Specials Stories

அந்நியனின் பதினைந்து ஆண்டுகள்!!!

Anniyan
Anniyan

விக்ரம் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ‘ அந்நியன் ‘. இப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில் அதை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடிவருகின்றனர்.

2005-ஆம் ஆண்டு ஜூன் 17-ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த அந்நியன் திரைப்படம் சியான் விக்ரமின் திரையுலக பயணத்தில் ஒரு மாபெரும் மைல்கல்லாக அமைந்தது.

ஒரே கதாபாத்திரத்தை மூன்று பரிமாணங்களில் வெளிப்படுத்துவது அவ்வளவு சுலபம் இல்லை. ஆனால் அந்த கடினமான சவாலை சாதாரணமாக ஏற்று தன் கடினமான உழைப்பை திரையில் விக்ரம் வெளிப்படுத்தியிருப்பார். அம்பி, அந்நியன், ரெமோ என மூன்று பரிமாணங்களிலும் மூன்று விதமான குணாதிசியங்களை தத்ரூபமாக வெளிப்படுத்தியிருப்பார்.

ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்களும் பின்னணி இசையும் இப்படத்திற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இப்படத்தின் அணைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட்டானது குறிப்பிடித்தக்கது.

ஷங்கர் படம் என்றாலே பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இருக்காது, அந்த வகையில் அந்நியன் படத்திலும் பார்ப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் காட்சிகளும் பாடல்களும் இடம்பெற்றிருக்கும். இப்படத்தின் நாயகியாக சதா நடித்திருப்பார். பிரகாஷ் ராஜ் , விவேக், நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பர்.

15 வருடங்கள் கழித்தும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் மக்கள் மனதை விட்டு நீங்காத காட்சிகளாக இருந்து வருகிறது. சமூகத்தில் நடக்கும் அநீதிகளை முறைப்படி தட்டி கேட்கும் அம்பி, தவறுகளுக்கு தானே தண்டனையளிக்கும் அந்நியன், ரொமான்டிக்கான ரெமோ என விக்ரமின் பரிமாணங்களை பாராட்டாதவர்களே கிடையாது.

சுஜாதாவின் வசனங்கள் ஒவ்வொன்றுக்கும் படம் பார்ப்போரை சமூகத்தை பற்றி சிந்திக்க வைக்கும்படி அமைந்திருக்கும். பீட்டர் ஹெய்னின் சண்டை காட்சிகள் மெய்சிலிர்க்க வைத்தது என்றே சொல்லலாம்.

இப்படிப்பட்ட பிரம்மாண்ட கூட்டணியில் அமைந்த சூப்பர் ஹிட் படமான அந்நியன் படத்தின் 15-வது ஆண்டை ரசிகர்கள் #15YrsOfMegaBBAnniyan என்ற Tag-ஐ ட்ரெண்ட் செய்து கொண்டாடிவருகின்றனர்.