Cinema News Specials Stories

“கவிதைகளின் போதி மரம் – வைரமுத்து”

எப்படி தொடங்குவது இவரைப்பற்றி எழுத….

இது ஒரு பொன் மாலைப்பொழுது என்று தொடங்கிய அவரின் திரைப்பயணம் தமிழோடு அவரின் வார்த்தை விளையாட்டுகளால் தொடர்கிறது. ஏழாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியுள்ள ஒரு வாழும் சகாப்தமாய் இருக்கும் இவர் இசையுடன் அமைத்த கூட்டணி வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது.

பல் முளைக்கையில்
ஈறு வலிக்கும்..
மாற்றம் முளைக்கையில்
வாழ்க்கை வலிக்கும்
வலியெடுத்தால்
வழி பிறக்கும்
வழி பிறந்ததும்
வலியிருக்கும்.. – வைரமுத்து

புகழின் பின்னால்
நீ போனால்
அது பொய்மான்
உன் பின்னால்
புகழ் வந்தால்
அது நிஜமான்
அப்போது தான்
நீ அதற்கு எஜமான் – வைரமுத்து

புதிய கவிதையில் நடைமுறை வாழ்க்கையை இவர் இணைத்து புனையும் கவிதையும் பாடல் வரிகளும் தலைமுறை தாண்டி அவர் பெயர் சொல்கிறது. தாயின் சிறப்பு .. காதலின் தவிப்பு.. கொண்டாட்டம் .. சோகம் .. வாழ்கையின் ஏக்கம் .. என அனைத்து சூழலுக்கும் ஊக்கமும் உற்சாகமும் தரும் வரிகளில் இவர் கவிதைகள் மனதின் மொழி பேச தவறியதில்லை.

இந்திய அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை ஏழு முறைக்கும் மேல் வென்ற ஒரே தமிழ் கவிஞர் நம் கவிப்பேரரசு. இசைப்புயலும் .. இசைஞானியும் .. இசையின் ஆளுமைகள் என்றால் இவர் கவிதை உலகின் மன்னன்..

அவரின் முதல் பாடலில் இப்படி ஒரு வரி வரும் அதைச்சொல்லி முடிப்போம் ..
“வானம் எனக்கொரு போதி மரம்..
நாளும் எனக்கொரு சேதி தரும் ..
ஒரு நாள் உலகம் நீதி பெறும..
திருநாள் நிகழும் தேதி வரும் !
கேள்விகளால்.. வேள்விகளை.. நான் செய்வேன்” – வைரமுத்து

அன்பிற்கினிய கவிதைக்கு “வைரமான” வைரமுத்து அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Article By RJ Kannan