Cinema News Specials Stories

ரஜினிகாந்த் எனும் வசீகரம்!

வசீகரம் என்ற சொல்லிற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். நான்கு தசாப்தங்களை தாண்டி ஒரு நடிகரால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைக்க முடியும் என்பதை திரையுலகில் சாத்தியப்படுத்தியது ரஜினியின் அபாரமான ஸ்டைல்.

சிவாஜி ராவாக பெங்களூரில் பஸ் கண்டக்டராக 134 ஆம் நம்பர் பஸ்ஸில் பணியாற்றியபோதே ரஜினிகாந்தின் ஸ்டைல் பெங்களூரு முழுவதும் பிரபலம். பகட்டாக உடை அணிந்து கூட்ட நெரிசலில் ரஜினி ஸ்டைலாக டிக்கெட் கிழிக்கும் காட்சியை காணவே கல்லூரி பெண்கள் ரஜினியின் பஸ்ஸில் விரும்பி ஏறுவார்கள் என ரஜினியே பல மேடைகளில் தெரிவித்துள்ளார்.

பேருந்தில் நடத்துனராக பணியாற்றினாலும் நடிகனாக வேண்டும் என்று தீராத வேட்கையில் சென்னைக்கு வந்து திரைப்பட கல்லூரியில் நடிப்பு பயிற்சி பெற்றார் ரஜினிகாந்த், இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ரஜினிகாந்த் கேட்டை திறந்து வீட்டிற்குள் நுழையும் அந்த முதல் காட்சி தமிழ் ரசிகர்கள் மனதிலும் அவர் நுழைந்த முதல் காட்சியாக அமைந்தது.

முதல் படத்திலேயே ஒரு நடிகரை 3 திரைப்படங்களுக்கு ஒப்பந்தம் செய்வது அந்நாளில் சாத்தியமில்லாத ஒன்று. ஆனால் ரஜினியின் வசீகரத்தை பார்த்த கே.பாலச்சந்தர் ரஜினியை மூன்று முடிச்சு, அவள் ஒரு தொடர்கதை திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பு உள்பட 3 படங்களுக்கு ஒரே நேரத்தில் ஒப்பந்தம் செய்தார்.

மூன்று முடிச்சு திரைப்படத்தில் சிகரெட்டை தூக்கிப்போட்டு ரஜினிகாந்த் பிடித்த ஸ்டைல், யார் இந்த நடிகர் என ஒட்டுமொத்த உலகையும் திரும்பிப் பார்க்க வைத்தது. சிகரெட் பிடிக்கும் காட்சிகள் மூலம் அடையாளம் கிடைத்தாலும், தனக்கு ஏற்பட்ட பாதிப்புகளை சுட்டிக்காட்டி நல்ல உள்ளத்துடன் ரசிகர்களை புகைபிடிக்க வேண்டாம் என பலமுறை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் சிறந்த வில்லனாகவும், ஸ்டைல் மன்னனாகவும் வளர்ந்த ரஜினிகாந்திற்கு எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் நடித்த புவனா ஒரு கேள்விக்குறி திரைப்படம் சிறந்த குணச்சித்திர நடிகர் என்ற அடையாளத்தை தந்தது. அதன்பின் படு பிசியான நடிகராக மாறிய ரஜினிகாந்த் 1978ஆம் ஆண்டில் மட்டும் 20 திரைப்படங்களில் நடித்து ஆச்சரியப்படுத்தினார்.

கலைஞானம் தயாரிப்பில் பைரவி திரைப்படத்தில் நாயகனாக களமிறங்க, அவருக்கென தனி ரசிகர் கூட்டம் உருவானது. பைரவி திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட்ட கலைப்புலி தாணு ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் என தலைப்பிட்டு திரைப்படத்தை விளம்பரம் செய்தார். அதுவே பின்னர் மைல்கல்லாக நிலைத்துப் போனது.

முள்ளும் மலரும், ஜானி போன்ற தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தும் திரைப்படங்களில் நடித்து வந்த ரஜினிகாந்த், ஒருகட்டத்தில் முழுக்க வணிக ரீதியிலான கமர்ஷியல் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். 1990ஆம் ஆண்டுக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான எஜமான், பாட்ஷா, முத்து, அருணாச்சலம், படையப்பா ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து மாபெரும் வெற்றி பெற்று ரஜினிகாந்தின் வர்த்தக எல்லைகளை மேலும் விரிவுபடுத்திக் கொண்டே சென்றன.

டான்சிங் மகாராஜ் என்ற பெயரில் ஜப்பானில் வெளியான முத்து திரைப்படம் மாபெரும் வெற்றிபெற உலகின் பல நாடுகளிலும் ரஜினிகாந்தின் புகழ் உச்சம் பெற்றது. தமிழ் சினிமாவின் முதல் 50 கோடி வசூலித்த படம் தொடங்கி முதல் 200 கோடி வசூல் என முத்திரை பதித்த ரஜினி, ஆசியாவில் அதிக சம்பளம் பெறும் இரண்டாவது நடிகர் என்ற பெருமையை பெற்றார்.

ராஜா சின்ன ரோஜா திரைப்படத்தில் கார்ட்டூன் கதாபாத்திரங்களுடன் நடனமாடி நடித்ததன் மூலம் அனிமேஷன் கதாபாத்திரங்களுடன் தமிழில் முதலில் நடித்த நடிகர் என்ற சிறப்பைப் பெற்ற ரஜினிகாந்த், கோச்சடையான் திரைப்படத்தில் மோஷன் கேப்சர் தொழில் நுட்பத்திலும், டூ பாயிண்ட் ஓ திரைப்படத்தில் 3டி தொழில்நுட்பத்திலும் நடித்து சினிமாவின் அனைத்து பரிமாணங்களிலும் நடித்த நடிகர் என்ற சிறப்பைப் பெற்றார்.

168 திரைப்படங்களில் நடித்து முடித்துள்ள ரஜினிகாந்த் தமிழ் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் என பல மொழிகளிலும் நடித்து கலைச்சேவை ஆற்றியதற்காக பத்ம பூஷன், பத்ம விபூஷன் உள்ளிட்ட இந்திய அரசின் மிக உயரிய விருதுகளை பெற்றுள்ளார். 46 ஆண்டுகள் திரை உலகில் கடந்துவிட்டாலும் ரஜினியின் 169 வது திரைப்படமான ஜெயிலர் திரைப்படத்திற்கும் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவுவதே அவரின் திரை ஆளுமைக்கு ஆகச் சிறந்த எடுத்துக்காட்டு.

Article By Tamilnada Ramesh

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.