தென்னிந்திய சினிமாவில் மாஸ் கமர்ஷியல் ஹீரோக்களின் படங்களுக்கு மத்தியில் பெண்களை மையப்படுத்தும் கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகையாக திகழும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு காலத்தில் பல சவால்களை எதிர்கொண்டு இன்று ஒரு வெற்றிகரமான கதாநாயகியாக வலம் வருகிறார். தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பயணத்தை சின்னத் திரையில் துவங்கினார். பின்பு தனியார் தொலைக்காட்சி ஒன்றின் ரியாலிட்டி ஷோ இல் பங்கு பெற்று வெற்றி பெற்றார்.
அதில் பிரபலமானதன் மூலம் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து ‘அவர்களும் இவர்களும்’ படத்தில் அறிமுகமானார். அறிமுக படத்தில் சரியான வரவேற்பு கிடைக்காத நிலையில் அடுத்ததாக அவரது நடிப்பில் அட்டகத்தி படம் வெளியானது. அதன் மூலம் தமிழ் திரையுலக ரசிகர்களிடையே பிரபலமானார்.
பின்னர் ரம்மி , பண்ணையாரும் பத்மினியும் , திருடன் போலீஸ் உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் அனைத்து தரப்பினராலும் ரசிக்கப்பட்டார். இருப்பினும் காக்கா முட்டை திரைப்படம் தான் இவரது திரை பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
ஒரு ஏழை தாயின் கதாப்பாத்திரமாக வாழ்ந்து இருப்பார். காக்கா முட்டையில் அவரது தத்ரூபமான நடிப்பிற்கு கிடைத்த அங்கீகாரமாக Tamilnadu State Film Awards for Best Actress விருது பெற்றார். அடுத்ததாக தனுஷுடன் இணைந்து இவர் நடித்த வடசென்னை படம் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. பின்னர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கனா படத்தில் ஒரு கிரிக்கெட் வீராங்கனையாக ஒரு மாறுபட்ட ரோலில் நடித்திருந்தார்.
திரை துறையில் தனது ஆரம்ப காலங்களில் தனது நிறத்திற்காகவும், தோற்றத்திற்காகவும் விமர்சிக்கப்பட்டார். இதன் காரணமாக சில படங்களில் லீடிங் ரோலில் நடிக்கும் வாய்ப்புகளை இழந்ததாக அவரே கூறி இருந்தார். இருப்பினும் தற்போது தனது விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பின் காரணமாக பல வெற்றித் திரைப்படங்களில் லீடிங் ரோலில் நடித்து மக்கள் மனதை கவர்ந்து வருகிறார்.
இவர் தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ளார். ஹிந்தியில் டாடி படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் ஐஸ்வர்யா ராஜேஷ். தனது தாய்மொழி தெலுங்காக இருந்தாலும் தமிழ்நாட்டில் இவரை தெரியாதவர்களே இருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும். ஐஸ்வர்யா ராஜேஷ் இதுவரை தனது திரை பயணத்தில் முப்பதிற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பல வெற்றிப் படங்களை தந்துள்ளார்.
இன்று பிறந்த நாள் காணும் ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் மேலும் பல வெற்றிப்படங்களோடு தனது திரை பயணத்தை தொடர சூர்யன் FM சார்பாக மனமார வாழ்த்துகிறோம்.