Specials Stories

களம் கண்ட காளைகள்

திமிர் பிடித்த திமில் கொண்ட காளைகள், அதை அடைக்க திமிரும் தமிழனின் வரலாறும் பல நூற்றாண்டை தாண்டியது. ஜல்லிக்கட்டு – இது வீரத்திற்கான விளையாட்டு மட்டும் அல்ல.. காளைக்கும், தமிழனின் வீரக்கலைக்கும், அதன் பின் இருக்கும் அழியாத அன்பிற்குமான விளையாட்டு.

தொன்றுதொட்டு வந்த தமிழனின் வரலாற்றில் பிரிக்கமுடியாத ஒன்றாக ஜல்லிக்கட்டு இருந்துவருகிறது. அதை பிரிக்க நினைத்த போதும், தடுக்க நினைத்த போதும் அதற்காக ஒன்று கூடி அதை வென்று காட்டியவர்கள் நாம்.

கழனியில் விவசாயத்திலும் களத்தில் வீரத்திலும் தன் அடையாளத்தை நிரூபிக்கும் நம் காளைகள் – நம் தமிழனின் செல்லப்பிள்ளைகள்.

பல களம் கண்டு மக்கள் மனதை மட்டுமல்ல களத்தையும் காலத்தையும் வென்ற சில காளைகளை பற்றி தெரிந்துக்கொள்வது நம் பொறுப்பு… காலம் சொல்லும் பல களம் கண்ட காளைகள் நமக்கும் நமது தமிழ் இனத்திற்கும், வீரத்திற்கும் செருகிற்க்கும் அடையாளம்…

செல்லியம்மா காளை :
6 வருடங்களுக்கு முன்பு பரம்புப்பட்டியில் உள்ள செல்லியம்மன் கோயில் வாசலில் ஆதரவற்ற ஒரு கன்றுக்குட்டி இருந்தது. அங்கு இருந்த ஊர் மக்கள், கன்றின் சோர்வான முகம் கண்டு உணவு, தண்ணீர் அளித்துனர். செல்லியம்மன் கோயில் வாசலில் இந்த கன்றை கண்டெடுத்ததால், ‘செல்லியம்மா’ என்ற பெயரை சூட்டி, அதை பரம்புப்பட்டி கோயில் காளையாக வளர்க்க தொடங்கினர். அதன்பிறகு அந்த ஊர் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து செல்லியம்மாவுக்கு ஜல்லிக்கட்டு காளைக்கான பயிற்சி அளிக்க தொடங்கினர்.

5 ஆண்டுகளுக்கு முன், முதன்முதலாக செல்லியம்மா ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்று தோல்வியடைய, அந்த ஊர் மக்கள் மற்றும் பெரியவர்கள், இளைஞர்களையும் செல்லியம்மாவையும் கேலி செய்துள்ளனர். ஆனால் அந்த இளைஞர்களில் ஒருவரான தினேஷ் என்பவர் சளைக்கவில்லை. ஓர் ஆண்டுக் காலம் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அழைத்துச் செல்லாமல், தினமும் பயிற்சி கொடுத்தார்கள்.

செல்லியம்மா காளை

2017-ம் ஆண்டுதான் செல்லியம்மாவை இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு அழைத்துச் சென்றனர். கற்று தந்த பயிற்சிக்கும் அவர்கள் உழைத்த உழைப்புக்கும் இந்த முறை செல்லியம்மா ஏமாற்றவில்லை. களத்தில் இறங்கிய செல்லியம்மா, தன்னை நெருங்கிய காளையர்களைச் சொல்லி சொல்லி அடித்தது. சென்ற இடமெல்லாம் வெற்றி வாகை சூடியது. கடந்த 3 ஆண்டுகளில் 20 ஜல்லிக்கட்டுகளில் செல்லியம்மா வெற்றி பெற்றுள்ளது. உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 2019-ல் சிறந்த காளைக்கான விருதைப் வென்று தன்னை கேலிசெய்த ஊர் மக்களின் முகத்தில் வெற்றி வாசத்தை வீச செய்தது.

