Specials Stories

இதை படித்து முடித்தபின் நீங்கள் என்ன யோசிப்பீர்கள்?

End, Fail, No இந்த மூன்று வார்த்தைகள் தான் இந்த வருடத்தில் பலரும் சந்தித்த வார்த்தைகளாக இருக்கலாம்!
இதை கண்டு துவண்டவர்கள் பலர். துவங்கியவர்கள் சிலர். இனி இந்த மூன்று வார்த்தைகளை கண்டு அஞ்சவேண்டாம். எதைவும் நேர்மறை எண்ணத்துடன் எண்ணவேண்டும் என்று நாங்கள் அடிக்கடி சொல்வதுண்டு. அதன்படி End, Fail, No என இதையும் நேர்மறை எண்ணத்துடன் கொஞ்சம் பாருங்கள்!

END

இந்த வார்த்தைக்கு Effort Never Dies என்று வைத்துக்கொள்வோம். அதாவது “முயற்சி ஒரு போதும் தோற்பது இல்லை”. ‘பிரம்மாண்டமானவன் இறைவன்’ என்பதை காட்டும் முயற்சியில், தன் பிரம்மாண்டத்தை காட்டியவன் ராஜராஜசோழன். முயற்சிக்கு ஒரு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டாக ராஜராஜசோழனை கூறலாம். சோழ சாம்ரஜ்ஜிய விரிவாக்கமாக இருக்கட்டும், உலகப்புகழ்பெற்ற தஞ்சைப் பெருவுடையார் கோவிலாக இருக்கட்டும், இன்றைய தமிழின் அன்றைய வளர்ச்சியாக இருக்கட்டும், அனைத்தும் அவனின் ஒரு பெருமுயற்சியில் தான் நடந்தது. அம்முயற்சியில் விளைவு, இன்று வரலாற்றில் அழிக்கமுடியாத ஒரு இடத்தில் ராஜராஜசோழன் இருக்கிறான்.

உயிரணுவின் முயற்சி போரில் தான், கருவறையை நாம் அடைந்தோம். பின் இப்புவிக்கு வந்தபின், சிறுதோல்வி கண்டு சோர்வடைவது எதற்கு! வெற்றியின் எதிர்ச்சொல் தான் தோல்வி. அந்த தோல்வியை, முயற்சியின் துணைக்கொண்டு தான் தோற்கடிக்க முடியும். முயற்சியை தடுக்க அவமானமும், ஏளனசிரிப்பும் நம்மை எரிக்கவரும், அதை சிறு புன்னகை கொண்டு, அணைத்து விடுவோம்.

இனி உங்களுக்கான பயணத்தை தேர்ந்தெடுங்கள். அதற்கான பாதையை உரூவாக்குங்கள். பயண சுமையை கண்டு மட்டும் பயம் கொள்ளாதீர்கள். தன் எடையைவிட பலமடங்கு சுமையை சுமக்கும் எறும்பை விடவா நம் இரும்பு நெஞ்சு கலங்கிவிடும். முயற்சியை தினம் தினம் முட்டிக்கொண்டே இருங்கள். உங்கள் முயற்சியை கடைக்கரையில் எழுதினால் அது அலையில் அழிந்துவிடும். வான்திரையில் எழுதினால் இந்த உலகமே பார்க்கும்.

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்ற தமிழ் கூற்றை என்றும் மறக்காதீர்கள். ”அமைதியான கடல் ஒருபோதும் சிறந்த மாலுமியை உண்டாக்காது” என ஆங்கிலப்பழமொழி ஒன்று உண்டு. மனித இனத்தின் வரலாற்றை புரட்டிப் பார்த்தால் ஒவ்வொரு வெற்றிக்கும் முயற்சி தான் படிக்கட்டுகளாக இருந்திருக்கும். முயற்சி ஒரு போதும் தோற்பது இல்லை. நம்மை சுற்றி இருக்கும் தடைகளை, முயற்சிகொண்டு துடைத்துவிடுவோம்.

Fail

இந்த வார்த்தைக்கு Frist Attempt in Learning என்று வைத்துக்கொள்வோம். அதாவது “கற்றுக்கொள்வதற்கான முதல் வாய்ப்பு.” மனித வாழ்வில் கற்றல் என்பது நடத்தையில் ஏற்படும் நிரந்தரமான மாற்றம் என்கிறார்கள் அறிஞர்கள். அவ்வளவு ஏன் “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்று ஔவை சொல்வது, ஏழ்மை நிலையை அடைந்து பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டாலும், அந்த நிலையிலும் கற்க வேண்டும் என்பதுதான்.

