Cinema News Specials Stories

மறையாத மகேந்திரன்!

மறைந்த இயக்குனர் மற்றும் நடிகர் மகேந்திரன் அவர்களின் பிறந்தநாள் இன்று (ஜூலை 25). காலத்தால் அழியாத பல காவியங்களை இயக்கிய மாபெரும் இயக்குனர் இவர்.

அலெக்சாண்டர் எனும் இயற்பெயருடைய இவர் திரைத்துறையில் தன்னை மகேந்திரன் என வெளிப்படுத்திக் கொண்டார். தனது கல்லூரிப் பருவத்திலேயே மேடை நாடகங்களில் இவர் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளார். எம்.ஜி.ஆர் நடித்த காஞ்சித்தலைவன் திரைப்படத்திற்கு மகேந்திரனை துணை இயக்குனராக நியமிக்கும்படி அப்படத்தின் இயக்குனரிடம் எம்.ஜி.ஆர் அவர்களே பரிந்துரை செய்தார்.

1966-ல் வெளிவந்த “நாம் மூவர்” திரைப்படம் தான் மகேந்திரன் கதை எழுதி வெளிவந்த முதல் திரைப்படம். தனது ஆரம்ப காலத்தில் படங்களுக்கு கதை மட்டும் எழுதி வந்த இவர் 1974இல் சிவாஜியின் நடிப்பில் வெளிவந்த “தங்கப்பதக்கம்” திரைப்படம் மூலம் வசனங்களும் எழுதத் தொடங்கினார். தொட்டதெல்லாம் பொன்னாகும், வாழ்ந்து காட்டுகிறேன், நம்பிக்கை நட்சத்திரம் போன்ற படங்களுக்கு கதையும் வசனமும் இவர் எழுதினார்.

நல்ல கதாசிரியராகவும் வசனகர்த்தாவாகவும் மக்கள் மனதில் இடம் பிடித்த இவர் 1978 ஆம் ஆண்டு இயக்குனராக தமிழ் சினிமாவில் தடம் பதித்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த “முள்ளும் மலரும்” திரைப்படம் தான் மகேந்திரன் இயக்கிய முதல் திரைப்படம். தன் முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு தனியிடத்தை பிடித்தார்.

அதுமட்டுமின்றி முள்ளும் மலரும் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் திரையுலக வாழ்க்கையில் ஒரு மறுக்கமுடியாத முக்கிய வெற்றிப் படமாய் அமைந்தது. அதன்பின் உதிரிப்பூக்கள், ஜானி, நெஞ்சத்தை கிள்ளாதே, நந்து போன்ற பல வெற்றிப் படங்களை தொடர்ந்து இயக்கினார். நெஞ்சத்தை கிள்ளாதே திரைப்படத்தில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என அனைத்தையுமே முதன்முதலில் தானே கையாண்டுள்ளார்.

2006ம் ஆண்டு வெளிவந்த “சாசனம்” திரைப்படம் தான் இவர் இயக்கி வெளிவந்த கடைசி திரைப்படம். மகேந்திரன் இயக்கிய “நெஞ்சத்தை கிள்ளாதே” திரைப்படம் 3 தேசிய விருதுகளை வாங்கியது குறிப்பிடத்தக்கது. அந்த ஆண்டின் சிறந்த தமிழ் படமாகவும் நெஞ்சத்தை கிள்ளாதே இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது.

2004 ஆம் ஆண்டு வெளிவந்த “காமராஜ்” திரைப்படம் மூலம் தன்னை ஒரு நடிகராகவும் தமிழ் சினிமாவில் தடம் பதித்தார். தளபதி விஜய் நடித்து வெளிவந்த “தெறி” திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த மகேந்திரன் அந்த கதாபாத்திரம் மூலம் ரசிகர்கள் மனதில் ஒரு சிறந்த வில்லன் நடிகராக இடம்பிடித்தார்.

தெறி திரைப்படத்தை தொடர்ந்து நிமிர், மிஸ்டர் சந்திரமவுலி, சீதக்காதி, பேட்ட, பூமராங் போன்ற திரைப்படங்களில் நடித்தார். மகேந்திரன் தனது 79வது வயதில் காலமானார். இவரது இழப்பு தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகவே கருதப்பட்டது.

தமிழ் சினிமா கொண்டாடும் பல வெற்றிப் படங்களை இயக்கிய மகேந்திரன் ஒருபோதும் தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்கப்பட மாட்டார் என்பதே மறுக்கமுடியாத உண்மை.