Stories Trending

இயக்குனர் சிறுத்தை சிவா பிறந்தநாள் !!!

பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா தனது 43வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். தல அஜித்தை வைத்து நான்கு திரைப் படங்களை இவர் இயக்கியுள்ளார்.

சிறு வயதிலிருந்தே சினிமாவில் ஆர்வமுடைய இவர் கல்லூரியில் புகைப்படத் தொழில் நுட்பம் படித்தார். 2007ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த ஈநாடு இந்நாளே வரே எனும் திரைப்படம் மூலம் சினிமாவில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். அதன்பின் பிரபுதேவா நடிப்பில் தமிழில் வெளிவந்த சார்லி சாப்ளின் திரைப் படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். 2002 முதல் 2006 ஆம் ஆண்டு வரை ஐந்து தெலுங்கு படங்களில் ஒளிப்பதிவாளராக இருந்துள்ளார் சிவா.

2008 ஆம் ஆண்டு கோபிசந்த் மற்றும் அனுஷ்கா நடிப்பில் வெளிவந்த சௌரியம் எனும் தெலுங்கு திரைப்படம் தான் சிவா இயக்கிய முதல் திரைப்படம். 2011 ஆம் ஆண்டு கார்த்தி நடித்த சிறுத்தை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு வெற்றி இயக்குனராக மக்கள் மனதில் இடம் பிடித்தார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் படங்கள் இயக்கி வந்த சிவாவிற்கு தல அஜித்துடன் இணையும் வாய்ப்பு வீரம் படம் மூலம் கிடைத்தது.

சிறுத்தை சிவா-அஜித் கூட்டணியில் வெளிவந்த முதல் திரைப்படமான வீரம் ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்ததால் அதற்குப்பின் மேலும் மூன்று திரைப்படங்களில் இந்த கூட்டணி இணைந்து பணியாற்றியது. 2019ஆம் ஆண்டு வெளிவந்த தல அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் தான் சிறுத்தை சிவா இயக்கி வெளிவந்த கடைசி திரைப்படம்.

பல வெற்றிப்படங்களை அடுக்கடுக்காக இயக்கிய இவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இயக்கும் வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 168 வது படமான அண்ணாத்த திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இப்படத்தின் மேலுள்ள எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருக்கிறது.

மேலும் பல வெற்றிப்படங்களை சிறுத்தை சிவா இயக்கி, தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத வெற்றி இயக்குனராக  உருவெடுக்க வேண்டும் என சூரியன் FM சார்பில் வேண்டி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.