தமிழ் சினிமா எப்பொழுதும் பல்வேறு பரிணாமங்களை அடைந்திருக்கிறது, அடைந்து கொண்டே வருகிறது.
திரைக்கதை அமைப்பதிலும் அதை காட்சியாக்குவதிலும் ஒவ்வொரு இயக்குனரும் ஒவ்வொரு விதம்..! ஆனால் சிலரோ தங்களுக்கு என்று ஒரு பாணியை உருவாக்கி, மற்றவர்களையும் அவர் வழியில் பயணிக்கச் செய்வார்கள். இயக்குனர் ஷங்கர் அந்த ரகம்.
ஆரம்பத்தில் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அவர்களிடம் சுமார் 17 படங்களுக்கு தொடர்ந்து உதவி இயக்குனராக பணிபுரிந்தார், ஒரு 15 வருடம் இந்த தமிழ் சினிமாவில் நாம் நீடித்தால் போதும் என்று நினைத்திருக்கிறார்.
ஆனால் 25 ஆண்டுகள் கழித்தும் தமிழ் சினிமாவின் பெருமையாக திகழ்கிறார் இந்த Gentle man. ஒரு தனி மனிதன் தனக்காக மட்டும் வாழாமல் புரட்சி செய்து அனைவருக்கும் எப்படி நீதி பெற்று தருகிறான் என்பதுதான் இவருடைய பெரும்பாலான திரைப்படங்களின் ஒன்லைன்.
ஆனால் இவற்றை கொஞ்சமும் நாம் யூகிக்க முடியாத அளவிற்கு திரைக்கதை அமைப்பது மட்டுமல்லாமல் மிகப் பெரிய பிரமிப்பை ஏற்படுத்த ஒரு போதும் அவர் தவறியதில்லை.

“ஒரு நாள் முதல்வர்” , “ஒரு ரோபோ மனித உணர்வுகளை பெற்று தன்னைப் போன்று ஆயிரம் ரோபோக்களை உருவாக்குகிறது” , “அரசியல்வாதிகள் அதிகாரிகள் மட்டும் தவறு செய்யவில்லை அடிப்படையில் சாதாரண குடிமகன் சிறு தவறு செய்தாலும், அது ஜனநாயகத்திற்கு எதிரான மிகப்பெரிய தவறுதான்” , “வெட்டியா சுத்துற சின்ன பசங்க லவ்வுலயும் ஜெயிச்சு லைஃப்லையும் ஜெயிக்க முடியாதா” என இவரின் ஒன்லைன் கூட நமக்கு சுவாரசியத்தை தொற்ற செய்யும்.
இப்படி ஒன்லைனில் மட்டுமல்ல, தன் திரைப்படங்கள் மூலம், நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஏதோ ஒரு புது விஷயத்தை நமக்கு கற்றுத் தந்திருப்பார். அதுவே அவரின் மிகப்பெரிய பிரமாண்டம். இயக்குனர் ஷங்கர் அவர்களுக்கு சூரியன் FM-ன் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!