கேலி செய்தவர்கள் அனைவரும் அன்று செல்லியம்மாவால் எங்கள் ஊருக்கே பெருமை என்றும், செல்லியம்மாவால் தான் எங்கள் ஊர் பெயர் உலகம் முழுவதும் பரவியது என்றும் சொல்லி கொண்டாட தொடங்கினார்கள். தோல்விகளும் அவமானங்களும்தான் வெற்றிக்கான முதல்படி என்பது மனிதர்களுக்கு மட்டும் அல்ல.. செல்லியம்மா-விற்கும் தான் என்று வெற்றி சொல்லாமல் சொன்னது.

சத்தியமங்கலம் மறை! – மறைகாளை :
புதுக்கோட்டை மாவட்டம், பழனியாண்டி என்பவரின் வீட்டில் கன்றுக்குட்டியாக பிறந்த மறை. வளர வளர அதன் திமிராலும், யாருக்கும் அடங்காத குணத்தாலும் அதை ஜல்லிக்கட்டு காளையாக பயிற்சி தர ஆரம்பித்தார்கள். கிராம மக்களின் செல்லப்பிள்ளையாக வளர்ந்த மறைகாளை தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துக்கொண்டு உள்ளது.

களத்தில் மறைக்காளை இருக்கிறது என்றால், வீரர்கள் மறைந்துகொள்வார்கள். திருச்சி, திண்டுக்கல், மதுரை, தேனீ, கம்பம் முதலிய மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு என்றால் அங்கு மறைகாளையின் ஒரு ஆட்டம் இருக்கும். தன்னுடைய 20-வது வயதில் மறைக்காளை மறைந்தது. இறுதியாக 2018-ல் ஜல்லிக்கட்டில் விளையாடி சிறப்பான ஒரு ஆட்டத்தை அளித்தது மறைக்காளை . திடீரென ஏற்பட்ட உடல்நல குறைவால் உடல் குன்றிய மறைக்காளை சிகிச்சை பலனின்றி 2018 இறந்தது.

மறைகாளை

தன் ஊருக்கு தனிப்புகழை தேடித்தந்த மறைக்காளையின் மறைவை அந்த ஊர் மக்களால் ஜீரணிக்கமுடியவில்லை. கிராமமே ஒன்று கூடி, கதறி அழுது, அடக்கம் செய்து, மாதி கட்டி வழிபாடு செய்கிறார்கள். காளைகள் ஒரு கால்நடை என்பதையும் தாண்டி, ஒரு வீட்டின் பிள்ளையாகவும், ஊரின் செல்லப்பிள்ளையாகவும், பேரும் புகழோடும் வாழ்ந்து, வளர்ந்து, பல களம் கண்டு, மறைந்தது மறைக்காளை.

ராவணன் காளை :
காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்று, நாடு திரும்பிய அனுராதாவிற்கு தன் நண்பரின் வழியாக பரிசாக வந்த காளை தான் இராவணன். அனுரதாவின் அண்ணன் மாரிமுத்து தான் இந்த காளையின் மூர்கத்தனத்தை கண்டு ராவணன் என பெயர் வைத்தார். மாரிமுத்து தன் காளையான அசுரனுடன் ராவணனுக்கும் ஜல்லிக்கட்டிற்கான பயிற்சி கொடுத்தார். சென்ற வருடம் களம் காண ஆரம்பித்தது இராவணன்.

அனுராதாவுக்கு பரிசாக கிடைத்த காளை என்பதால் அவரது பெயரிலேயே அவனியாபுரத்தில் முதன் முதலில் களமிறக்கினார்கள். களத்தில் நின்று விளையாடிய ராவணனை அந்த களமே பாராட்டியது. ஊடகங்களின் பார்வையும் ராவணன் மேல் பட்டது. சிறந்த காளை என்ற பெயரோடு அன்று வீட்டுக்கு வந்தது.

