Specials Stories

என்னோடு ஒரு சங்கீதம் ! கே.ஜே.யேசுதாஸ் !

k.j.yesudas

”பச்சைப் புல் மெத்தை விரிக்கும்,
அங்கே இளம் தத்தைகள் தத்திக் குதிக்கும்”

இந்த வரிகளை படிக்கும்போதே நம்ம மனக் கண்கள்ல ஒரு பசுமையும் அதோட சந்தோஷமும் தெரியும், அது கூடவே இவரோட கந்தர்வ குரலும் கேட்டா, நீங்களும் இவரோட ரசிகர்ன்னு அர்த்தம். ‘கான கந்தர்வன்’ இந்த அடைமொழியோடும், பத்மவிபூஷன் விருதோட ரசிகர்களோட மனசுலயும் அன்றாட வாழ்க்கையிலயும் இவரோட குரல் கலந்து இருக்கு.

பாடகர் கே.ஜே.ஏசுதாஸ் அவர்களோட புகழ் பாட அவரோட ஒரு பாடலே போதும். அது சபரிமலையில ஐயப்ப சுவாமியை உறங்க வைக்கும் பாடலாக 1920 ஆம் ஆண்டு கம்பங்குடி சுந்தரம் என்பவரால் எழுதப்பட்ட ஹரிவராசனம் பாடலை, 1950களில் கே.ஜே.ஏசுதாஸ் அவர்களின் குரலில் ஒலிப்பதிவு செய்து இசைக்க தொடங்கினர். 1975 ஆம் ஆண்டு தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியான ஸ்வாமி ஐயப்பன் திரைப்படத்தில் தேவராஜ் மாஸ்டர் இசையில் கர்ந்தர்வ குரலில் ஏசுதாஸ் அவர்கள் பாட, இன்று வரை உலகம் முழுக்க இந்த தேன் குரல் ஹரிவராசனம் பரவிக்கிடக்கிறது.

K. J. Yesudas
K.J.Yesudas

தன் தந்தையிடம் இசை பயிற்சியை தொடங்கிய இவர், ஆர்.எல்.வி மியூசிக் அகாடமியில் கர்நாடக இசையில் புலமை பெற்று, ஐம்பதாயிரம் பாடல்களுக்கு மேல் கருப்பு வெள்ளை காலம் தொட்டு டிஜிட்டல் காலம் வரை பாடி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறார். மலையாள திரைப்படங்களில் பாடிவந்த இவர், இயக்குனர் கே. பாலசந்தர் அவர்களின் பொம்மை திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரைப்பாடகராக பிரபலம் ஆனார்.

அன்று முதல் இன்று வரை இவர் குரல் தமிழ் ரசிகர்களின் மனதை வசீகரித்துக் கொண்டே இருக்கிறது. இவருடைய ‘நீயும் பொம்மை நானும் பொம்மை’ பாடல் கிட்டதட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு மூடர் கூடம் திரைப்படத்துக்காக Remix செய்யப்பட்ட போது, இவருடைய மகன் விஜய் ஏசுதாஸ் தான் முதலில் பாட வேண்டும் என்று அணுகினர். அப்போது விஜய் ஏசுதாஸ், இந்த பாடல் ஏசுதாஸ் அவர்களைத் தவிர வேறு யாரும் மீட்டுருவாக்க முடியாது என்று கூறி அவரையே மீண்டும் பாட கேட்டு Remix செய்தனர்.

இப்படி கே. ஜே. ஏசுதாஸ் அவர்களோட குரலில் வெளிவந்த சிறந்த பாடல்களைத் தரவரிசை எல்லாம் செய்ய முடியாதுங்க. அதுனால, மக்கள் திலகம், நடிகர் திலகம், சூப்பர்ஸ்டார், உலகநாயகன்-னு தமிழ் திரை நாயகர்களுக்கு பாடிய பாடல், கவியரசர் கண்ணதாசன் அவர்களோட நிறைவு பாடல், மெல்லிசை மன்னர், இசைஞானின்னு எல்லா ஜாம்பவான்களுடனும் ஒன்றிணைந்து இவர் பணியாற்றிய பாடல்கள்ல இருந்து மறக்க முடியாத, தவிர்க்க முடியாத 15 பாடல்கள் இங்கே:

விழியே கதை எழுது – உரிமைக்குரல்

மலரே குறிஞ்சி மலரே – டாக்டர் சிவா

மீன் கொடி தேரில் – கரும்பு வில்

ஏதோ நினைவுகள் – அகல் விளக்கு

உன் பார்வையில் ஓராயிரம் – அம்மன் கோயில் கிழக்காலே

பூவே பூச்சூடவா – பூவே பூச்சூடவா

தண்ணீ தொட்டி – சிந்து பைரவி

ராஜ ராஜ சோழன் நான் – ரெட்டை வால் குருவி

தூங்காத விழிகள் ரெண்டு – அக்னி நட்சத்திரம்

பூவே செம்பூவே – சொல்ல துடிக்குது மனசு

அகரம் இப்போ சிகரமாச்சு – சிகரம்

காட்டுக்குயிலே – தளபதி

அம்மா என்றழைக்காத – மன்னன்

இள நெஞ்சே வா – வண்ண வண்ண பூக்கள்

பச்சை கிளிகள் – இந்தியன்

கே.ஜே.ஏசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம் இருவரும் இணைந்து பாடிய “காட்டு குயிலு” பாட்டு இப்போ வரைக்கும் நட்புக்கு எடுத்துக்காட்டு. தெய்வீகக் குரலுக்கு சொந்தகாரர் கே.ஜே.ஏசுதாஸ் அவர்களின் எல்லா பாடல்களும், என்றென்றும் இசை ரசிகர்களின் நெஞ்சில் ஒலித்துக் கொண்டிருக்கும் என்பதே உண்மை.

கே. ஜே. ஏசுதாஸ் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லும் சூரியன் FM என்றென்றும் அவர் இசையோடு ஒலித்துக்கொண்டே இருக்கும்.

Article by RJ Suba