பூவெல்லாம் உன் வாசம் – 19 ஆண்டுகள் !!

இயக்குனர் எழில் இயக்கத்தில் தல அஜித் நடித்து வெளிவந்த பூவெல்லாம் உன் வாசம் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 19 ஆண்டுகள் நிறைவடைகிறது. தல அஜித்தின் திரையுலக பயணத்தில் ஒரு முக்கிய வெற்றிப் படமாக இப்படம் அமைந்தது.

இப்படத்தில் தல அஜித்துடன் இணைந்து ஜோதிகா, நாகேஷ், சிவகுமார், விவேக் ஆகியோர் நடித்து இருப்பர். இயக்குனர் எழிலின் திரைக்கதை அமைப்பும், கதாபாத்திரங்களின் வடிவமைப்பும் இப்படத்திற்கு மிகப்பெரிய தூணாக அமைந்தது.

குடும்பங்கள் கொண்டாடும் குடும்பப்பாங்கான திரைப் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு இருக்கும் என்பதை மீண்டும் ஒருமுறை பூவெல்லாம் உன் வாசம் திரைப்படம் உணர்த்தியது. சிறு வயதிலிருந்தே நண்பர்களாக இருந்த சின்னா எனும் அஜித் கதாபாத்திரமும் செல்லா எனும் ஜோதிகா கதாபாத்திரமும் தங்கள் காதலில் எப்படி இணைகிறார்கள் என்பதே இப்படத்தின் கதை சுருக்கம்.

வித்யாசாகரின் இசையில் இப்படத்தில் அமைந்த அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் பாடல்களாக கொண்டாடப்பட்டது. இப்படத்தில் அமைந்த அனைத்து பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து தான் எழுதியுள்ளார். குறிப்பாக இப்படத்தில் அமைந்த காதல் வந்ததும், தாலாட்டும் காற்றே வா, திருமண மலர்கள் போன்ற பாடல்கள் 2001 ஆம் ஆண்டின் மக்கள் கொண்டாடும் சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்தது.

1999 ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை பெற்ற யுக்தாமுகி இப்படத்தில் ஒரு பாடலில் நடனமாடி இருப்பது குறிப்பிடத்தக்கது. அப்பாடலும் யுக்தாமுகி எனும் வரியிலேயே தொடங்கும். இப்பாடல் தியேட்டரில் படம் பார்த்த அனைவரையும் துள்ளாட்டம் போட வைத்தது என்றே கூறலாம்.

இப்படம் வெளியாகி 19 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் இப்படம் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் இணையத்தில் #19YrsOfPoovellamUnVaasam என்ற டேகை ட்ரெண்ட்  செய்து வருகின்றனர்.