Cinema News Specials Stories

நம்ம வீட்டு பிள்ளை சிவகார்த்திகேயன் !!

Sivakarthikeyan

தற்போதைய தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு சிகரம்.., ரசிகர் மனதில் நீங்காத இடம் பிடித்த இமயம் என்றே சொல்லலாம். பாலிவுட் சினிமா வரலாற்றில் டிவியில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து சாதித்த ஷாருக்கான் கண்ட தமிழ் ரசிகர்கள் இது எல்லாம் தமிழ்நாட்டில் நடக்க வாய்ப்பே இல்லை என்று சொன்னதை தமிழ் சினிமாவில் நம் கண் முன்னே நிகழ்த்தி காட்டியவர் சிவகார்த்திகேயன்..,

பொதுவாக திரை உலகிற்கு வந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்குவதே நாயகர்களின் சாதனை.., ஆனால் அதற்கு விதி மாறலாய் சிவகார்த்திகேயன் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கிய பின்னரே திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் நம் இன்றைய கதையின் Hero சிவகார்த்திகேயன்..,

சிவகார்த்திகேயன் குடும்பத்தில் தந்தைக்கும் தாய்க்கும் சிறந்த மகனாகவும் தனது ஒரே அக்காவிற்கு சிறந்த தம்பியாகவும் இருப்பவர்.., சிறுவயதிலே தனது தந்தை சிறை பிரிவு துறை அதிகாரி அவர்களின் மரணம்.., இன்றளவும் சிவகார்த்திகேயனால் தாங்க முடியாத ஒன்றே.. குடும்பத்தில் கடைசி பிள்ளை என்பதால் தனது பொறுப்புணர்ந்து படித்து இன்று நம்ம வீட்டு பிள்ளையாக சிவகார்த்திகேயன் திகழ்கிறார்..,

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் மாவீரன் சிவகார்த்திகேயன் திருச்சியில் பொறியியல் பயின்றவர்.., கல்லூரி படிப்பின் போதே நண்பர்களை மகிழ்விக்க அவ்வப்போது நகைச்சுவையாக பேசுவது மிமிக்கிரி செய்வதும் அவருக்கு இயல்பாகவே இருந்த திறமை..,

அதை மெருகேற்ற சென்னை வந்து தனியார் தொலைக்காட்சியில் ஸ்டாண்ட் அப் காமெடி மூலமாக அறிமுகமாகி பின் தனக்கே உண்டான மிமிக்கிரி ஸ்டைலில் ரசிகர்களை தன் வசப்படுத்தி.., போட்டியாளர்களில் ஒருவராய் களமிறங்கி போட்டியை வென்ற ஒருவராய் சாதித்துக் காட்டியவர் நம் கதையின் ஹீரோ சிவகார்த்திகேயன்..,

பின்பு குறும்படங்களில் நடித்து தன்னை பட்டை தீட்டிக் கொண்டார்.., ஆரம்ப காலத்தில் இயக்குனர் அட்லியின் முகப் புத்தகம் எனும் குறும்படத்தில் நாயகனாக அறிமுகமானவர் நம் சிவகார்த்திகேயன்.., அதன்பின் … அட்லி தான் எடுக்கும் திரைப்படத்தில் உன்னை நாயகன் ஆக்குகிறேன் என்று அவர் அளித்த உறுதியை நிறைவேற்ற முடியாமல் போக நமது நாயகனுக்கு முதல் வாய்ப்பு தவறியது.., பிறகு நடன இயக்குனர் ராஜூ சுந்தரத்தின் இயக்கத்தில் அஜித் நடித்த ஏகன் திரைப்படத்தில் தான் முதல் வெள்ளித்திரை வாய்ப்பு கிடைத்தது.., ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் அந்தக் காட்சிகள் நீக்கப்படவே இரண்டாவது முறையாக அவரின் வெள்ளித்திரை கனவு பலிக்காமல் போனது..,

