Specials Stories

2019 ன் சிறந்த 10 இசையமைப்பாளர்கள்

2019 Best Music Directors
2019 Best Music Directors

இயல், இசை, நாடகம் என கலை வளர்ந்த இடமே தமிழகம். இசை நமது வாழ்வின் இன்றியமையா பாகமானது. இசை சார்ந்த வெற்றிகள் தமிழ் திரை உலகில் ஒவ்வொரு காலகட்டத்திலும் அதிகரித்து கொண்டே இருக்கின்றது. அந்த வகையில் இந்த வருடம் தமிழ் திரையிசை ஒரு படி முன்னே சென்றுள்ளது என்பது  மிகையாகாது. A.R. ரஹ்மான் போன்ற இசை ஜாம்பவான்கள் தொடங்கி sam C S  போன்ற இளம் இசையமைப்பாளர்கள் வரை 2019 ம் வருடத்தில் தங்களது சிறப்பான இசை மூலம் தடத்தை பதித்துள்ளனர்.

இந்த வருடத்தின் சிறந்த 10 இசையமைப்பாளர்கள் இதோ:

சாம் C.S – அயோக்யா, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் & கைதி

இந்த ஆண்டு வெளியான அயோக்யா மற்றும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படங்களின் பாடல்கள் மூலம் இளைஞர்களின் இதயத்தை கவர்ந்தார் சாம் C.S

இந்த படங்களின் பாடல்கள் வெற்றி பெற்ற நிலையில் தீபாவளி விருந்தாக கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படத்தின் மூலம் பின்னணி இசையிலும் தனது சிறப்பான திறமையை வெளிப்படுத்தி இந்த வருடத்தின் சிறந்த இசை அமைப்பாளர்களில் தானும் ஒருவர் என்ற வெற்றி முத்திரை பதித்தார் சாம் C.S. 

ஹாரிஸ் ஜெயராஜ் – காப்பான் மற்றும் தேவ்

2001ல் மின்னலே படத்தின் மூலம் அறிமுகமாகி 19 வருடங்களாக தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு சாம்ராஜ்யம் அமைத்தவர் தான் ஹாரிஸ் ஜெயராஜ். ஒவ்வொரு ஆண்டும் இசையில் முத்திரை பதித்து வரும் ஹாரிஸ் ஜெயராஜ் இந்த ஆண்டு காப்பான் படத்தின் மூலம் K.V. ஆனந்த் உடன் மீண்டும் இணைந்து ஹிட் அடிக்க, தேவ் திரைப்படத்தின் மூலம் மற்றுமொரு இசை வெற்றியை கொடுத்தார் ஹாரிஸ். ஒரு வருடத்தில் சூர்யா, கார்த்தி என சகோதரர்களுக்கு இவர் இசையமைத்தார் என்பது கூடுதல் சுவாரசியமாகும்.

Harris Jayaraj
Harris Jayaraj

ஹிப் ஹாப் தமிழா – கோமாளி, நட்பே துணை மற்றும் Mr. லோக்கல்

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களில் அறிமுகமான இளம் இசையமைப்பாளர்களில் தனி அடையாளத்தை ஆழமாக பதித்த இசையமைப்பாளர்கள் ஹிப் ஹாப் தமிழா என்ற ஆதி மற்றும் ஜீவா. இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப துள்ளல் மிகுந்த பாடல்களின் மூலம் வெற்றி கண்ட இவர்களில் ஆதி நடிகராகவும் தன்னை முன்னிறுத்தி வெற்றிக்கண்டார். இந்த வருடம் வெளியான கோமாளி, நட்பே துணை மற்றும் Mr. லோக்கல் படங்களின் வெற்றிக்கு இவர்களது இசை பெருமளவில் காரணமாக அமைந்தது.

ஜிப்ரான் – கடாரம் கொண்டான் மற்றும் சாஹோ

தமிழ் சினிமாவின் அடுத்த தலைமுறை இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் ஜிப்ரான் என்பதற்கு  உலகநாயகன் கமலுடன் இணைந்து உத்தமவில்லன், பாபநாசம், தூங்காவனம், விஸ்வரூபம் 2 போன்ற திரைப்படங்களுக்கு இசை அமைத்ததே சான்றாகும்.

இந்த வருடம் வெளியான கடாரம் கொண்டான் திரைப்படத்திற்கு இவர் அமைத்த இசை பெரும் வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் அப்படத்தின் பாடலான ‘தாரமே தாரமே’ இசை ரசிகர்களின் மனதை வருடி சென்றது. இதுமட்டுமல்லாது சர்வதேச அளவில் உருவான சாஹோ திரைப்படத்திற்கு பின்னணி இசை அமைத்தது மூலம் 2019-ம் ஆண்டின் முக்கிய இசை அமைப்பாளராக தடம் பதித்துள்ளார் ஜிப்ரான்.

