மிக்ஜாம் புயல் சென்னைக்கு வரலாறு காணாத வடுவை மிகவும் அழுத்தமாக தந்து சென்றுள்ளது. சென்னைவாசிகள் அனைவரும் கொஞ்சம் கொஞ்சமாக அந்த தாக்கத்திலிருந்து மீண்டு வருகின்றனர்.
2015 க்கு பின் சென்னை சந்தித்துள்ள பேரிடர் இது. முன் அனுபவம் உள்ள பலர் இந்த புயலை பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கையாண்டு கடந்து வந்துள்ளனர். பலர் முன் கூட்டியே சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். பேரிடர் அனுபவமில்லாதவர்களும் மற்றும் பலரும் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசாங்கமும் முடிந்தவரை துரிதமாக செயல்பட்டு பல்வேறு இடங்களில் மழை நீரை வடியச் செய்துள்ளது. தொடர்ந்து பணியாற்றியும் வருகிறது. இருந்தாலும் குறிப்பாக பள்ளிக்கரணை, மேடவாக்கம், அய்யப்பன்தாங்கல் போன்ற குற்றிப்பிட்ட இடங்களில் பலர் மின்சாரம், உணவு, சிக்னல் இன்றி தண்ணீர் வடியாத நிலையில் இன்னும் மீண்டு வராமல் இருக்கின்றனர். அவர்களுக்கு 2015 போலவே ஹெலிகாப்டரில் உணவு மற்றும் தண்ணீர் விநியோகம் செய்யும் பணி தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இந்த பேரிடர் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் சமீபத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதாவது, ”1976, 1985, 1996, 2005, 2015 மற்றும் 2023 – இவை அனைத்தும் சென்னையில் வெள்ளத்தால் பேரிடர் ஏற்பட்ட ஆண்டுகள்… இந்த ஆண்டு சென்னையில் மழையின் அளவு 2000 மிமீ-ஐ கடந்திருக்கிறது.
மின்சாரம் கிடைத்திருக்கிறது… சிக்னல் மிகவும் மோசமாக உள்ளது. நுங்கம்பாக்கத்தில் 48 மணி நேரத்தில் 469 மிமீ மழை பதிவாகியுள்ளது. இதில் பெரும்பாலானவை ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள் இரவு வரை 24 மணி நேரத்தில் பதிவானவை. சென்னை மாநகராட்சியில் 24 மணி நேரத்தில் 400-500 மிமீ மழை பெய்துள்ளது.
ஆவடியில் மிக அதிகமாக 564 மிமீ, பூந்தமல்லியில் 483 மிமீ, தாம்பரத்தில் 409 மிமீ மழை பதிவாகியுள்ளது. இதையடுத்து கூவம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அடையாறு ஆறும் நிரம்பி வழிந்தது. கொசஸ்தலை ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஒரு கட்டத்தில் பூண்டியில் இருந்து 45000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது.
இணைய வசதி மற்றும் மின்சார வசதி சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முழுவதும் மீட்டமைக்கப்பட்டவுடன், இந்த மழையின் அனைத்து வரலாற்று புள்ளிவிவரங்களையும் ஆய்வு செய்வோம். மேலே ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ள அனைத்து ஆண்டுகளுடன் இந்த 2023 ஆம் ஆண்டும் நினைவில் இருக்கும்” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
எத்தனை எத்தனை மழை வெள்ளம், புயல் பாதிப்பு என பல பேரிடர்களை சந்தித்தாலும் சென்னையும் சென்னை மக்களும் விரைந்து மீண்டு வந்து விடுவார்கள். இது சென்னையில் இருக்கும் இன்றைய தலைமுறைக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். ஆனால் சென்னைக்கு புதிதல்ல!