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பதைப் போல நமது நாயகன் முயற்சிப்பதை மட்டும் நிறுத்தவே இல்லை.., அவருக்கு கிடைத்த பாம்போ.., கயிரோ.., எது கிடைத்தாலும் அது பிடித்து ஏற தயாராக இருந்த நமது நாயகன் இயக்குனர் பாண்டியராஜன் கண்ணில் பட்டார்.., அப்போதே உதயமானது நமது நாயகன் சிவகார்த்திகேயனின் வெள்ளித்திரை அறிமுகம்.., மெரினா திரைப்படத்திலிருந்து அலையடிக்க தொடங்கியது.., பிறகு நடிகர் தனுஷின் 3 திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தனக்கே உண்டான நகைச்சுவை உணர்வின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.., இப்படி படிப்படியாக தொடங்கிய அவரது கலைப்பயணம்.., ஒரு குறுகிய காலத்திற்குள் தமிழ் சினிமாவின் தன்னிகரில்லா தளத்தை தனக்காக உருவாக்கிக் கொண்டார்..,

நடிப்பதோடு நிறுத்தி விடாமல் பாடல்கள் எழுதுவது பாடுவது என தனக்குத் தெரிந்த அனைத்தையும் ரசிகர்கள் ரசிக்கும் படி செய்யத் தொடங்கினார்.., அவர் எழுதும் பாடல்களுக்கு வாங்கும் சம்பளத்தை பாடல் ஆசிரியர் நா முத்துக்குமார் இறப்பில் வாடும் அவரது குடும்பத்திற்கு இன்றளவும் கொடுத்து வரும் ஒரு மாமனிதன் தான் நமது கதையின் நாயகன் சிவகார்த்திகேயன்..,

நண்பனுக்காக சொந்தமாக படம் தயாரிப்பது.., படிப்பதற்கு உதவி என்று கேட்டு வருவோருக்கு இல்லை என்று சொல்லாமல் அறிவு கண்களை திறந்து வைக்கும் ஒரு பேரொளியாகவே வாழ்ந்து வருகிறார்..,

எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே ,ரஜினி முருகன் ,ரெமோ,காக்கி சட்டை , வேலைக்காரன், கானா ,டான் ,டாக்டர், மாவீரன் என அடுத்தடுத்து வைக்கும் ஒவ்வொரு படிகளும் வெற்றிப் படிகளாக மாற்றிக் காட்டியவர் நம் நாயகன்..,

எத்தனை வெற்றிகள் வந்தாலும் அதை தன் தலைக்கு ஏறாமல் பார்த்துக் கொள்ளும் சிவகார்த்திகேயன்.., மூச்சுவிட தவறினாலும் முயற்சிக்க தவறாதே என்ற மொழிக்கு ஏற்றார் போல் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு புது முயற்சிகளை தொட்டுப் பார்க்க முயற்சிப்பவர்.., அதற்காக ஒரு துளி சம்பளமும் வாங்காமல் அவர் நடித்துக் கொடுத்த படம் தான் இன்று வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கும் அயலான்..,

பாடல் வரிகளில் ஒன்றான ஏ…முன்னாடி சுக்கிரன் கையகட்டி நிக்குதே!!! என்ற வரிகள் இவருக்கு பொருத்தமானது என்றே சொல்லலாம் ..

தமிழ் ரசிகர்கள் மனதில் அண்ணனாய் தம்பியாய் மகனாய் தோழனாய் மொத்தத்தில் நம்ம வீட்டுப் பிள்ளையாய் நம்மோடு கலந்துவிட்ட பிரிக்க முடியாத உறவாய் தவிர்க்க முடியாத தன்னிகரில்லா வெற்றி நாயகன் பிறந்தநாள் உங்களோடு சேர்ந்து கொண்டாடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறது சூரியன் FM

சேது மாதவன், சூரியன் FM சேலம்