Specials Stories Trending

உணர்வுகளுடன் யுவன் !!!!

தமிழ் சினிமாவில் பல இசையமைப்பாளர்கள் இருந்தாலும் ஒரு சிலர் மட்டுமே நம் மனதில் நீங்கா இடம் பிடிக்கின்றனர். அவ்வரிசையில் ஒரு பிரபல இசையமைப்பாளரின் மகன் என்ற முத்திரையோடு இசை உலகில் கால் பதித்திருந்தாலும் தனக்கென்ற ஒரு அரியாசனத்தை உருவாக்கி ரசிகர்களின் பேராதரவோடு பல வருடங்களாய் இசையாட்சி செய்யும் இவன்-யுவன்.

ஆம் “யுவன் ஷங்கர் ராஜா” தன் தந்தையின் பெயர் தன் பெயரில் இருந்தாலும் தனக்கென ஒரு பெயரை உருவாக்கிய youngsters-களின் youth icon.இவரின் வசிய குரலால் பசியும் மறந்து போகும்,மனவலிகள் கடந்து போகும்.குறிப்பாய் இவரின் சோக பாடல்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டி.

புதுப்பேட்டை படத்தில் ஒரு நாளில் பாடலில்,”எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்துருக்கும்,அத்தனை கண்ட பின்பும் பூமி இங்கு பூப்பூக்கும்” என்ற நா. முத்துக்குமாரின் வரிகளில் யுவனின் குரலில் இப்பாடல் கேக்கும்போது நாம் வாழ்க்கையின் விளிம்பில் இருந்தாலும் நமக்கொரு தெளிவு கிடைக்கும். இன்னும் சொல்ல போனால் யுவனின் சோக பாடல்கள் வெற்றி பெற இவரின் பாடல்கள்,படத்தின் கதையோடு ஒன்றியிருப்பது மட்டுமின்றி நமக்கு ஏற்பட்ட வலிகளை அப்பாடல்கள் நம்கண்முன் நிறுத்துவதும்தான்.மேலும் நா.முத்துக்குமார்-யுவன் கூட்டணி பாடல்கள் மிகவும் பக்கபலம். நல்ல வரிகளுக்கு உயிர் கொடுப்பதில் யுவன் தில்லாலங்கடி. குறிப்பாய் தாயை பிரிந்து வாடும் பல பேருக்கு ராம் படத்தில் வரும் “ஆராரிராரோ” பாடல் ஆகச்சிறந்த ஆறுதல். குறிப்பாக தனிமையில் யுவனின் பாடலை கேட்கும் வேலையில் கண்ணீராகும் கலங்கரை விளக்கம்.

மேலும் யுவனின் காதல் பாடல்கள் காற்றையும் கைது செய்யும். காதலிக்காதவர் கூட யுவனின் காதல் பாடல்களை காதலிப்பார்கள்.”கண் பேசும் வார்த்தைகள்” பாடலை கேட்டு கண் கலங்காதோர் லட்சத்தில் சிலர்.இப்படி தன் குரலாலும் இசையாலும் பல கோடி ரசிகர்களை தன்வசப்படுத்திய யுவனுக்கு நன்றி என்ற ஒரு வார்த்தை போதாது. “சோகமும் சுகம் தான்”என்பதை இவரின் இசையால் மட்டுமே உணர முடியும் .ஏதோ ஒரு சொல்லமுடியாத மந்திரம் இவரின் குரலிலும் இவர் அமைக்கும் இசையிலும் உள்ளது அதுவே இவரின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம்.காதல் தோல்விக்கு மருந்தே இல்லை,என காதலித்தவர்கள் கண்கலங்கிருக்க யுவனின் சோக பாடல்கள் அவர்களுக்கு மருந்தானது, செவிக்கு விருந்தானது. மேலும் படத்தின் கதைக்காக படம் ஓடாமல் இவரின் பாட்டுக்காகவே ஓடியது.”ஏதோ ஒன்று என்னை தாக்க” என்பதை போல் ஏதோ ஒன்று இவரின் இசையை திரும்ப திரும்ப கேட்கவைக்கிறது.மேலும் கற்றது தமிழ் படத்தில் வரும் “பறவையே எங்கு  இருக்கிறாய்“பாடல் இசைஞானி குரலில், யுவனின் இசையில் நம்மை எங்கோ வேறு ஒரு உலகத்திற்கு எடுத்து செல்லும்… உண்மையில் யுவனின் இசையில் உயிர் உள்ளது…அவ்வுயிர் நம்மை ஆட்டிப்படைக்கிறது…

பொதுவாய் தமிழ் சினிமாவில் காதல் படங்கள் என்றாலே இயக்குனர்களுக்கு யுவன் தான் பெரும்பாலும் நினைவுக்கு வரும். 90s kids தொடங்கி இன்று உள்ள 2k kids வரை இவரின் இசைக்கும் குரலுக்கும் அனைவரும் அடிமை… இதற்கு நான் மட்டும் விதிவிலக்கல்ல….மேலும் மன்மதன் படத்தில் வரும் காதல் வளர்த்தேன் பாடல் இன்றளவும் காதலர்களுக்கு பொக்கிஷம்.தற்செயலாக சினிமாவில் நுழைந்தாலும் இன்றும் தன் இசையால் ரசிகர்களை தக்க வைத்துக்கொள்வது யுவனிடமே சாத்தியம். 23 வருடங்கள் தொடர்ந்து இசை உலகில் மக்களின் மனதில் நிற்பது அவ்வளவு எளிதல்ல.இதற்கு நான் முன்பு குறிப்பிட்டது போல் அவரின் சோக பாடல்கள் இதற்கு முக்கிய காரணம். வாழ்க்கையில் நம்பிக்கையே இல்லாத பல பேருக்கு “சத்தம் போடாதே” படத்தில் வரும் பேசுகிறேன் பேசுகிறேன்”பாடல் மறுபிறவி எடுத்த ஒரு உணர்வை கொடுக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.யுவன் அதிகமாய் பேசாதபோதும் அவரின் இசை உலகெங்கும் பேசும். குறிப்பாய் “யாரடி நீ மோகினி”படத்தில் வெண்மேகம் பெண்ணாக உருவானதோ,பாடல் ஒரு தலை காதலர்களுக்கு ஊன்றுகோலாய் இருந்தது, இப்போதும் இருக்கிறது.

யுவன் இசையமைத்த ஆரம்ப காலகட்டத்தில் பாடல்கள் தோல்வியை தழுவினாலும் பின்பு இசையமைத்த அனைத்து பாடல்களும் சரித்திரம். “காதல் கொண்டேன்”படம் வெற்றிபெற தனுஷின் நடிப்பு எப்படி முக்கிய காரணமாக இருந்ததோ அதே அளவுக்கு யுவனின் இசையும் மிக பெரிய காரணம். அப்படத்தில் “தேவதையை கண்டேன்” பாடல் காதலுக்காக ஏங்கும் பல காதலர்களுக்கு காவியமாய் அமைந்தது. மேலும் தீபாவளி படத்தில் வரும் போகாதே பாடல் காதலிக்காதவரை கூட கண்கலங்கவைக்கும். இறுதியாய் யுவனை மிஞ்ச யுவனால் மட்டுமே முடியும் வேறு எவனாலும் முடியாது.U1 எப்போதும் No.1.

Article by RJ Vicky