காட்சிப்படுத்தப் பட்டிருப்பார். ‘என்னோடு நீ இருந்தால்’ , ‘ஐலா ஐலா ஐ’ , லேடியோ பாடல்களை பார்த்தாலே இந்த உண்மை தெரியும்.

இப்படி இந்திய சினிமாவில் கொடி கட்டிப் பறந்த எமி ஜாக்சன் எந்திரன் 2.0 படத்திற்கு பிறகு காணாமல் போனார். இந்த சமயத்தில் ஹாலிவுட்டில் Super Girl எனும் சீரிஸில் நடித்தார். அதன் பிறகு குழந்தை பெற்றுக் கொண்ட எமி சினிமாவிற்கு முற்றிலுமாக முழுக்குப் போட்டு விட்டு தனது குழந்தையை கவனித்துக் கொண்டு மாடலிங்கில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது சமூகவலைத்தளங்களில் மட்டும் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வரும் எமி ஜாக்சன் மீண்டும் வெள்ளித்திரையில் தோன்றுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். Come Back Soon எமி ஜாக்சன்.

துரையம்மா எமி ஜாக்சனுக்கு சூரியன் FM சார்பில் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Article By MaNo