Specials Stories

Magic இயக்குனர் செல்வராகவன் !!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத Experimental இயக்குனரான செல்வராகவன் அவர்கள் இன்று தனது 45-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது ரசிகர்களுக்கு பிறந்தநாள் விருந்தாக அவர் இயக்கிய “நெஞ்சம் மறப்பதில்லை” திரைப்படமும் இன்று வெளியாகியுள்ளது.

வித்யாசமான கதைக்களங்களை இயக்கும் போது, ‘இதை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா ?’ என்ற சந்தேகம் இயக்குனர்களுக்கு ஏற்படுவது வழக்கம். ஆனால் எந்த இயக்குனருக்கு அவரது உழைப்பின் மீதும், கற்பனை திறன் மீதும் அதீத நம்பிக்கை உள்ளதோ, அவர் துணிந்து தன் முயற்சிகளை மேற்கொள்வார். அப்படிப்பட்ட ஒரு சில இயக்குநர்களுள் ஒரு முக்கியமான இயக்குனர் தான் செல்வராகவன்.

தான் இயக்கிய முதல் படமான “காதல் கொன்டேன்” படம் மூலமே தன் வித்யாசமான எண்ணங்களையும், தன் தனித்துவமான திரைக்கதை அம்சத்தையும் மக்கள் மனதில் செல்வா ஆழமாக பதிய வைத்தார். செல்வராகவனும் தனுஷும் இணைந்த முதல் படமே “இந்த கூட்டணி பல Magic-களை தமிழ் திரையுலகில் நிகழ்த்தப் போகிறது” என ரசிகர்கள் மெச்சும் வகையில் அமைந்தது.

ரசிகர்களின் அந்த கூற்றை உண்மையாகும் வகையில் இந்த Magic Brothers கூட்டணியில் வெளிவந்த ‘புதுப்பேட்டை’, ‘மயக்கம் என்ன’ ஆகிய திரைப்படங்கள் காலங்களை கடந்தும் மக்கள் கொண்டாடும் படங்களாக அமைந்தது. குறிப்பாக புதுப்பேட்டை திரைப்படத்தின் ‘கொக்கி குமார்’-ஐ கோலிவுட் என்றும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

தனுஷ் – செல்வா கூட்டணியில் மேலும் இரண்டு படங்கள் உருவாகிறது என்ற அறிவிப்பே சினிமா ரசிகர்களின் தூக்கத்தை தற்போது கெடுத்துள்ளது. ‘நானே வருவேன்’, ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ ஆகிய இரண்டு படங்களையும் எதிர்நோக்கி ரசிகர்கள் திரை மீது விழி வைத்து காத்திருக்கின்றனர்.

தான் எடுக்கும் ஒவ்வொரு படத்திற்கும் எந்த அளவிற்கு கதைக்கள ஆராய்ச்சியில் செல்வா ஈடுபடுவார் என்பதற்கு “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இப்படத்தில் சோழர்களை பற்றி இவர் திரையில் காட்டியவை அனைத்தும், நமக்கு வியப்பளித்ததோடு சேர்த்து சோழர்களின் பெருமையையும், வரலாற்றையும் நமக்கு அழகாக விளங்க வைத்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் 2024-ஆம் ஆண்டு வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைமுறைகள் தாண்டியும் செல்வாவின் படங்கள் தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு ஒரு புதுவித தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே சொல்லலாம். அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதோடு சேர்த்து, இன்று வெளியான “நெஞ்சம் மறப்பதில்லை” திரைப்படத்தையும் பாராட்டி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துப் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Magic இயக்குனர் செல்வராகவன் மேலும் பல வித்யாசமான வெற்றிப் படைப்புகளை படைக்க வேண்டும் என வேண்டி அவருக்கு சூரியன் FM சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.