Specials Stories

சர்வதேச சைகை மொழிகள் தினம்!

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதருக்கு மொழியே தேவையில்லை

சின்ன வயசுல நம்ம எல்லாரும் டிவில செய்திகள் பாத்துருப்போம். அதுல ஒருத்தவங்க நியூஸ் வாசிப்பாங்க. கீழ ஒருத்தர் சைகை செஞ்சுட்டு இருப்பாங்க. இவங்க ஏன் இப்படி பண்ணுறாங்கனு நிறைய முறை நம்ம யோசிச்சுருப்போம். ஆனா இது தான் சைகை மொழி, செவித்திறன் சவால் உடையோர்களுக்காக தான், இந்த செய்தியை வாசிக்கிறாங்கனு நம்ம புரிஞ்சிக்கவே ரொம்ப நாள் ஆயிருக்கும்.

ஆமாங்க இப்படித்தான் சைகை மொழில மட்டும் தங்களோட கருத்துக்களை பரிமாறிக்குற பலரோட உலகத்த நம்ம தெரிஞ்சிக்காம, அவங்க உலகத்துக்குள்ள போகாம இருக்கோம். இந்த உலகத்துல ஆதி மனிதன் வாழ்ந்த காலத்துல, மொழிகள் தோன்றி இருக்காதா காலத்துல ஆதி மனிதன் பேசின முதல் மொழி எது தெரியுமா?

சைகை மொழி தான். அதுக்கப்புறம் தான் ஆதி மனிதன் குரல் எழுப்ப பழகிருக்காங்க. அதுல இருந்துதான் மொழிகள் உருவாகிருக்கு. பலவித கை வடிவங்கள், கை அசைவுகள் மற்றும் முக பாவனைகள் மூலமா பேசப்படறதுதான் சைகை மொழி. உலகத்துல எப்படி தமிழ், தெலுங்கு, இங்கிலிஷ், ஸ்பானிஷ் மாதிரி பல மொழிகள் இருக்கோ அதே மாதிரி சைகை மொழிலயும் இந்தியா, பிரிட்டிஷ் அமெரிக்க என பல வடிவங்கள் இருக்கு.

உலகத்துல உள்ள பல செவித்திறன் சவால் உடையவர்களுக்காக வடிவமைக்கப்படட இந்த சைகை மொழிக்கான தினம் ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் 23 ஆம் தேதி கொண்டாடப்படுது. உலக காது கேளாதோர் கூட்டமைப்பின் படி உலக அளவில் 70 மில்லியன் மக்கள் செவித்திறன் சவால் உடையவர்களா இருக்காங்க.

கிட்டத்தட்ட 300 வெவ்வேறு விதமான சைகை மொழிகள் பயன்படுத்தப்படுது. 1951 ஆம் வருடம் உலக காது கேளாதோர் கூட்ட்டமைப்பு உருவாக்கப்பட்டுச்சாம். ஆனா 2018 ஆம் வருடம் தான் செவித்திறன் சவால் உடையவர்களோட மேம்பாட்டிற்க்காக சைகை மொழி தினம் கொண்டாட ஆரம்பிச்சுருக்காங்க.

நம்மள சுத்தி இருக்கக்கூடிய செவித்திறன் சவால் உடையவர்களுடைய உலகத்த புரிஞ்சிக்க இந்த சைகை மொழி பயன்படுது. சமீபத்துல ஒரு இசை வெளியீட்டு விழால ஒரு நடிகை சைகை மொழில பேசிருப்பாங்க. அங்க ஒரு Translator அவங்க என்ன சொல்லுறாங்க அப்படினு அந்த அரங்கத்துல இருக்க எல்லாருக்கும் சொல்லிருப்பாங்க.

இந்த நிகழ்வு அந்த நடிகையுடைய தன்னம்பிக்கைக்கு ஒரு சான்றா அமைஞ்சதோட மட்டும் இல்லாம ஒரு வேளை எல்லாருக்கும் சைகை மொழி தெரிஞ்சிருந்தா அவங்க மத்தவங்களோட தொடர்புகொள்ளுறது சுலபமா அமைஞ்சுருக்குமோன்னு தோணுச்சு.

செவி திறன் சவால் உடையவர்களுக்கு மட்டும் இல்லாம, பேசும் திறன் சவால் உடைய பலருக்கும் இந்த சைகை மொழிதான் தன்னம்பிக்கை. நம்ம ஒவ்வொருத்தருமே இந்த சைகை மொழியை கத்துக்கணும் ஏன் தெரியுமா ?

1 . இன்னொரு புது மொழியை கத்துக்கும் போதும் அத பயன்படுத்தும் போதும் நம்ம மூளை புத்துணர்வு அடையும்.

2 . படம் பார்க்கும்போது, புத்தகம் படிக்கும்போது மத்தவங்களுக்கு தொந்தரவு குடுக்காம ஒரு விஷயத்த பகிர மற்றும் தண்ணிக்குள்ள இருக்கும்போது, ஆபத்து நேரத்துல ஒரு விஷயத்தை சொல்ல இந்த சைகை மொழி கை குடுக்கும் .

3 . அதிக சத்தம் இருக்குற இடத்துல பேச உதவும்.

4 . அதுமட்டுமில்ல இந்த சைகை மொழியை பயன்படுத்தும்போது நம்ம விஷுவல் கம்யூனிகேசன் ஸ்கில் அதிகமாகுதாம் .

5 . இது நம்ம உடல் மொழியை மேம்படுத்தும் அதனால நிறைய பரத நாட்டிய கலைஞர்கள் இந்த சைகை மொழிய கத்துக்குவாங்க.

எல்லாத்துக்கும் மேல பேசும் மற்றும் செவி திறன் சவால் உடையவர்களோட உலகத்த புரிஞ்சிக்க இந்த மொழி அவசியம். இப்ப இருக்கக்கூடிய நிறைய குழந்தைகளோட பெற்றோர்கள் அவங்களோட குழந்தைகளுக்கு இந்த மொழியை கத்து குடுக்க ஆர்வம் காட்றாங்க. நம்மளும் கத்துப்போம்… கற்றலுக்கு தான் வயசே கிடையாதே!

Article By RJ Dharshini Ram