Cinema News Specials Stories

மனதெல்லாம் மனோ!

“பாட்டெடுத்து
நான் படிச்சா காட்டருவி
கண்ணுறங்கும்…
பட்டமரம்
பூ மலரும்…
பாறையிலும்
நீர் சுரக்கும்…”

என்ன நெனச்சு பாடலாசிரியர் வாலி, இந்த வரிகளை எழுதினாரோ தெரியல. ஆனா, மனோ பாடிய பின்பு அது உண்மையாகிடுச்சு, “செண்பகமே செண்பகமே” பாடி பால் கறக்கும் காட்சில ராமராஜன் இருந்தாலும் நம் மனதை மயக்கிய குரல் மனோ அவர்களுடையது.

இப்படி கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கும் மேலாக, கிட்டத்தட்ட தனது 30,000 பாடல்களால் மனம் வருடும் குரல் மன்னன் மனோ. இவரின் இயற்பெயர் நாகூர் பாபு, பின்பு இசையமைப்பாளர் இளையராஜா அவர்களால் “மனோ” என்று அன்புடன் அழைக்கப்பட்டார்.

இந்தியாவின் பத்திற்கும் மேற்பட்ட மொழிகளில் பல்வேறு இசைக்கலைஞர்களுடன் பணியாற்றி ரேடியோக்களின் காதலனாக இருந்து கொண்டிருக்கிறார். ரேடியோவிற்கும் அவருக்கும் ஏற்கனவே தொடர்பிருந்திருக்கிறது, அவரது தந்தை ஆல் இந்தியா ரேடியோவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தாய் ஒரு மேடை கலைஞர் கூட, எனவே சிறு வயது முதலே கலையும் அவர் மீது காதல் கொண்டது.

இதுவே பிற்காலத்தில் அவர் நடிகர், பாடகர், பின்னணி குரல் கலைஞர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகம் காட்ட காரணமாகியிருந்திருக்கும். 1995 ஆம் ஆண்டு முதல் முத்து திரைப்படத்திலிருந்து இன்று வரை தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் குரல் என்றால் அது மனோ அவர்களுடையது தான்.

சிங்காரவேலன் படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து காமெடியிலும் கலக்கி இருப்பார் மனோ. தெலுங்கில் சோம்பேறி என்ற படத்திற்கு இசையமைத்தார், பாடல்கள் அனைத்தும் தெலுங்கில் வெற்றியும் பெற்றன. பின்பு தமிழில் அழகிய தமிழ் மகன் படத்தின் விநியோக உரிமை பெற்று வெளியிட்டிருக்கிறார், அதோடு சில தெலுங்கு படங்களையும் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டு தயாரிப்பாளராகவும் களம் கண்டிருக்கிறார்.

இப்படி பல்வேறு மொழியில் தன் கலைப்பயணத்தை தொடரும் மனோ அவர்களுக்கு பல்வேறு மாநில அரசுகள், மாநில விருதுகளை வழங்கியிருக்கின்றன, இதற்கெல்லாம் மணிமகுடமாக தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்திருக்கிறது.

தான் பயணித்த அத்தனை துறையிலும் எத்தனையோ ஜாம்பவான்கள் இருந்தாலும், அத்தனையிலும் தன் தனித்துவத்தை காட்டி மக்கள் அனைவரின் அன்பை பெற்றவர் மனோ. மக்கள் மனம் வென்ற மனோ அவர்களுக்கு சூரியன் FM-ன் அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Article by Roopan Kanna VP