Specials Stories

மகிழ்ச்சியாய் இருப்பது எப்படி? – International Day of Happiness 2022

Happiness

ஒவ்வொரு வருடமும் மார்ச் 20ஆம் தேதி ‘International Day of Happiness / உலக மகிழ்ச்சி தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. உலகிலுள்ள மக்கள் அனைத்து மக்களுக்கும் வாழ்க்கையில் மகிழ்ச்சியாய் இருப்பதன் அவசியத்தை உணர்த்துவதே இந்த நாளின் நோக்கமாகும்.

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் தவிர்த்து பள்ளி செல்லும் சிறுவர்களிலிருந்து முதியவர்கள் வரை அனைவருக்கும் பிரச்னைகள் உள்ளது. போட்டி போட்டுக் கொண்டு நாம் வாழ்ந்து வரும் வாழ்க்கையானது நம் வாழ்க்கையில் அவசியமாக இருக்க வேண்டிய மகிழ்ச்சியை ஓரம் தள்ளிவிட்டு தேவையில்லாத பிரச்னைகளை கொண்டு வந்து நம்மிடம் சேர்க்கிறது.

இதுதவிர்த்து உடல் சார்ந்த, உளவியல் சார்ந்த, பொருளாதாரம் சார்ந்த இன்னும் பல்வேறு பிரச்னைகள் ஒவ்வொருக்கும் ஒவ்வொரு விதமாக இருந்து கொண்டிருக்கும். அவற்றிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக இருப்பதன் அவசியத்தை இந்த நாளில் தெரிந்து கொள்வோம்.

2022ஆம் ஆண்டிற்கான உலக மகிழ்ச்சி தினத்தின் நோக்கம் ‘Build Back Happier’ என்பதாகும். அதாவது கடந்த 2 வருடங்களில் கொரோனாவால் உலகம் முழுக்க அனைவரது வாழ்வும் தலைகீழாகிப் போனது, அதையெல்லாம் தாண்டி கடந்த சில மாதங்களில் தான் கிட்டத்தட்ட பழைய நிலைக்கு, கொரோனாவுக்கு முன்பிருந்த இயல்பு வாழ்க்கை முறைக்கு திரும்பியுள்ளோம். அதனை கொண்டாடும் வகையில் இந்த வருட theme உருவாக்கப்பட்டுள்ளது.

பிரச்னைகளுக்கு எத்தனை வழிகள் இருக்கிறதோ அதே போல் மகிழ்ச்சியை அடைவதற்கான பல வழிகள் நம் வாழ்வில் இருக்கும். சுற்றியிருப்பவர்களையும், நம்மையும் வருந்த வைக்காத வகையில் நமது சந்தோஷம் இருக்க வேண்டும். அப்படியான சந்தோஷமே நம்மை மட்டுமின்றி சுற்றியிருப்பவர்களையும் மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ளும். இது நமக்கு நேர்மறை எண்ணங்களையும் ஆற்றலையும்(Positive Vibes) தரும்.

அறிவியலைப் பொறுத்தவரை மகிழ்ச்சி என்பது ஒருவர் எதிர்மறை எண்ணங்களின்றி நேர்மறை எண்ணங்களுடன் இருப்பது தான். மகிழ்ச்சியுடன் இருப்பதால் நமக்கு கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா?

  • வாழ்நாள் அதிகரிக்கும்.
  • நமது உடலுறுப்புகள் நன்றாக இயங்கும்.
  • மன அழுத்தத்தை நம்மிடம் நெருங்க விடாது.
  • இரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளும் ஏற்படாது.
  • சிந்தனை ஆற்றல் அதிகரிக்கும்.

இப்போது மக்களிடம் பொதுவாக செய்யப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் மகிழ்ச்சிக்கான தடைகளாய் உள்ள காரணிகள் என்ன என்பது குறித்து பார்ப்போம்.

  • பாலினம்
  • வருமானம்
  • திருமணம்
  • படிப்பு
  • வேலை
  • உடல்நலம்
  • உறவுகள்

இவை முதன்மையான காரணிகள் மட்டுமே. இப்படி பல்வேறு காரணிகள் உள்ளன. பார்த்துப் பார்த்து வாழ்க்கையை செதுக்கி செதுக்கி வாழ்ந்தாலும் அனைவரும் வாழ்வில் ஏதாவது பிரச்னையை நிச்சயம் சந்தித்தே தீர வேண்டும் என்பது இயற்கையின் நியதி. அந்த பிரச்னைகளை நாம் எப்படி கையாண்டு மீண்டு வருகிறோம் என்பதிலேயே நமது வாழ்வின் மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது.

எனவே இன்றிலிருந்து நமது வாழ்வில் எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் துவண்டு போகாமல், எப்படி கடந்த 2 வருடங்களில் கொரோனாவை கடந்து வந்தோமோ அதே போல் அனைத்து பிரச்னைகளையும் யாரையும் காயப்படுத்தாமல் கடந்து வந்து மகிழ்ச்சியுடன் வாழ பழகிக் கொள்வோம்.

அனைவருக்கும் சூரியன் FM சார்பில் உலக மகிழ்ச்சி தின வாழ்த்துக்கள்.

Article By MaNo