Specials Stories

பன்முக கலைஞர் தனுஷ் – பிறந்தநாள் சிறப்பு கட்டுரை

நடிகர் தனுஷ் அவர்கள் தனது 37-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் இணையத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமா கண்ட தத்ரூபமான திறமையான நடிகர்களில் முதன்மையான நடிகராக தனுஷ் வளர்ந்துள்ளார்.

2002 ஆம் ஆண்டு தனது தந்தை கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் “துள்ளுவதோ இளமை” படத்தில் முதன்முதலில் திரையில் தடம் பதித்தார் தனுஷ். அதன்பின் 2003 ஆம் ஆண்டு தனது அண்ணனான செல்வராகவனின் இயக்கத்தில் உருவான முதல் படமான “காதல் கொண்டேன்” திரைப்படத்தில் தனுஷ் நடித்தார். இப்படத்தில் அவரது கதாபாத்திரம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பல வித்தியாசமான கதைகளையும், மசாலா கமர்ஷியல் கதைகளையும் கலவையாக தேர்ந்தெடுத்து தனுஷ் நடித்து வந்தார்.

2005 ஆம் ஆண்டு பாலுமகேந்திராவின் இயக்கத்தில் நடிக்க தனுஷுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. “அது ஒரு கனாக்காலம்” திரைப்படத்தில் முதன் முதலில் பாலுமகேந்திரா உடன் தனுஷ் இணைந்தார். அதன்பின் செல்வராகவன் இயக்கத்தில் இவர் நடித்த “புதுப்பேட்டை” திரைப்படம் இவரின் புதிய நடிப்பு பரிமாணத்தை வெளிக்காட்டும் விதத்தில் அமைந்தது. இப்படத்தில் அவர் ஏற்று நடித்த “கொக்கி குமார்” கதாபாத்திரம் காலத்தால் அழியாத கேங்ஸ்டர் கதாபாத்திரமாக நிலைத்திருக்கிறது.

தமிழ்சினிமாவில் ஒரு மாபெரும் வெற்றி கூட்டணியாக கருதப்படும் தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியின் முதல் படம் “பொல்லாதவன்”. இப்படம் வெற்றிமாறனுக்கும் தனுஷுக்கும் தங்களது திரையுலக வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையான படமாகவே அமைந்தது. அதுமட்டுமின்றி “பொல்லாதவன்” திரைப்படம் ரசிகர்களால் பெரிதளவில் கொண்டாடப்பட்டது என்றே கூறலாம். இப்படம் வெற்றியானதை தொடர்ந்து தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் ஆடுகளம், வடசென்னை, அசுரன் என மூன்று வெற்றி படங்கள் அமைந்தது. இவர்களின் கூட்டணியில் மேலும் ஒரு படம் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2011 ஆம் ஆண்டு வெளிவந்த ஆடுகளம் திரைப்படம் தனுஷை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது என்றே கூறலாம். இப்படத்திற்காக இந்திய அரசின் சிறந்த நடிகருக்கான தேசிய விருது தனுஷ் அவர்களுக்கு வழங்கப்பட்டது. ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் உருவான 3 திரைப்படத்தில் அமைந்த “ஒய் திஸ் கொலவெறி” பாடல் தனுஷை உலக அளவில் பிரபலமாக்கியது. தனுஷே பாடிய இப்பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘முதல் தமிழ் பாடல்’ எனும் பெருமையை பெற்றது.

Raanjhanaa Movie: Watch Full Movie Online on JioCinema

தமிழில் மட்டுமே நடித்து வந்த தனுஷ் 2013 ஆம் ஆண்டு “ராஞ்சனா” என்னும் இந்தி திரைப்படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இப்படம் பாலிவுட்டில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. ஒரு கட்டத்திற்கு மேல் கமர்சியல் படங்களில் மட்டும் நடித்து புகழை சம்பாதிக்கலாம் என்று எண்ணாமல் தனுஷ் தொடர்ந்து பல வித்யாசமான கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்தார். அந்த வகையில் “மரியான்” திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் சினிமா ரசிகர்கள் பலராலும் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது.

