Specials Stories

இந்த பெண் தான் ’செவிலியர் தினம்’ கொண்டாட காரணம்!

குழந்தைகள் தினம், ஆசிரியர் தினம், காதலர் தினம், தந்தையர் தினம், அன்னையர் தினம் என என எத்தனையோ தினங்கள் கொண்டாடப்படுகின்றது. அது ஒவ்வொன்றுக்கும் பின்னாலும் ஒவ்வொரு காரணங்கள் இருக்கும். அந்த வகையில் வருடம் தோறும் மே மாதம் 12ஆம் தேதி சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்படுகின்றது.

இந்த தினத்தை கொண்டாட வேண்டும் என்று 1953 ஆம் ஆண்டு டாரத்தி சதர்லாந்து என்பவர் அப்போது ஐநா சபையில் செயலாளரிடம் அனுமதி கேட்ட பொழுது அது அப்போது மறுக்கப்பட்டது. பின்னாளில் 20 ஆண்டுகள் கழித்து 1974-ல் இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, அப்போதிலிருந்து மே மாதம் பனிரெண்டாம் தேதி இந்த தினம் கொண்டாடப்படுகின்றது. இந்த வருடத்திற்கான அந்த கருத்தியல் என்னவென்றால்” நமது செவிலியர் – நமது எதிர்காலம்” என்ற தலைப்பில் இந்த வருடத்திற்கான செவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த செவிலியர் தினம் கொண்டாடுவதற்கு பின்னால் ஒருவருடைய பங்களிப்பும், மிகப்பெரிய சேவையும் அடங்கி இருக்கிறது. 1820 ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி இங்கிலாந்தில் மிகப்பெரிய செல்வ செழிப்புமிக்க ஒரு பாரம்பரியமான குடும்பத்தில் பிறந்தார் ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல். 1837 ஆம் வருடம் தனது 17ஆம் தேதி வயதில் அவருக்கு செவிலியர் ஆக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

1845 ஆம் வருடம் தனது 25 வது வயதில் அதை அவர் அறிவித்த போது அவரது ஒட்டுமொத்த குடும்பம் அதை எதிர்த்தது. குறிப்பாக அவரது அம்மா அதைக் கடுமையாக எதிர்த்தார். காரணம் அன்றைய காலகட்டத்தில் செவிலியர்கள் என்பது மிக மிக எளிமையான நிலையில் இருப்பவர்கள் மட்டுமே செய்யக்கூடிய தொழிலாக பார்க்கப்பட்டது.

அது ஒரு சேவையாக கருதப்படாமல், பொருளாதாரத்தின் பின்னிலையில் இருக்கின்றவர்கள் மட்டுமே இந்த தொழிலுக்கு வருவார்கள் என்ற நிலை இருந்த காரணத்தினால் பெரிய செல்வ செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்தவர் இந்த பணிக்கு வருவதை கடுமையாக ஒட்டுமொத்த குடும்பமும் எதிர்த்தது. ஆனால் இதையெல்லாம் தாண்டி தான் அவர் இந்த செவிலியர் துறைக்கு வந்தார்.

1846 ஆம் ஆண்டு அவர் ஜெர்மன் நாட்டுக்கு சென்ற பொழுது சரஸ்வதி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு செவிலியர்கள் செய்கின்ற சேவையை பார்த்து பிரமித்துப் போனார். அங்கு நான்கு மாதம் தங்கி மிகப்பெரிய அர்பணிப்பான அந்த பணியின் பயிற்சியை பெற்றார். தன்னுடைய சொந்த வாழ்க்கையைக் கூட செவிலியர் பணிக்காக மாற்றிக்கொண்டார்.

அவர் காதலித்து வந்த ரிச்சர்ட் மான்டன் மில்னஸ் என்பவரை மறுத்துவிட்டு தனது புனித சேவைக்காக செவிலியர் பணியை தேர்ந்தெடுத்து வாழ்ந்தார். பின்னாளில் சிட்னி ஹேர் பேக் என்கின்ற அரசியல்வாதியுடன் ஒத்த கருத்தை கொண்டிருந்ததால் அவருடன் நீண்ட நாட்கள் நட்பு உணர்வில் இருந்ததாக சொல்லப்படுகின்றது.

