Specials Stories

Modern கவிஞர் மதன் கார்க்கி

தமிழ் சினிமாவின் பல சூப்பர்ஹிட் பாடல்களை எழுதிய பாடலாசிரியர் மதன் கார்க்கி அவர்கள் இன்று தனது 41-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 600-க்கும் மேற்பட்ட சினிமா பாடல்களை எழுதியுள்ள இவர், தனது தனித்துவமான நவீன வரிகளால் மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

2009-ஆம் ஆண்டு ‘கண்டேன் காதலை’ திரைப்படத்தில் இடம்பெற்ற “ஓடோடி போறேன்” பாடல் தான் கார்க்கி எழுதிய முதல் சினிமா பாடல். எந்திரன், எங்கேயும் காதல், கோ, 7ஆம் அறிவு போன்ற திரைப்படங்களுக்காக இவர் எழுதிய பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் காலங்களை தாண்டி கொண்டாடும் சூப்பர்ஹிட் பாடல்களாக அமைந்தது. தமிழ் மட்டுமின்றி உலகின் பல்வேறு மொழிகளில் பாடல்கள் எழுதுவதில் கார்க்கி ஒரு வித்தகர் என்றே சொல்லலாம்.

நண்பன் படத்தில் இவர் எழுதிய ‘அஸ்க லஸ்க’ பாடலில் 16 மொழிகளை கொண்டு வரிகள் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி 7ஆம் அறிவு திரைப்படத்தில் “The Rise of Damo” பாடலை சீனாவின் மாண்டரின் மொழியில் கார்க்கி எழுதியிருப்பார். தமிழ் சினிமாவின் முதல் Palindrome (இருவழியொக்கும்) பாடலை எழுதியதும் கார்க்கி தான். விநோதன் திரைப்படத்தில் அமைந்த அந்த Palindrome பாடலை கீழே காணுங்கள்.

தான் ஒரு பொறியாளர் என்பதாலேயோ என்னவோ, தனது பாடல் வரிகளில் நவீன தொழில்நுட்ப/ பொறியியல் சம்மந்தமான வார்த்தைகளை கார்க்கி அதிகம் உபயோகிப்பார். இவர் எழுதிய Boom Boom ரோபோ டா, Selfie புள்ள, இரும்பிலே ஒரு இதயம், Google Google, இந்திரலோகத்து சுந்தரியே, ராஜாலி போன்ற பாடல்களில் தொழில்நுட்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். கோலிவுட்டில் Modern வரிகள் தேவை என்றாலே இயக்குனர்களுக்கு முதலில் உதிக்கும் பெயர் கார்க்கியின் பெயர் தான்.

பாடல்கள் எழுதுவது மட்டுமின்றி திரைப்படங்களுக்கு வசனம் எழுதுவதிலும் மதன் கார்க்கி வல்லவர். எந்திரன், நண்பன், பாகுபலி, 2.O, தி லைன் கிங் (தமிழ் வசனம்) ஆகிய சூப்பர்ஹிட் படங்களுக்கு சூப்பரான வசனங்களை எழுதியது கார்க்கி தான். குறிப்பாக பாகுபலி திரைப்படத்தில் காலகேயர்கள் பேசும் கிளிக்கி மொழியை உருவாக்கியதே இவர் தான். உலக வரலாற்றில் முதல் முறையாக ஒரு இந்திய திரைப்படத்திற்காக புது மொழி உருவாக்கம் செய்யப்பட்டது பாகுபலிக்காக தான்.

மதன் கார்க்கி உருவாகியுள்ள கிளிக்கி மொழியில் 750 வார்த்தைகளும் 40 இலக்கண விதிகளும் உள்ளது. பாடலாசிரியர், வசனகர்த்தா, மொழியியலாளர் என கலை மற்றும் இலக்கியத்திற்க்காக இவரளித்துள்ள பங்கீடு பாராட்டுக்குரியது. மேலும் பல எண்ணற்ற பாடல்களும், திரைப்பட வசனங்களும், புதுமொழிச் சொற்களும் மதன் கார்க்கியின் பேனாவிலிருந்து பிறக்க வேண்டுமென்பதே கலையுலக ரசிகர்களின் ஆசை.

Modern கவிஞர் மதன் கார்கி அவர்களுக்கு சூரியன் FM சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.