Specials Stories

இந்தியாவின் ஹாக்கி நாயகன் – தன்ராஜ் பிள்ளை!!!

இந்திய முன்னாள் ஹாக்கி வீரர் தன்ராஜ் பிள்ளை தனது 42வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இவர் தற்போது குஜராத் அரசாங்கத்தால் நிறுவப்பட்ட எஸ்.ஏ.ஜி ஹாக்கி அகாதெமியில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.

தமிழ் குடும்பத்தில் பிறந்த தன்ராஜ் பிள்ளை 1989இல் இந்திய அணிக்காக தனது ஹாக்கி வாழ்க்கையை தொடங்கினார். சுமார் பதினைந்து வருடங்கள் இந்திய அணிக்காக தனராஜ் பிள்ளை விளையாடியுள்ளார்.

இந்திய அணிக்காக 339 ஆட்டங்களில் விளையாடிய தன்ராஜ் பிள்ளை ஒலிம்பிக், உலகக் கோப்பை, சாம்பியன் கோப்பை போன்ற பல்வேறு தொடர்களில் விளையாடியுள்ளார். 160க்கும் மேற்பட்ட கோல்களை தன்ராஜ் பிள்ளை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணிக்காக விளையாடியது மட்டுமின்றி மலேசியா, பிரான்ஸ், இங்கிலாந்து ஜெர்மனி போன்ற நாடுகளில் உள்ள பல்வேறு கிளப்களுக்காகவும் தன்ராஜ் பிள்ளை விளையாடியுள்ளார்.

இவரது விளையாட்டுத்துறையின் சாதனைகளுக்காகவும், கடின உழைப்புக்காகவும் இந்திய அரசு இவருக்கு 2000 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. இந்தியாவில் விளையாட்டு துறைக்கு வழங்கப்படும் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை 1999-2000 விளையாட்டு ஆண்டிற்காக தன்ராஜ் பிள்ளைக்கு இந்திய அரசாங்கம் வழங்கியது.

1998 இல் நடைபெற்ற ஆசிய விளையாட்டுக்கள் தொடரிலும், 2003இல் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரிலும் தன்ராஜ் பிள்ளை தான் இந்திய அணியின் கேப்டனாக இருந்துள்ளார். 2002இல் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தொடரின் சிறந்த ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார்.

தன்ராஜ் பிள்ளையின் வாழ்க்கை வரலாறை ” Forgive me Amma ” என்ற தலைப்பில் சந்திப் மிஸ்ரா எழுதியுள்ளார். இதில் இவரின் 20 ஆண்டுகால ஹாக்கி வாழ்க்கையை விவரித்திருப்பார். இந்த புத்தகம் 2007 இல் வெளியிடப்பட்டது.

இந்தியாவிற்காக பல ஹாக்கி போட்டிகளில் விளையாடி நாட்டிற்கு பெருமை சேர்த்த தன்ராஜ் பிள்ளை அவர்களுக்கு சூரியன் FM சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்