Specials Stories

50 ஆண்டுகளை நிறைவு செய்த சென்னையின் அடையாளம்… ஜெமினி மேம்பாலம்!

Anna-Flyover

சென்னை என்றாலே நம் நினைவுக்கு வரும் இடங்களில நாம் எல்லோரும் ஜெமினி BRIDGE என்று அழைக்கும் அண்ணா மேம்பாலமும் ஒன்று, இப்படி சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் அண்ணா மேம்பாலம் இப்போழுது 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது.

தமிழ் நாட்டில் எத்தனையோ மேம்பாலம் இருந்தாலும் என்றுமே ஜெமினி மேம்பாலம் தனித்துவம் வாய்ந்தது தான். அதுமட்டுமில்லாமல் ஜெமினி மேம்பாலம் உருவான வரலாறும், அதன் பெயர் காரணமும் சுவாரஸ்யம் மிக்கவை. சென்னையின் மையப்பகுதியான நுங்கம்பாக்கம், அண்ணா சாலை, கதீட்ரல் ரோடு, G N ஷெட்டி சாலை என நான்கு பரபரப்பான சாலைகளை இணைப்பது ஜெமினி மேம்பாலம் தான்.

1960-களில் இந்த சாலைகள் சந்திக்கக் கூடிய, இப்பொழுது மேம்பாலம் இருக்கும் இடத்தில் ரவுண்டானா அமைத்து தான் போக்குவரத்தை கட்டுப்படுத்தி வந்தனர். இந்த ரவுண்டானா அருகில் அன்று மிக பிரபலமான திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஜெமினி ஸ்டுடியோஸ் அமைத்திருந்தது. எனவே இந்த ரவுண்டானாவை ஜெமினி Circle என அழைத்து வந்தனர்.

ரவுண்டானா இருந்தும் வாகன நெரிசல் அதிகமாக இருந்ததால், ரவுண்டான சந்திப்பில் 4 வழிகளில் இருந்து வரும் வாகனங்கள் நெரிசல் இல்லாமல் கடந்து போகும் வகையில் பிரத்யேகமாக வடிவமைத்து மேம்பாலம் கட்டப்பட்டு 1973-ல் வாகன போக்குவரத்துக்காக அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டு அண்ணா மேம்பாலம் என்று பெயரும் சூட்டப்பட்டது.

இருந்தாலும் இந்த மேம்பாலத்தை ஜெமினி பிரிட்ஜ் என்றே அனைவரும் அழைத்து வருகின்றனர். இன்று கூட அண்ணா மேம்பாலம் என்பதை விட ஜெமினி பிரிட்ஜ் என்று சொன்னால் தான் அனைவருக்கும் தெரிய வரும். இந்த அண்ணா மேம்பாலம் தான் தமிழ்நாட்டின் முதல் மேம்பாலம், இந்தியாவில் திறக்கப்பட்ட மூன்றாவது மேம்பாலம். அன்றைய அளவில் அண்ணா மேம்பாலம் தான் இந்திய அளவில் மிக நீளமான மேம்பாலமாக இருந்தது .

சென்னையை பார்க்காதவர்களுக்கு கூட ஜெமினி பிரிட்ஜ் என்று சொன்னால் தெரியும், சென்னைக்கு முதல் முறை வருபவர்கள் சென்னையில் பார்க்க வேண்டும் என்று நினைக்கும் இடங்களில் ஜெமினி மேம்பாலமும் கண்டிப்பாக இருக்கும். இன்று வரை திரைப்படங்களில் சென்னையை காட்டும் பொழுது ஜெமினி பிரிட்ஜை காட்டாமல் இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு சென்னையின் மறுக்க முடியாத அடையாளமாக இருக்கிறது ஜெமினி மேம்பாலம்.

ஒரு மணி நேரத்திற்கு 20 ஆயிரம் வாகனங்கள் ஜெமினி Flyover மேல் கடந்து போவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஜெமினி மேம்பாலம் இப்பொழுது 50 வருடங்களை கடந்திருக்கிறது, இந்த 50 ஆண்டுகளில் சென்னை பல மாற்றங்களை சந்தித்து இருந்தாலும், அண்ணா Flyover தன்னுடைய தன்மை மாறாமல், பெரும் மாற்றங்களை சந்திக்காமல் இன்றும் கம்பீரமாக சென்னையின் மையத்தில் காட்சியளிக்கிறது.

இன்னும் பல நூறாண்டுகளுக்கு சென்னையின் தவிர்க்க முடியாத அடையாளமாக ஜெமினி Flyover இருக்கும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.

Article By Sathishkumar Manogaran