Cinema News Specials Stories

தன்னிகரற்ற கலைஞன் கமல்ஹாசன்!

தமிழ் சினிமாவால் இவருக்கான அங்கீகாரம் கிடைத்ததா, இல்லை இவரால் தமிழ் சினிமாவிற்கான அங்கீகாரம் உலக அளவில் கிடைத்ததா?

இவர் தமிழ் சினிமாவின் ENCYCLOPEDIA என்று கூறினால் அது மிகையாகாது. ஆம் நம்முடைய உலக நாயகன், நம்மவர் கமலஹாசன், நம்முடையவர் என்று சொந்தம் கொண்டாடுவதில் தமிழக மக்களுக்கு எப்பொழுதுமே ஒரு பெரு மகிழ்ச்சி. 5 வயதில் களத்தூர் கண்ணம்மாவில் நடித்த அச்சிறுவன் ஒருநாள் சினிமாவில் மிகப்பெரிய சரித்திரத்தை படைப்பார், சினிமாவில் முக்கிய புள்ளி நடிகர்களுக்கு மானசீக குருவாய் விளங்குவார் என்று சொன்னால் 62 வருடங்களுக்கு முன் எவரும் நம்பத் துணிந்திருக்க மாட்டார்கள்.

அவர் படத்தின் பாட்டு வரிகள் “5 முதல் நீ ஆடி வந்தாலும் ஆக்ஸிஜன் குறையவில்லை” என்பது போல 233 திரைப்படங்கள், எத்தனையோ வேடங்கள், சில வெற்றிக்கான முயற்சிகள், பற்பல வெற்றிகள் என இன்றும் இளமை மாறாத தோற்றம், மானசீக குருவாய் பலர் ஏற்றாலும் மாணவனை போன்று கற்றுக்கொள்ளும் மனப்பான்மை, காலத்தின் மாற்றங்களை முன்பே அறிவார் என்பது போல முற்போக்கு சிந்தனைகள், இவை அனைத்தையும் ஒரு சேர பார்ப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது என்பதில் மாற்றம் இல்லை.

விருதுகளுக்காக பலர் ஏங்கும் பட்சத்தில், பல தேசிய விருதுகள் வாங்கி, 20-க்கும் மேற்பட்ட Filmfare விருதுகளை வாங்கிய பின் Filmfare நிறுவனத்துக்கு “இனி எனக்கு விருதுகளை அளிக்க வேண்டாம், இளம் தலைமுறையினருக்கும் திறமைசாலிகளுக்கும் வழங்குங்கள்” என்று வேண்டுகோள் வைத்து அடுத்த தலைமுறைக்கு வழியை விட்டு, வழிகாட்டியாகவும் இருக்கிறார்.

இந்த குணாதிசயத்தில் மட்டும் வழிகாட்டியாக இல்லாமல் திரையில் பல அதிசயங்களை புரியும் தொழில்நுட்ப கலைகளையும் கற்றறிந்து தொழில்நுட்ப கலைஞர்களும் அவர்களுடைய துறையில் வளர ஒரு வழிகாட்டியாகவும் முன்னோடியாகவும் விளங்குகிறார். விருதுகளை இவர் விரும்பாவிட்டாலும் இவரை விரும்பி இவரிடம் வந்த விருதுகள் 1984-இல் கலைமாமணி, 1990-இல் பத்மஸ்ரீ, 2014-இல் பத்மபூஷண், 2016-இல் செவாலியர் விருது, இன்னும் பல.

எழுத்து, திரைக்கதை, இயக்கம், பாடலாசிரியர், பாடகர், தொழில்நுட்ப கலைஞர், ஒலிச்சேர்க்கை கலைஞர் என பல பரிமாணங்கள் இருந்தாலும் அனைத்திலும் வெற்றி வாகை சூடி சினிமாவிற்கென்று தன்னை அர்ப்பணித்துக் கொண்டு ஆர்ப்பரிக்கும் ரசிகப் பெருமக்களை தன்வசமாக்கி, அனைவரும் அவரவர் குடும்பங்களில் ஒருவராய் நினைத்துக் கொண்டிருக்கும் தன்னிகரற்ற கலைஞர் திரு கமல்ஹாசன் அவர்களுக்கு இன்னும் பற்பல வெற்றிகள் வந்து சேர அவரது பிறந்த நாளன்று வாழ்த்துகளை தெரிவிக்கிறது சூரியன் FM.

Article By RJ VEDHA