Tamil Movie 'Velaiyilla Pattathari' Review & Box-Office ...

2014ஆம் ஆண்டு வேல்ராஜ் இயக்கத்தில் வெளிவந்த “வேலையில்லா பட்டதாரி” திரைப்படம் தனுஷின் 25வது திரைப்படமாக அமைந்தது. இப்படம் மாபெரும் வெற்றிப் படமாய் அமைந்தது. அதன் பின் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் “ஷமிதாப்” படத்தில் இணைந்து நடிக்கும் வாய்ப்பு தனுஷுக்கு கிடைத்தது. இந்திய அளவில் ஒரு மிகப்பெரிய நடிகராக வளர்ந்துள்ள தனுஷுக்கு ஹாலிவுட் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பும் அமைந்தது. கென் ஸ்காட் இயக்கத்தில் வெளிவந்த “தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃ தி பகிர்” திரைப்படம் மூலம் தனுஷ் ஹாலிவுட்டில் அறிமுகமானார்.

2020ஆம் ஆண்டு பொங்கல் ரிலீசாக வெளிவந்த பட்டாஸ் திரைப்படம் தான் தனுஷ் நடித்து கடைசியாக வெளிவந்த திரைப்படம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் “ஜகமே தந்திரம்”, மாரி செல்வராஜ் இயக்கத்தில் “கர்ணன்” ஆகிய படங்கள் தனுஷ் நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படங்கள்.

தனுஷ் ஒரு நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர், இயக்குனர் என பல்வேறு பரிமாணங்களில் தன்னை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வகையில் ராஜ்கிரணை கதாநாயகனாக வைத்து “பவர் பாண்டி” திரைப்படத்தை தனுஷ் இயக்கியுள்ளார். 30க்கும் மேற்பட்ட பாடல்களை தனுஷ் பாடியுள்ளார். குறிப்பாக ரவுடி பேபி, ஒய் திஸ் கொலவெறி, எங்க ஏரியா, காத்தோடு காத்தானேன் பாடல்கள் தனுஷ் பாடிய சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்தது.

பாடல்கள் பாடுவது மட்டுமின்றி பாடல்களை தனுஷ் எழுதவும் செய்துள்ளார். இதுவரை 25 இற்கும் மேற்பட்ட பாடல்களை தனுஷ் எழுதியுள்ளார். 3, வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களின் அனைத்து பாடல்களுமே தனுஷால் எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ramforall: K Balachander, Dhanush at 58th National Film Awards ...

தனுஷ் இதுவரை 3 தேசிய விருதுகளை பெற்றுள்ளார். சிறந்த நடிகருக்கான ஒரு தேசிய விருதும், சிறந்த இணை தயாரிப்பாளருக்கான இரு தேசிய விருதுகளையும் தனுஷ் பெற்றுள்ளார். இன்றைய இளைஞர்களால் தன்னம்பிக்கையின் சிகரமாக பார்க்கப்படும் தனுஷ் அவர்கள் மேலும் பல வெற்றிப் படங்களில் நடிக்க வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் ஆசை.

தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்து வெளிவரவிருக்கும் “ஜகமே தந்திரம்” திரைப்படத்தில் அமைந்த “ரகிட ரகிட” பாடலின் லிரிக் வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டது. வெளியான சில மணித்துளிகளில் இருந்தே பாடல் டிரெண்ட் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமின்றி இவர் நடிக்கும் மற்றொரு படமான “கர்ணன்” திரைப்படத்தின் பட உருவாக்க வீடியோவின் சிறு துளி வெளியிடப்படும் என அப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் தெரிவித்துள்ளார்.

தாணு அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து கடிதத்தில் ” ஜூலை 28 தனுஷை தந்ததால் உயர்ந்த நாள்… வையகம் கலைக்க வாழ்க, வாழ்வெல்லாம் செழித்து வாழ்க, வாழ்க வளமுடன், நலமுடன் ” என தன் கைப்பட எழுதி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷ் அவர்களுக்கு சூரியன் FM சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.