ராவணன் காளை

அடுத்த நாள் உலகப் புகழ் அலங்காநல்லூரில் தன் தடத்தை பதித்தது இராவணன். களத்தில் இறங்கிய இராவணன் அனைவரையும் கதிகலங்க வைத்தது. பெயருக்கு ஏற்றவாறே ராவணனின் அந்த ஆட்டம், ஒரு வெறித்தனமான ஆட்டம். அது வெறியாட்டம். அலங்காநல்லூரில் அன்றைய நாள் முழுவதும் ராவணன் ஆக்ரோஷமான ஆட்டத்தின் பேச்சுதான்.

துருவன் காளை :
திண்டுக்கல் சண்முகம் பல வருடங்களாக ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்துவருகிறார். அவற்றில் ஒன்று தான் துருவன். நாட்டுமாடும், காங்கேய காளையின் கலவை தான் இந்த துருவன். இக்காளை அவ்வூர் மக்களின் மிக விருப்பமான ஒரு காளை. தினமும் துருவனை பார்க்கவே ஒரு நாளைக்கு நிறைய கிராம மக்கள் வருவார்கள்.

துருவன் காளை

பலத்த எதிர்பார்ப்போடு முதலில் குமாரபாளையம் ஜல்லிக்கட்டில் களம் இறங்கியது துருவன். மிடுக்கான உடலமைப்பும், மிரளவைக்கும் கண்பார்வையும், காற்றை கிழிக்கும் வேகமும், சுற்றி இருப்பவர்களின் கரகோஷமும், களத்தில் துருவனின் பெயர்சொல்லும். கடந்த ஆண்டு பாலமேடு ஜல்லிக்கட்டில் 677 காளைகளில் முதலாவது காளையாக, அவ்வருடத்தின் சிறந்த காளையாக துருவன் தேர்ந்தெடுக்கப்பட்டான்.

மதுரை அப்பு காளை :
ஜல்லிக்கட்டிற்கு வரும் காளைகளெல்லாம் போட்டிக்கு மட்டும் தயாராவது கிடையாது. 1000 காளைகளில் ஒரு 20க்கும் மேற்பட்ட காளைகள் தான் போட்டிக்கென்றே தயார் செய்து வளர்க்கப்படும் காளைகள். அந்த வரிசையில் தனக்கென ஒரு இடத்தை இன்றுவரை தக்கவைத்து ஒன்று அப்பு.

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டில் எத்தனை காளைகள் வாடிவாசல் தாண்டி வந்தாலும் மாடுபிடி வீரர்கள் மத்தியில் சிறு சலனம் கூட இருக்காது. ஆனால் மதுரை மண்ணில் மட்டுமல்ல மாநில அளவில் நடக்கும் ஜல்லிக்கட்டில் ‘அப்பு காளை’ என்ற ஒரு பெயரை கேட்டாலே மாடுபிடிவீரர்கள் மனதில் ஒரு கலக்கம் ஏற்படும் அது மிகையாகாது. எப்பேர்ப்பட்ட மாடுபிடி வீரனாக இருந்தாலும் ‘அப்பு வருது’ என சொன்னாலே பக்கத்தில் நெருங்க யோசிப்பர்கள்.

மதுரை அப்பு காளை

இதுவரை தான் கலந்துகொண்ட போட்டிகளில் தோல்வியே அறியாத காளை என ஜல்லிக்கட்டு வட்டாரத்தில் பேசப்பட்ட ஒரே காளை. ‘ஜல்லிக்கட்டின் சத்ரியன்’, ‘ஆடுகளத்தின் ஆட்ட நாயகன்’ என காளை பிரியர்களால் வர்ணிக்கப்பட்ட ஒரே காளையும் இந்த அப்புதான்.

மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் பி.ராஜசேகர். இவரது குடும்பம் பரம்பரை, பரம்பரையாக ஜல்லிக் கட்டில் பெரும் ஈடுபாடு கொண்டது. இன்றைக்கும் வீட்டில் 10-கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார். ஜல்லிக்கட்டு வீரர்களுக்கும், விழாவில் பங்கேற்போருக்கும் காப்பீடு உள்ளிட்ட பல வசதிகளை செய்து கொடுத்தவர். அப்புகாளையின் சொந்தக்காரர் இவர்.

