Cinema News Specials Stories

தமிழ் எழுத்துலக ஆசான் ‘ஜெயமோகன்’

ஓர் எழுத்தாளர் எழுதிய ஒரு நாவலின் பெயரில் இன்றும் விருது வழங்கப்படுகிறது என்றால், அது அந்த படைப்பாளியின் மொழி நடைக்கும் ஆழ் சிந்தனைக்கும் எடுத்துக்காட்டு. அந்த நாவல் “விஷ்ணுபுரம்”, அதை எழுதியது பிரபல எழுத்தாளர் “ஜெயமோகன்”.

எழுத்தாளர்களை உச்சியில் வைத்து கொண்டாடுகின்ற மலையாள தேசத்தின் அருகில் இருக்கின்ற நாகர்கோவிலில் தான் ஜெயமோகன் பிறந்தார். தனது முதல் வகுப்பை பத்மநாபபுரத்திலும் இரண்டாம் வகுப்பை கன்னியாகுமரி கொட்டாரத்திலும் பயின்ற ஜெயமோகன், சிறு வயது முதலே வாசிப்பின் மேல் அதிகம் நேசிப்புக் கொண்டிருந்தார்.

YMCA நூலகம், அருமனை அரசு நூலகம், திருவனந்தபுரம் ஸ்ரீ சித்ரா நூலகம் போன்றவை ஜெயமோகன் என்ற படைப்பாளியை பால்ய காலங்களில் பட்டை தீட்டிய நூலகங்கள். சிறுவயதாக இருக்கும் பொழுதே இரத்தின பாலா, குமுதம், விகடன் போன்ற இதழ்களுக்கு எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

பயோனிர் குமாரசாமி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு வணிகவியல் படித்துக் கொண்டிருந்த பொழுது தான் தனது நெருங்கிய தோழன் ராதாகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டார். அதே காலகட்டத்தில் 1984 ஆம் ஆண்டு தனது பெற்றோர்களும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொள்ள வாழ்க்கையே வெறுத்துப் போன ஜெயமோகன் பழனி, திருவண்ணாமலை, காசி போன்ற இடங்களுக்கு சென்று ஆன்மீக வழியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

இப்படி வாழ்க்கை கொடுத்த நெருக்கடிகளில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த பொழுதுதான் 1985-இல் பிரபல எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் அறிமுகம் கிடைத்தது. 1987-ல் ஜெயமோகனின் கைதி என்ற கவிதை கொல்லிப்பாவை இதழில் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பிறகு நதி என்ற சிறுகதை கணையாழியிலும் படுகை போதி போன்ற கதைகள் வெளிவந்து சுஜாதா, பார்த்தசாரதி போன்ற எழுத்தாளர்களால் கவனிக்கப்பட்டது.

1989இல் BSNL-ல் இவருக்கு வேலையும் கிடைத்தது. இவருடைய எழுத்துக்கள் அத்தனையும் மனித மனங்களை அலசுவதாக இருக்கிறது. விஷ்ணுபுரம் என்ற இவரது நாவலில் ஒரு பழங்கால சிலை கிடைக்கிறது. அது விஷ்ணுவின் சிலை என்று வைணவர்களும் அது பெரு மூப்பன் சிலை என்று செம்படவர்களும் உரிமை கொண்டாடுவதை மையமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும்.

அன்றைய காலகட்ட மனிதர்களின் வாழ்வியல் முறைகள், மனநிலைகள், போன்றவற்றை ஆராய்கின்ற வகையில் நாவல் எழுதப்பட்டிருக்கும். விஷ்ணுபுரம் நாவல் இன்றளவும் எழுத்துலகில் ஒரு மைல் கல் என்று சொல்லலாம்.

இவரின் “காடு” எனும் நாவலில் “கிரிதரன்” என்ற கதை நாயகன் வாழ்க்கையில் சந்திக்கின்ற நிகழ்வுகள், காட்டில் வாழ்ந்த நாட்கள், காதலையும் இழப்புகளையும் துரோகங்களையும் காமத்தையும் அவன் எப்படி எல்லாம் சந்தித்தான் என்று சொல்லுகின்ற அதே வேளையில் காட்டில் இருக்கின்ற வளத்தையும் இயல்புகளையும் பற்றி விரிவாக விவரிக்கிறது.

அதேபோன்று இரவின் அழகை அதன் உலகை “இரவு” என்ற கதையில் சொல்லுகின்ற ஜெயமோகன், “உலோகம்” என்ற தனது அடுத்த நாவலில் ஈழப் போரை அடிப்படையாகக் கொண்டு எழுதியுள்ளார். “கன்னி நிலத்தில்” ஒரு ராணுவ வீரனுக்கும் ஒரு போராளி பெண்ணுக்கும் இடையில் உருவாகின்ற காதல் அதன் தாகம், அதனுடைய தாக்கம் என ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு மையக்கருவை கொண்டு எழுதிய ஜெயமோகன் பல காவியங்களை படைத்திருக்கிறார்.

எழுத்துத் துறையில் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட ஜெயமோகன், அதன் நீட்சியாக திரைத்துறையிலும் தனது பேனாவுக்கு வேலை கொடுத்தார். 2006 இல் கஸ்தூரிமான் படத்தில் திரைக்கதை எழுதத் தொடங்கிய ஜெயமோகன்
நான் கடவுள், அங்காடித்தெரு, நீர்ப்பறவை, பாபநாசம் ,சர்க்கார், இந்தியன் 2, பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு என பல படங்களுக்கு திரைக்கதை எழுதி ஒரு வெற்றிகரமான திரைக்கதை ஆசிரியராகவும் வலம் வருகிறார்.

1990-ல் அகிலன் நினைவு போட்டி பரிசை பெற்றவர், 1992-ல் கதா விருது, 1994-ல் சமஸ்கிருதி சம்மாளன் தேசிய விருது, 2008-ல் பாவலர் விருது என பல விருதுகளை பெற்றிருக்கும் ஜெயமோகன் தமிழ் இலக்கிய உலகில் தவிர்க்க முடியாத ஒரு எழுத்தாளராக பவனி வருகிறார்.

வரலாற்று புதினங்கள், சமூக கதைகள், தனிமனித மனங்கள் என எல்லா தளங்களிலும் தன் எழுத்து படகை செலுத்திக் கொண்டிருக்கும் ஜெயமோகன் எனும் ஆகச் சிறந்த எழுத்தாளருக்கு இன்று பிறந்தநாள் அவரை வாழ்த்துவதில் சூரியன் FM பெருமை கொள்கிறது.

Article By RJ K.S.Nadhan