Cinema News Specials Stories

இயக்குனர் இமயம் அவதரித்த நாள்!!!

இயக்குனர் பாரதிராஜா தனது 78 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். பல எதார்த்தமான உன்னதமான படைப்புகளை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள்.

இந்த காலகட்டத்தில் எதார்த்தமான நிகழ்வுகளை தத்துரூபமாக படத்தில் காண்பிக்கும் இயக்குனர்கள் குறைந்த அளவே இருக்கிறார்கள். ஒரு சில படங்கள் எதார்த்தத்தை நமக்கு எடுத்துக் காட்டினால் அப்படங்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறோம். ஆனால் பாரதிராஜாவின் படைப்புகள் அனைத்துமே எதார்த்தத்தை தத்ரூபமாக படமாக நமக்கு எடுத்துக் காட்டியிருக்கும்.

பாரதிராஜா தன் ஆரம்ப கால திரையுலக வாழ்க்கையில் கன்னட இயக்குனர் புட்டண்ணா கனகளிடம் உதவி இயக்குனராக இருந்தார். பின்பு புள்ளையா, கிருஷ்ணன் நாயர், அவினாசி மணி, ஜெகநாதன் போன்ற இயக்குனர்களுக்கு அசிஸ்டன்டாக பணியாற்றினார்.

1977 இல் வெளிவந்த “16 வயதினிலே” திரைப்படம் தான் பாரதிராஜா இயக்கி வெளிவந்த முதல் திரைப்படம். இப்படத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, கவுண்டமணி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும். முதல் படத்திலேயே பாரதிராஜா தனது தனித்துவத்தையும், திறமையான இயக்கத்தையும் வெளிப்படுத்தியிருப்பார். அதுமட்டுமின்றி இப்படத்திற்காக தமிழக அரசின் சிறந்த இயக்குனருக்கான விருதை பாரதிராஜா பெற்றார்.

அதைத்தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், நிறம் மாறாத பூக்கள் என தொடர்ந்து வெற்றிப் படங்களை பாரதிராஜா இயக்கினார். தமிழில் மட்டுமின்றி பாரதிராஜா தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இவரது ஒவ்வொரு படத்திலும் கிராமத்து மண்வாசனை வீசும் என்பதை ரசிகர்கள் மனதில் ஆழமாகப் பதிய வைத்தார். 1981ஆம் ஆண்டு வெளிவந்த “அலைகள் ஓய்வதில்லை” படம் பாரதிராஜாவின் திரையுலக வாழ்க்கையில் ஒரு மறுக்க முடியாத வெற்றிப்படமாக அமைந்தது. இப்படத்தில் நவரச நாயகன் கார்த்திக் மற்றும் நடிகை ராதாவை தமிழ் சினிமாவிற்கு பாரதிராஜா அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்பின் “டிக் டிக் டிக்” திரைப்படத்தை கமல்ஹாசனை வைத்து பாரதிராஜா இயக்கினார். இந்த திரைப்படம் பாரதிராஜா இயக்கிய க்ரைம் மிஸ்டரி திரைப்படமாக இருந்தது.

தமிழ் சினிமாவின் பல முன்னணி கதாநாயகிகளை அறிமுகப்படுத்திய பெருமை பாரதிராஜாவை சேரும். ராதா, ரேவதி, ராதிகா, விஜயசாந்தி, வடிவுக்கரசி ஆகியோர் பாரதிராஜா தமிழ் சினிமாவிற்கு கொடுத்த மறக்கமுடியாத கதாநாயகிகள் ஆவர். இதுமட்டுமின்றி பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா, தியாகராஜன், பொன்வண்ணன் ஆகியோரெல்லாம் பாரதிராஜாவின் திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்த பின்னரே பெரிய நடிகர்களாக உருவாகினர்.

பாரதிராஜா நடிகர் திலகம் சிவாஜி கணேசனை வைத்து இயக்கிய “முதல் மரியாதை” திரைப்படம் ஒரு மாபெரும் கிராமத்து காவியமாய் அமைந்தது. இப்படம் எடுக்கப்பட்டிருக்கும் விதமும், இப்படத்தின் கதைக்கருவும், திரைக்கதை அம்சமும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் திரையுலக வாழ்க்கையில் ஒரு முக்கியமான வெற்றி படமாக இப்படம் அமைந்தது.

பாரதிராஜா ஆறு தேசிய விருதுகளையும் 6 தமிழக மாநில அரசின் விருதுகளையும் பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதையும் 2004 ஆம் ஆண்டு பாரதிராஜா பெற்றார். சீதகோக சிலுக்கா, முதல் மரியாதை, வேதம் புதிது, கருத்தம்மா, அந்திமந்தாரை, கடல் பூக்கள் ஆகிய படங்களுக்கு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பாரதிராஜா பெற்றுள்ளார். 16 வயதினிலே, புதிய வார்ப்புகள், அலைகள் ஓய்வதில்லை, கருத்தம்மா, ஈர நிலம் போன்ற படங்களுக்காக தமிழக அரசின் திரைப்பட விருதுகளையும் பாரதிராஜா பெற்றுள்ளார்.

திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் இவரின் பிறந்தநாளை #HBDBharathiraja #HappyBirthdayBharathiRaja #IyakunarImayam என இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

40 ஆண்டுகளுக்கும் மேல் கலைத்துறையில் சிறந்த இயக்குனராக விளங்கிவரும் பாரதிராஜா அவர்களுக்கு சூரியன் FM சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.