Specials Stories

நாய்கள் ஜாக்கிரதை!

நமக்கு செல்லபிராணியாக நாய்களை வளர்ப்பது பெரும்பாலானோருக்கு விருப்பம். ஆனால் தெருநாய்களை யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. அப்படியே அதிகமாக கண்டுகொள்வது என்றால், பிஸ்கட் இல்லையெனில் ஏதாவது சாப்பாடு வாங்கி போடுவார்கள்.

ஆனால், அதற்கு முறையான பராமரிப்பு தேவையாக இருப்பது ரேபிஸ் தடுப்பூசி. ஆனால் இதை யாரும் செய்வது இல்லை. அரசாங்கமும் செய்வது இல்லை. இதனால் பலருக்கும் பாதிப்பு அதிகம். நாய்கள் கடித்தால் உடனே என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம். நாய் கடிப்பதன் மூலமாக ரேபிஸ் என்ற நோய் பரவுகிறது, இதனால் பலரும் மரணத்தை சந்தித்திருக்கிறார்கள்.

எந்த வகையான நாய்க்குட்டியாக இருந்தாலும் பிறந்து நான்கு வாரத்தில் முதல் தவணை தடுப்பூசி போட்டுவிட வேண்டும். அதற்கு, குட்டிகளை அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாலே போதுமானது. பெரும்பாலும் அடுத்த 30 நாட்களுக்குள்ளாக அடுத்த தடுப்பூசியான Nobivac DHPPi செலுத்த வேண்டும். விருப்பத்தின்பேரில், நாயின் உடற்கூறுக்கு ஏற்ப எலிக்காய்ச்சலுக்கான தடுப்பூசியையும் (Nobivac Lepto) அப்போது செலுத்தலாம்.

பிறந்ததிலிருந்து ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் நான்கு மாத காலம்வரை நாய்க்குட்டியை வெளியில் கூட்டிச் செல்வதை தவிர்ப்பது நல்லது. அடுத்த 25 நாட்களுக்குள் ரேபிஸ் (Anti Rabies Vaccine) தடுப்பூசி செலுத்த வேண்டும். அரசு கால்நடை மருத்துவமனையில் இந்த ரேபிஸ் தடுப்பூசி மட்டும் இலவசமாக போடப்படும். இதனுடன் நாய்க்குட்டிகளுக்கு செலுத்த வேண்டிய தடுப்பூசி முடிந்துவிடும். பின்னர் வருடத்துக்கு ஒருமுறை ரேபிஸ் தடுப்பூசி கட்டாயமாக செலுத்த வேண்டும்.

கடைசியாக செலுத்திய நாளிலிருந்து ஒரு வருடம் கணக்கிட்டு அடுத்த வருட தவணைக்கான ரேபிஸ் தடுப்பூசியை செலுத்த வேண்டும். வீட்டில் வளர்க்கும் நாய், சிறிய குட்டி நாய், தெருநாய் என எந்த நாய் கடித்தாலும் அதன் பற்கள் நம் உடம்பில் கீறலை ஏற்படுத்துகிறது. நாயின் வாயில் இருந்து சுரக்கும் உமிழ்நீர், அக்காயத்தின் வழியாக “ரேபிஸ்’ எனப்படும் வெறிநோய் கிருமிகளை நம் உடலின் உள்ளே செலுத்துகிறது.

அவை தோல் மற்றும் தசை திசுக்களில் பெருக்கமடைந்து மூளையை அடைகின்றன. காயமடையும் இடத்தைப் பொறுத்து, அக்கிருமிகள் வேகமாக அல்லது மெதுவாக மூளையை சென்று அடையும். அப்போது நோயின் பாதிப்பு நமக்கு தெரிய வரும். முதலில் நாய் கடித்த இடத்தில் கிருமிகளின் எண்ணிக்கையை குறைக்கும் விதமாக நாய் கடிபட்ட இடத்தை உடனே சோப்பு நீரால் பலமுறை நன்கு கழுவ வேண்டும்.

வேகமாக விழுகிற குழாய் நீரை திறந்துவிட்டு 5 நிமிடங்கள், நன்கு ரத்தம் வெளியேறும்வரை கழுவிவிட்டு அதன் மேல் டிஞ்சர் பென்சாயின் அல்லது டிஞ்சர் அயோடின் போன்ற மருந்தை தடவலாம். பின்பு, தாமதிக்காமல் மருத்துவரிடம் சென்று, முறையான சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். கடித்தது வெறிநாயாக இருந்தாலும், சாதாரண நாயாக இருந்தாலும் முதலில் தடுப்பூசியை கண்டிப்பாக போட வேண்டும்.

அதற்கு பின் மருத்துவர் ஆலோசனையோடு உரிய சிகிச்சை மேற்கொண்டால் நாம் எளிதில் நலம் பெறலாம். குறிப்பாக குழந்தைகள் நாய்களால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். எனவே நம் வீட்டில் உள்ள குழந்தைகள் செல்லப்பிராணி உடனோ, இல்லை தெரு நாய்களுடனோ விளையாடுவதை கட்டுப்படுத்துவது நல்லது. இல்லை என்றால் மேற்பார்வையிடுவது நல்லது.

சமீபத்தில் கூட உத்தரபிரதேசத்தில் ஒரு சிறுவன் நாய் கடித்ததை பெற்றோரிடம் சொல்லாமல் மறைத்து… ரேபிஸ் நோய் முற்றி உயிரிழந்த சம்பவம் இந்தியாவையே கவலைக்குள்ளாக்கியது. அதே போல் ஹைதராபாத்தில் ஒரு சிறுவனை தெருநாய்கள் சுற்றி வளைத்து கடித்து கொன்ற சம்பவமும் இந்திய மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எனவே தெருநாய்களிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அதற்கு மக்கள் மட்டுமின்றி அரசாங்கமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Article By Smily Vijay