சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை திரைப்படம் வெளியாகி 28 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அப்படத்தின் வெற்றியை ரசிகர்கள் இணையத்தில் #28YearsOfAnnamalai என ஆரவாரமாக கொண்டாடினர். அண்ணாமலை திரைப்படம் உருவானதற்கான பின்னணி என்ன என்பதை இப்பதிவில் காணலாம்.
மன்னன் திரைப்படம் வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து கவிதாலயா நிறுவனத்திற்கு ஒரு படம் பண்ணி கொடுக்கலாம் என சூப்பர் ஸ்டார் நினைத்தார். அந்த எண்ணத்தின்படியே படத்துக்கான வேலைகளும் தொடங்கியது. முதலில் இப்படத்திற்கு அண்ணாமலை என பெயரிடப்பட்டதற்கு பல தரப்புகளில் இருந்து கேளிக்கையான விமர்சனங்கள் எழுந்தது. ‘அண்ணாமலைக்கு அரோகரா’ என்றெல்லாம் பலரும் இப்படத்தின் டைட்டிலை கேலி செய்தார்கள்.
இதனால் படத்தின் பெயரை மாற்றி அமைக்கலாம் என சூப்பர்ஸ்டாரிடம் கேட்டபோது அவர், “அண்ணாமலை என்னும் பெயர் திருவண்ணாமலை ஈசனைக் குறிக்கும், எனவே அப்பெயரை மாற்ற தேவை இல்லை, இந்தப் பெயரிலேயே படத்தை வெளியிடலாம்” என்று கூறியுள்ளார்.
கேளடி கண்மணி படத்தை இயக்கிய வசந்த தான் முதலில் இப்படத்தை இயக்குவதாக இருந்தது. அதன் பின் சில காரணங்களால் அவர் இயக்க முடியாமல் போகவே ரஜினியை வைத்து வெற்றிப் படங்களை அடுக்கடுக்காக கொடுத்த சுரேஷ்கிருஷ்ணா இப்படத்தை இயக்கினார்.
பொதுவாக சூப்பர் ஸ்டாரின் திரைப்படம் எந்தெந்த Element-களை கொண்டு அமைய வேண்டும் என ரசிகர்கள் விரும்புவார்களோ அவை அனைத்துமே உள்ளடக்கிய படமாக அண்ணாமலை அமைந்தது.
அண்ணாமலை திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து குஷ்பூ, மனோரமா, ராதாரவி, சரத்பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பர். சூப்பர்ஸ்டாரின் டைட்டில் கார்டில் வரும் பிரபலமான பின்னணி இசையும் இப்படத்திலிருந்து தான் தொடங்கியது.
தேவாவின் இசையில் அமைந்த அனைத்து பாடல்களுமே ரசிகர்களால் பெரும் வரவேற்ப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இப்படம் வெளியாகி 28 ஆண்டுகள் ஆகிய நிலையிலும் இன்றும் இப்படத்திற்கு ரசிகர்களின் கொண்டாட்டம் சற்றும் குறையவில்லை என்றே கூறலாம்.