காற்றாய் நம்மை கனமில்லாமல் சுமந்துசெல்வது இந்த கற்றல், கல்வி கற்பது என்பதையும் தாண்டி, சமூகத்தில் இருந்து என்ன கற்றுக்கொள்கிறோம் என்பதே, இங்கு அவசியம் தேவைப்படுகிறது.

ஒரு பறவை பேசக்கற்றுக்கொள்கிறது.
ஒரு குரங்கு சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்கிறது.
ஒரு மீன் விளையாட கற்றுக்கொள்கிறது.
ஓரறிவு முதல் 5 அறிவு முதல் உயிரினங்கள் ஏதோ ஒன்றை கற்றுக்கொள்ளும் போது, அதை அடக்கி ஆளும் நாம் ஏன், தோல்வியில் இருந்து கற்றுக்கொள்ள கூடாது.
தோற்றுவிட்டோம், Fail ஆகிவிட்டோம் என்று துவண்டு விடாமல், இது கற்றுக்கொள்வதற்கான முதல் வாய்ப்பாக எண்ணி, இனி வெற்றி பெறுவோம்.

No

இந்த வார்த்தைக்கு Next opportunity. இதை ‘‘அடுத்த வாய்ப்பு’’ என்று வைத்துக்கொள்வோம். தவற விட்ட சில வாய்ப்புகள், தவமிருந்தாலும், மீண்டும் கிடைப்பதில்லை என்று சொல்வதுண்டு. அதற்காக எப்போதுமே தளர்த்துவிடாதீர்கள். வாழ்க்கையில் எப்போதுமே இன்னொரு வாய்ப்பு இருக்கும் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.

ஒரு திறமையாளி ஒரு வாய்ப்பை இழந்தாலும், அடுத்தடுத்த வாய்ப்பு வந்துகொண்டே தான் இருக்கும். வாய்ப்பு என்பது பறித்துக்கொள்வதல்ல. திறமையால் நாம் தேடிக்கொள்வது. திறமையில் கவனம் செலுத்தினால், வாய்ப்பு நம்மை தேடிவருவதை எவராலும் தடுக்கமுடியாது. ஒரு திறமைசாலிக்கு, வாய்ப்புகள் தள்ளித்தான் போகுமே தவிர, அவனை தவிர்த்து விட்டு போகாது.

நெருப்பை கண்டு வியந்தவன் தீ என்றான். பயந்தவன் பகவான் என்றான். யோசித்தவன் தான் திரியில் அடக்கி தீபமென்றான். உங்கள் திறமை எனும் தீ, அணையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உள்ளே நெருப்பு இல்லாதவனுக்கு சூரியனும் ஒரு கரித்துண்டு. உள்ளே நெருப்பு உள்ளவருக்கு கரித்துண்டும் ஒரு சூரியன் என்று வைரமுத்து சொல்கிறார்.

ஒவ்வொரு வெற்றியும் ஒரு பரிசு, ஒவ்வொரு தோல்வியும் ஒரு பாடம். ஒவ்வொரு நாளும் ஒரு புதிய வாய்ப்பு.
சிகரம் தொடும் வெற்றிகளுக்கு இனி முயற்சிகள் ரிப்பன் வெட்டட்டும்.
இனி வாழ்க்கை பயணம், முயற்சியின் அடியின் அடிப்படையில் இருக்கட்டும்.

மலைப்பு மனிதனை மட்டாகும், பயம் மனிதனை படுகுழியில் தள்ளும், அச்சம் மனிதனை அடையாளம் பிடுங்கும், தயக்கம் பிடறிபிடித்து தள்ளும். கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள் கதவு தட்டும்போது, குறட்டை உறக்கம் கோட்டைவிடும்.
இனி தெளிவாய் தீர்மானம் எடுத்து, உடல் வறுத்து, ஊதியம் பெருத்து, திசைகளை அச்சுறுத்தி, வெற்றிகளை அம்பலப்படுத்தி, முயற்சியின் பலம்கொண்டு, வெற்றியை தோல்வியின் சமாதியில் கொளுத்துவோம்.

இனி ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு மணிநேரமும், ஒவ்வொரு நாளும் நமக்கானதே!
இனி அச்சம் தவிர்ப்போம்! ஐம்பொறியையும் ஆட்சி கொள்வோம்!
சிதையா நெஞ்சு கொண்டு, சரித்திர தேர்ச்சி கொள்வோம்!