விஷால் நடித்துள்ள சக்ரா திரைப்படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. இந்த டிரைலர் வெளியாகி இரண்டு நாட்கள் கூட ஆகாத நிலையில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த டிரைலரை பார்த்துள்ளனர்.
அறிமுக இயக்குனர் எம் எஸ் ஆனந்தன் இயக்கத்தில் விஷால், ஷ்ரதா ஸ்ரீநாத், ரெஜினா கெஸன்ட்ரா, ரோபோ ஷங்கர், மனோபாலா, கே.ஆர்.விஜயா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த ட்ரெய்லரை வைத்துப் பார்க்கும்போது விஷால் இப்படத்தில் ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது தெரிகிறது.
சைபர் கிரைம் குற்றங்களை மையமாக வைத்து இப்படத்தின் கதை நகரும் என தெரிகிறது. இந்த ட்ரைலர் இந்திய அரசாங்கம் கொடுக்கும் உயரிய விருதுகளில் ஒன்றான சக்ரா விருது திருடுபோனது எனவும் அதை கண்டுபிடிக்க விஷால் முயற்சி செய்வது போலவும் அமைந்துள்ளது. இதற்கு முன் இரும்புத்திரை திரைப்படத்திலும் விஷால் ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் சைபர் கிரைம் குற்றங்களை கண்டுபிடிக்கும் ஹீரோவாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இத்திரைப்படத்தின் டிரைலரை டுவிட்டரில் வெளியிட்ட யுவன் சங்கர் ராஜா இப்படத்தை இரும்புத்திரை Reloaded எனக் குறிப்பிட்டுள்ளார்.
இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த நான்கு மொழிகளிலும் ட்ரைலர் ஒரே நேரத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. நடிகர் ஆர்யா, கார்த்தி, விஷால், மோகன்லால் உள்ளிட்ட பல திரையுலக நட்சத்திரங்கள் இப்படத்தின் டிரைலரை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்கள்.
இப்படத்தின் டிரைலர் படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. இத்திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சக்ரா திரைப்படத்தின் டிரைலரை கீழே காணுங்கள்.