வாடிவாசலை விட்டு வெளிவந்தவுடன் வாசலின் அருகிலேயே சுற்றி தனது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் குணம் கொண்டது அப்பு. வீரர்களின் கூட்டத்துக்குள் புகுந்து வீரர்களை பந்தாடிவிட்டு புழுதியை கிளப்பி நிற்கும் அப்புவின் தோரணை அசாத்தியமான ஒன்று. அப்பு காளைக்கு கொம்பு சிறிதுதான், அந்தக் கொம்பினால் எவ்வளவு பெரிய பலசாலியாக இருந்தாலும் தூசுபோல தட்டிவிட்டு, அவர்களை தூக்கி பந்தாடும் திறமை கொண்டது அப்பு.

அதனுடைய திமிலில் கை வைத்து அணைத்தால், அவரை கொம்புக்கு வரவைத்து தூக்கி எறிவதில் கில்லாடி அப்பு. களத்தில் அப்பு என்ன நினைக்கும் என்று யாருக்கும் தெரியாது. இடப்பக்கம் வருமென்று நினைத்தால், வலது புறம் வரும். இராணுவவீரன் களத்தில் எப்படி யோசிப்பானோ அதுபோல களத்தின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு புரிந்து விளையாடும் அப்பு.

அப்பு காளையை அவிழ்த்து விடும்போது சுற்றி வைக்கப்பட்டிருக்கும் ஒலிபெருக்கியில் “ஓடிப்போ, ஓடிப்போ அப்பு வருது ஓடிப்போ”, முடிஞ்சா பிடிப்புப்பாருடா” என்ற குரல் திரும்ப திரும்ப கேட்டவாறே இருக்கும். பிற ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போரும் விரும்பும் காளைகளுள் முக்கிய இடம் அப்புவுக்குத்தான். ஒவ்வொரு வீரனையும் தேடி தேடி கூப்பிடும். தொட நினைத்த ஒவ்வொருவரும் தூரத்தில் தூக்கி போட்டுக்கொண்டே போகும்.

ஜல்லிக்கட்டு ஒவ்வொரு வீரனும் ஒரு கனவே அப்புவை அடக்கவேண்டும் என்பதுதான். ஆனால் அது அவர்களுக்கு கனவாகவே சென்றுவிட்டது. வரலாற்றில் சிறந்த அரசர்களின் பெயர்களை கேட்டான், எப்படி ராஜராஜசோழனை சொல்வோமோ, அதுபோல ஜல்லிக்கட்டில் சிறந்த காளை எதுஎன்று கேட்டால், யோசிக்காமல் சொல்லும் ஒரே பெயர் அப்பு..

ஆனால் அந்த அப்பு இன்று நம்மிடம்இல்லை. தோல்வியை கண்டதில்லை என்ற பெருமையுடனே 2014-ம் ஆண்டு இறந்துபோனது. அப்புவின் தோட்டத்தில், வண்டிமாடு அப்புவை மோதியதில் எதிர்பாராத விதமாக நடந்த இந்த விபத்தில் அப்பு சிறிது நாட்கள் கழித்து இறந்துவிட்டது.

அப்புவின் இழப்பு அதை உரிமையாளருக்கு மட்டும் அல்ல, ஊருக்கே, நாட்டுக்கே பெரிய இழப்பு தான். அப்பு இறந்த செய்தி கேட்டு துன்பப்பட்ட மாடுபிடிவீரர்கள் ஏராளம். மனிதர்களுக்கு செய்யும் சடங்குகளும் இந்த அப்பு காளைக்கு செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இன்று வரை அப்புவின் நினைவு நாளை நினைவுபடுத்தி கொண்டுதான் இருக்கிறார்கள்.

காளைகளுக்கு மனிதர்களுக்கும் இருப்பது ஒரு உறவு மட்டும் அல்ல. அது ஒரு ஆழமான காதல். அதைத்தான் நம் சங்ககால இலக்கியமும் பதிவு செய்கிறது.

களம் கண்ட காளைகளும், காளைகளை எதிர்கொண்ட காளையர்களும் தமிழ் இனத்திற்கும், பாரம்பரியத்திற்கும், வீரத்திற்கும், பெருமைக்கும் என்றுமே அடையாளமாவார்கள்…