1854-ல் இருந்து 56 வரை நடந்த ரஷ்யாவுக்கும் பிரான்சுக்கும் இடையே ஏற்பட்ட கிரீமியப் போரில் பல வீரர்கள் படுகாயம் அடைந்திருந்தார்கள். அப்பொழுது நைட்டிங்கேலும் அவரால் பயிற்சிக்கப்பட்ட 38 செவிலியர்களும் இணைந்து, போரில் பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு மருத்துவ உதவி செய்யச் சென்றார்கள். ஆனால் அங்கு போதிய மருந்துகளும் உபகரணங்களும் இல்லாத காரணத்தினாலும் நோய்கள் பரவுகின்ற காரணத்தினாலும் உயிரிழப்பு அதிகம் இருந்தது.

இதையெல்லாம் ஆய்வு செய்து ஒரு பெரும் கட்டுரையாக அரசுக்கு அனுப்பி வைத்தார். அப்போது இங்கிலாந்தில் ஆட்சியில் இருந்த ராணி விக்டோரியா இதை கருத்தில் கொண்டு அவருக்கு மேலும் அதிகாரங்கள் கொடுத்து இதைப் பற்றிய ஒரு ஆய்வறிக்கையை தருமாறு பணிக்கப்பட்டார். இப்படி அரசின் அங்கீகாரமும் ஆதரவும் இருந்ததால் மக்கள் மத்தியில் ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேலின் புகழ் பெருகியது.

1855 நவம்பர் மாதம் 29ஆம் தேதி துருக்கி நாட்டில் ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் நிதி மையம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு 45 ஆயிரம் டாலர் மதிப்பில் ஜூலை 9, 1860 ஆம் ஆண்டு நைட்டிங்கேல் பயிற்சி பாடசாலை ஒன்று அமைக்கப்பட்டது. பின்னாளில் லண்டன் கிங்ஸ் காலேஜில் ஒரு பகுதியாக இது இணைக்கப்பட்டது. 1869 ஆம் ஆண்டு எலிசபெத் பிளாக்வெல் என்பவருடன் இணைந்து முதல் பெண்கள் கல்லூரியை ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் நிறுவினார்.

1883 ஆம் ஆண்டு ராணி விக்டோரியாவிடமிருந்து செஞ்சிலுவையை பெற்றார். இப்படி செவிலியர் பணியை உலக தரத்துக்கு உயர்த்தி மக்கள் மத்தியில் செவிலியர்களையும் அவர்கள் பணியையும் ஒரு புனிதமிக்க சேவை மிக்க பணியாக மாற்றி அமைத்த பெருமை ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் என்ற இரக்கமனம் கொண்ட அந்த பெண் தேவதைக்கே சேரும்.

அப்படிப்பட்ட ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினமான மே மாதம் 12ஆம் தேதி ஒவ்வொரு வருடமும் உலக செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது. தங்களின் குடும்ப உறுப்பினர்களை போன்று உடல்நிலை பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கு மருத்துவ சேவை புரிகின்ற செவிலியர்களின் பணிக்கு எவ்வளவு விலை கொடுத்தாலும் அதை ஈடு செய்ய முடியாது.

குடும்ப உறுப்பினர்களுக்கே மருத்துவ சேவைகளை செய்ய தயங்குகின்ற பல ஆட்கள் இருக்கும் போது எந்தவித சங்கோஜமும் இல்லாமல் முக சுளிப்புகளும் இல்லாமல் அவர்கள் ஆற்றுகின்ற சேவைக்கு எப்போதும் மதிப்பும் மரியாதையும் செலுத்துகின்ற வகையில், உலகத்தில் இருக்கின்ற அத்தனை செவிலியர்களுக்கும் மே 12 ஆம் தேதியான இன்றைய தினத்தில் சூரியன் எப்எம் சர்வதேச செவிலியர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

Article By RJ K S Nadhan