Specials Stories

தமிழ் சினிமாவிலும் மம்முட்டி மாஸ் தான் !!!

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி தனது 69-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். நாடெங்கும் உள்ள மம்முட்டி ரசிகர்கள் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் மம்முட்டி நடித்துள்ளார். தமிழ் திரையுலகிலும் மம்முட்டி அவர்களுக்கு தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களுக்கு இணையான ரசிகர் பட்டாளம் இருப்பதற்கான காரணத்தை இப்பதிவில் காணலாம்.

1980 ஆம் ஆண்டு முதல் மலையாள சினிமாவில் நடித்து வந்த மம்முட்டி 1990-ஆம் ஆண்டு இயக்குனர் மது இயக்கத்தில் “மௌனம் சம்மதம்” எனும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே இவரின் நடிப்பு திரையுலக வட்டாரமும், ரசிகர்களும் கொண்டாடும் வகையில் அமைந்தது.

அதன்பின் இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் இயக்கத்தில் “அழகன்” திரைப்படத்தில் மம்முட்டி நடித்தார். மணிரத்னம் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் மம்முட்டி இணைந்து நடித்த திரைப்படம் “தளபதி”. இப்படத்தில் மம்முட்டி ஏற்று நடித்த தேவராஜ் கதாபாத்திரம் காலத்தால் அழியாத வெற்றி கதாபாத்திரமாக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறது. தமிழ் சினிமாவில் நட்பு என்ற வார்த்தையை கேட்டாலே மம்முட்டியின் தேவராஜ் கதாபாத்திரம் தான் அனைவரின் மனதிலும் தோன்றும்.

அதன்பின் தமிழில் மக்களாட்சி, புதையல், அரசியல் என தொடர்ந்து வெற்றிப் படங்களில் மம்முட்டி நடித்து வந்தார். லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த “ஆனந்தம்” திரைப்படம் மூலம் குடும்ப ரசிகர்களின் ஆதரவையும் மம்முட்டி பெற்றார். 2004 ஆம் ஆண்டு வெளிவந்த “விஷ்வ துளசி” திரைப்படத்திற்குப் பின் ஆறு ஆண்டுகள் தமிழில் எந்த படத்திலும் மம்முட்டி நடிக்கவில்லை. 2010 ஆம் ஆண்டு நீண்ட இடைவேளைக்குப் பின் ஆக்சன் கிங் அர்ஜூனுடன் இணைந்து வந்தே மாதரம் திரைப்படத்தில் நடித்தார்.

அதன் பின்னும் ஒன்பது ஆண்டுகள் தமிழ் சினிமாவில் இருந்து விலகியிருந்தது 2019 ஆம் ஆண்டு ராம் இயக்கத்தில் “பேரன்பு” திரைப்படத்தில் மம்முட்டி நடித்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு சேர்த்து சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற மக்கள் கொண்டாடும் திரைப்படங்களை மம்முட்டி தமிழ் சினிமாவில் கொடுத்ததால் தான் தமிழ் நடிகர்களுக்கு இணையான ரசிகர்கள் மம்முட்டிக்கும் இருக்கின்றனர். மேலும் தமிழில் பல வெற்றி படங்களில் மம்முட்டி நடிக்க வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் வேண்டுகோளாக உள்ளது. மாஸ் ஹீரோக்களை அதிகமாக கொண்டாடும் தமிழ் ரசிகர்கள் மம்முட்டி போன்ற எதார்த்தமான, ஜனரஞ்சகமான நடிகர்களையும் கொண்டாட தவறவில்லை.

அம்பேத்கர் திரைப்படத்தில் அம்பேத்கர் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது 1999 ஆம் ஆண்டு மம்முட்டிக்கு வழங்கப்பட்டது. இந்திய அரசாங்கத்தின் உயர் மதிப்பிற்குரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதும் 1998 ஆம் ஆண்டு மம்முட்டிக்கு வழங்கப்பட்டது.

இவரது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் இணையத்தில் #HappyBirthdayMammukka எனும் டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். நடிகர் ‘பத்மஸ்ரீ ‘ மம்முட்டி அவர்களுக்கு சூரியன் எப்எம் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.