டர்புகா சிவா- என்னை நோக்கி பாயும் தோட்டா

Mr. X என தன்னை அடையாளபடுத்தி ‘மறுவார்த்தை பேசாதே’ என்ற பாடலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் தான் டர்புகா சிவா. அதை தொடர்ந்து வந்த அத்திரைப்படத்தின் மற்ற பாடல்களும் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற, இசை உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார் டர்புகா சிவா. 2019 ல் தாமதமாக இத்திரைப்படம் வெளியான போதிலும், இந்த பாடல்களுக்கான மவுசு குறையாததே இவரின் இசை  வெற்றிக்கான சான்று.

யுவன் ஷங்கர் ராஜா – சூப்பர் டீலக்ஸ், பேரன்பு, நேர் கொண்ட பார்வை, NGK மற்றும் ஹீரோ  

இசைஞானி இளையராஜா என்னும் ஜாம்பவானின் மகன் என்றபோதிலும் தனது உழைப்பாலும் திறமையாலும் தமிழ் திரை உலகின் உச்சத்தை பிடித்தவர் யுவன் ஷங்கர் ராஜா. இந்த வருடமும் அவரது இசையில் வந்த திரைப்படங்கள் பின்னணி இசையில் மாபெரும் வரவேற்பை பெற்றது. சூப்பர் டீலக்ஸ், பேரன்பு, NGK மற்றும் ஹீரோ போன்ற படங்களில் பல்வேறு ஜானர்களில் சிறப்பான இசையை கொடுத்திருந்தார்.

Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja

D. இமான் – விஸ்வாசம், பக்ரீத் மற்றும் நம்ம வீட்டு பிள்ளை

தமிழ் சினிமாவின் பிஸியான இசையமைப்பாளர் என இமானை குறிப்பிட்டால் அது மிகையாகாது. பல திரைப்படங்களில் பணியாற்றினாலும் தனது தரத்தை என்றுமே அவர் விட்டுக்கொடுத்ததில்லை. விஸ்வாசம், பக்ரீத், கென்னடி கிளப் மற்றும் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படங்களே இதற்கு சான்று. 2019 ம் வருடத்தில் ஒவ்வொருவரும் முணுமுணுக்கும் வண்ணம் பாடல்கள் அமைத்ததே இவரது வெற்றியை உணர்த்தும்.

D. Imman
D. Imman

G.V. பிரகாஷ் – அசுரன்

இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறி அதிலும் வெற்றிவாகை சூடியவரே G.V. பிரகாஷ். பொல்லாதவன், ஆடுகளம் என பிரம்மாண்ட வெற்றிப்படங்களை கொடுத்த கூட்டணியே G.V. பிரகாஷ் – வெற்றிமாறன் கூட்டணி. கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு பிறகு அசுரன் திரைப்படத்தின் மூலமாக மீண்டும் இணைந்தது. பாடல்கள் நல்ல வரவேற்பை பெற அதை மிஞ்சும் அளவிற்கு பின்னணி இசைக்கு வரவேற்பு கிடைத்தது.

G.V.Prakash
G.V. Prakash

அனிருத் – பேட்ட

சூப்பர்ஸ்டார் ரஜினியின் ரசிகர்கள் சினிமாத்துறை முழுக்க நிரம்பிக்கிடக்க, அவர்கள் அனைவரும் கூடி சூப்பர்ஸ்டாருடன் ஒரு திரைப்படம் செய்தால் அதுவே பேட்ட. சூப்பர்ஸ்டாரின் ரசிகர் சூப்பர்ஸ்டாருக்காக இசையமைத்தால் அது எந்த அளவிற்கு வெற்றிபெறும் என்பதிற்கு பேட்ட திரைப்படமே சான்று. மரண மாஸ்ஸாக நாம் அனைவரும் பார்த்து ரசித்த ‘vintage’ ரஜினியை உலாலா என கண்முன் நிறுத்தினார் அனிருத்.

Anirudh
Anirudh

A.R. ரஹ்மான் – சர்வம் தாளமயம் மற்றும் பிகில்

ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் A.R. ரஹ்மான் இந்த ஆண்டும் தனது இசையால் தமிழ் சினிமாவை ஆட்கொண்டார். சர்வம் தாளமயம் மற்றும் பிகில் ஆகிய இரு திரைப்படங்களுக்கும் இவர் அமைத்த இசை மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. பிகில் திரைப்படத்தில் தளபதி விஜய் அவர்களின் குரலில் இடம்பெற்ற வெறித்தனம் மற்றும் A.R. ரஹ்மான் அவர்களின் குரலில் வெளிவந்த சிங்கப்பெண்ணே பாடல்கள் உலகெங்கும் உள்ள தமிழர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.